full screen background image

“பொற்கால ஆட்சியை நடத்துகிறார் முதல்வர் ஸ்டாலின்” – நடிகர் வடிவேலு பாராட்டு

“பொற்கால ஆட்சியை நடத்துகிறார் முதல்வர் ஸ்டாலின்” – நடிகர் வடிவேலு பாராட்டு

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகரான வடிவேலு இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்து அவரிடத்தில் கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடையாக 5 லட்சம் ரூபாயை அளித்தார்.

அதன் பின்னர் நிருபர்களிடத்தில் வடிவேலு பேசும்போது, “இன்றைக்கு முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது சந்தோசமாக இருந்தது. மரியாதை நிமித்தமாக அவரைச் சந்தித்தேன். எளிமையாக, குடும்பத்தில் இருக்கும் ஒருத்தர் மாதிரி பேசினார் முதல்வர்.

முதலமைச்சர் நிவாரண நிதிக்காக 5 லட்சம் ரூபாயை அளித்துள்ளேன். உலகமே உற்றுநோக்கும்விதத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தி இருக்கிறார். அவர் அப்படி செயல்படுவது, மெய்சிலிர்க்க வைக்கிறது.

ஆட்சியமைத்து ஒரு மாதத்திலேயே உலகமே உற்றுநோக்கும் வகையில் கரோனா தொற்றை முதல்வர் கட்டுப்படுத்தியுள்ளார். மக்களுக்கு உண்மையில் மெய்சிலிர்க்கிறது. அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என மக்களைக் கெஞ்சிக் கேட்டு, மக்களைத் தன்வசப்படுத்தி அழகாகச் செய்தார். யார் மனதும் புண்படாமல், அவர்களே ஆர்வமாக வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் வகையில் செய்தது, எங்களுக்குப் பெரும் நெகிழ்ச்சியாக இருந்தது.

வீடு வீடாகக் காய்கறி வழங்கியது உட்பட பல விசயங்களால் பெண்கள் சந்தோஷமாக இருக்கின்றனர். பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் என, ஒவ்வொரு திட்டமாக நிறைவேற்றி வருவது, உண்மையில் மக்களுக்கு இதுவொரு பொற்கால ஆட்சி என நினைக்கிறேன்.

சிலர் இப்போதும் முகக் கவசம் அணியாமல் இருக்கிறார்கள். நான் இரண்டு தடுப்பூசியும் போட்டுவிட்டேன். இதற்காக நாற்பது ஊசி போடச் சொன்னாலும் போடுவேன். மக்களைக் கெஞ்சி கேட்கிறேன்.. தயவு செய்து தடுப்பூசி போடுங்க. அரசுக்கு ஒத்துழைப்பு கொடுங்க…” என்றார்.

“இனிமேல் உங்களை சினிமாவில் பார்க்கலாமா..?” என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “நல்லதே நடக்கும்” என்றார் வடிவேலு.

“திரையுலகம், ஓடிடி தளம் என மாற்றங்களைச் சந்தித்துள்ளதே?” என்று கேட்டதற்கு, “ஆமாம், அடுத்தடுத்து போய்க் கொண்டிருக்கிறது. சினிமாவிலும் வாரிசுகள் என வரிசையாகப் போய்க்கொண்டிருக்கிறது. இனி ஓடிடி ஒரு குட்டி போடும். காலத்துக்கேற்றவாறு நாமும் நடிக்க வேண்டியதுதான்” என்றார் வடிவேலு.

ஓடிடியில் நீங்கள் நடிப்பதாகச் செய்திகள் வருகிறதே?” என்று கேட்டதற்கு, அது பற்றி நிறைய பேச்சுவார்த்தையில் இருக்கிறது. திரைப்படங்களும் இருக்கின்றன. நல்லதே நடக்கும்.” என்றார் வடிவேலு.

கொங்கு மண்டலத்தைக் கொங்கு நாடாகப் பிரிக்க வேண்டும் எனப் பேச்சு உள்ளதே?” என்று கேட்டதற்கு, “ராம்நாடு, ஒரத்தநாடு என இருக்கிறது. இவ்வளவு நாட்டையும் பிரிக்க முடியுமா? அதெல்லாம் எதுக்கு பாவம். நன்றாக இருக்கும் தமிழகத்தை எதற்குப் பிரிக்க வேண்டும்? அரசியல் பேசவில்லை, அது வேண்டாம். இவற்றையெல்லாம் கேட்கும்போது தலை சுற்றுகிறது…” என்றார் வடிவேலு.

பொதுவாக 10 லட்சம் ரூபாய்க்கு மேல் நன்கொடை கொடுத்தால் மட்டுமே அவர்களை முதல்வர் நேரில் சந்திக்கிறார். ஆனால் 5 லட்சம் ரூபாய் கொடுத்த வடிவேலுவுக்கு முதல்வர் தன்னைச் சந்திக்க அனுமதி கொடுத்தது ஆச்சரியத்தை அளிக்கிறது.

Our Score