ஆந்திரா சினிமாவில் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த என்.டி.ராமராவ் அந்த மாநிலத்தில் மூன்று முறை முதலமைச்சராகவும் பதவி வகித்தவர். தேசிய அளவில் புகழ் பெற்று காங்கிரஸூக்கு மாற்றான முதல் மத்திய அமைச்சரவையை நிர்மாணித்ததில் முக்கிய பங்களித்தவர் அவர்தான்.
1996-ம் ஆண்டு தனது 72-வயது வயதில் இறந்த என்.டி.ராமாராவுக்கு ஆந்திராவைச் சேர்ந்த பல தரப்பட்ட பிரமுகர்களும் ‘பாரத ரத்னா’ விருதினை வழங்க வேண்டும் என்று தொடர்ச்சியாய் குரல் கொடுத்து வருகின்றனர். ஆந்திர திரையுலகமே ஒன்று திரண்டு கோரிக்கையும் வைத்துவிட்டது. ஆனாலும் இன்றுவரையிலும் எந்தவொரு மத்திய அரசும் இந்த விருதினை என்.டி.ராமாராவுக்கு இந்த விருதினை வழங்கவில்லை.
இது குறித்து நடிகர் பாலகிருஷ்ணா சமீபத்தில் அளித்திருக்கும் பேட்டியில், “எனது அப்பா ஒருபோதும் அதிகாரத்துக்காகவோ, புகழுக்காகவோ, விருதுகளுக்காகவோ ஏங்கியவரில்லை. எனது அப்பாவுக்கு ‘பாரத ரத்னா’ விருதினை அறிவித்தால்.. யார் அறிவிக்கிறார்களோ.. அவர்கள் என் அப்பாவின் மீது கொண்டிருக்கும் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும். ஆனால், அவர் மக்களிடம் பெற்றிருக்கும் அன்போடு ஒப்பிடுகையில் இந்த பாரத ரத்னாவெல்லாம் ஒன்றுமேயில்லை..” என்று சொல்லியிருக்கிறார்.