‘மிக மிக அவசரம்’ படத்திற்குப் பெருமை சேர்த்த தமிழக அரசின் புதிய அரசாணை..!

‘மிக மிக அவசரம்’ படத்திற்குப் பெருமை சேர்த்த தமிழக அரசின் புதிய அரசாணை..!

தமிழகக் காவல்துறையின் இயக்குநரான ஜே.கே.திரிபாதி இன்று வெளியிட்ட ஒரு அரசாணையில் முதல்வர் உள்ளிட்ட மிக முக்கியப் பிரமுகர்கள் செல்லும் வழிகளில் பெண் காவலர்களை பாதுகாப்புக்காக நிற்க வைக்க வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளார்.

இந்தக் கருத்தை முன் வைத்து 2019-ம் ஆண்டில் மிக மிக அவசரம்’ என்ற தமிழ்த் திரைப்படம் வெளிவந்தது. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முதன்முதலாக இயக்கியிருந்த இந்தப் படம், ஒரு பெண் காவலர் கொளுத்தும் வெயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும்போது சந்திக்கும் சிரமங்களை எடுத்து வைத்தது.

இந்தப் படம் பல பெண் காவலர்களையும், காவல்துறை உயரதிகாரிகளையும் சிந்திக்க வைத்திருந்தது. அந்த சிந்தனையோட்டத்தின் விளைவாகத்தான் இன்றைக்கு இப்படியொரு அரசாணை வெளிவந்திருக்கிறது என்று இந்தப் படத்தை இயக்கிய இயக்குநர் சுரேஷ் காமாட்சிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் வந்து குவிந்திருக்கின்றன.

இதையொட்டி இயக்குநர் சுரேஷ் காமாட்சி இன்றைக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கை இதுதான் :

“பெண் போலீசாரின் பெருந்துன்பங்களில் ஒன்று பிரபலங்கள் வரும்போது பாதுகாப்பிற்காக சாலைகளில் நிற்பது…

அதிலென்ன இருக்கிறது என சாதாரணமாகக் கடந்து போகும்போது… ஒரு சின்ன சிக்கல் எவ்வளவு பெரிய வலியையும், அவஸ்தையையும் தருகிறது என்பதை மிக மிக அவசரம்’ படத்தில் சொல்லியிருந்தோம்.

ரொம்ப சின்ன கதைக் கருதான். ஆனால் அதன் பின்னிருந்த அழுத்தமான வலி பெரும் வெற்றியைத் தந்தது.

திரையரங்கில் ஓடியதைவிட, இன்று இந்த அறிவிப்பால் உண்மையாகவே பெருமை கொள்கிறேன். மகிழ்கிறேன்.

பெண் போலீசார் சாலையோர பாதுகாப்பில் ஈடுபட வேண்டாம் என அறிவித்திருக்கும் தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும்… டி.ஜி.பி. அவர்களுக்கும் எனது மனமுவந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படைப்பிற்கு கதை எழுதிய ஜெகன்னாத், நடித்திருந்த நடிகை பிரியங்கா, அரிஷ்குமார், அண்ணன் சீமான், அண்ணன் சேரன் படத்தை வெளியிட்ட லிப்ரா புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் ரவீந்தர் சந்திரசேகரன் அவர்களுக்கும் இணைந்து தயாரித்த சகோதரர் குங்பூ ஆறுமுகம், ஒளிப்பதிவாளர் பாலபரணி, படத் தொகுப்பாளர் சுதர்சன், மக்கள் தொடர்பாளர் ஜான் ஆகிய அனைவருக்கும் எனது நன்றிகள்.

ஒரு படைப்பு என்பது பொழுதுபோக்குக்காக மட்டுமில்லாமல், அதையும் தாண்டி சமூகத்தில் என்ன மாற்றத்தை உருவாக்குகிறது என்பதும் மிக முக்கியம். அந்த வகையில் இந்த மிக மிக அவசரம்’ படத்தினை எடுத்தற்காக உண்மையாகவே நான் இன்றைக்குப் பெருமை கொள்கிறேன்…” என்று குறிப்பிட்டுள்ளார் தயாரிப்பாளரும், இயக்குநருமான சுரேஷ் காமாட்சி.

Our Score