ஒரு காலத்தில் தமிழ்ப் படங்களைத்தான் மற்றைய தென்னகத்தின் மூன்று மொழிகளிலும் ரீமேக் செய்வார்கள். அப்படி நல்ல கதையம்சத்துடன் தென்னகத்தின் மற்றைய மூன்று மாநிலங்களுக்கும் பொருந்தக் கூடிய அளவுக்கான கதைகளைத் தயார் செய்தார்கள் தமிழ்த் திரைப்பட கதாசிரியர்கள்.
ஆனால் இப்போது தமிழிலேயே மற்றைய மொழித் திரைப்படங்களை அதிகமாக மொழி மாற்றம் செய்து வருகிறார்கள். இந்தத் தலைகீழ் மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்று தெரியவில்லை.
இந்தாண்டின் துவக்கத்தில் சிபிராஜ், நந்திதா ஸ்வேதா நடிப்பில் வெளியான ‘கபடதாரி’ திரைப்படம் கன்னடத்தில் வெளியான ‘காவலுதூரி’ படத்தின் ரீமேக்குதான்.
இதேபோல் கீர்த்தி பாண்டியன், அருண் பாண்டியன் அப்பா, மகளாக நடித்திருந்த ‘அன்பிற்கினியாள்’ திரைப்படம் மலையாள திரைப்படமான ‘ஹெலன்’ படத்தின் ரீமேக்காகும்.
மாதவன் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஷிவதா நாயர் நடித்த ‘மாறா’ திரைப்படம் மலையாளத்தில் வெளியான ‘சார்லி’ படத்தின் ரீமேக்குதான்.
தமிழில் வெளிவந்த ‘கேர் ஆஃப் காதல்’ என்ற திரைப்படம் ‘கேர் ஆஃப் கஞ்சிராபாளையம்’ என்ற தெலுங்கு படத்தின் ரீமேக்.
தற்போதும் நிறைய தமிழ்ப் படங்கள் பிற மொழிப் படங்களில் இருந்து ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.
ஹிந்தியில் ‘அந்தாதூன்’ என்ற வெளி வந்த திரைப்படம் தமிழில் தியாகராஜனின் இயக்கத்தில் நடிகர் பிரசாந்தின் நடிப்பில் ‘அந்தகன்’ என்ற பெயரில் தயாராகி வருகிறது.
ஹிந்தியில் வெளியான ‘குயின்’ திரைப்படம் தமிழில் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் காஜல் அகர்வாலின் நடிப்பில் ‘பாரிஸ் பாரிஸ்’ என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது.
கேரள மாநில அரசின் 3 விருதுகளை வென்ற ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ என்ற படம் ‘கூகுள் குட்டப்பன்’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் ஆகிறது. இந்தப் படத்தை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்திருக்கிறார். சபரி-சரவணன் என்ற இரட்டை இயக்குநர்கள் இயக்குகிறார்கள்.
மலையாளத்தில் இயக்குநர் ஜியோ பேபி இயக்கத்தில் வெளியான ‘தி கிரேட் இந்தியன்’ கிச்சன் திரைப்படமும் தமிழில் ரீமேக் ஆகிறது. இயக்குநர் ஆர்.கண்ணன் தமிழில் இதைத் தயாரித்து இயக்கி வருகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
கன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி நடித்திருந்த ‘முப்டி’ என்ற திரைப்படம் தமிழில் ‘பத்து தல’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. கிருஷ்ணா இயக்கத்தில் இந்தப் படத்தில் சிம்புவும், கவுதம் கார்த்திக்கும் இணைந்து நடிக்கின்றனர்.
கன்னடத்தில் வெளியான ‘பெல்பாட்டம்’ என்ற திரைப்படமும் அதே பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்தப் படத்தில் கிருஷ்ணாவும், மகிமா நம்பியாரும் நடிக்கின்றனர். சத்யசிவா இந்தப் படத்தை இயக்குகிறார்.
‘பீர்பால்’ என்ற கன்னடப் படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் சாந்தனு கதையின் நாயகனாக நடிக்கிறார்.
‘ஜோஸப்’ என்ற மலையாளத் திரைப்படம் தமிழில் ‘விசித்திரன்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. மலையாளத்தில் ஜிஜோ ஜோஸப் நடித்திருந்த முதன்மை கதாபாத்திரத்தில் தமிழில் ஆர்.கே.சுரேஷ் நடித்திருக்கிறார். மலையாளத்தில் இப்படத்தை இயக்கிய பத்மகுமாரே தமிழிலும் இந்தப் படத்தை இயக்குகிறார்.
நயன்தாரா நடித்து முடித்துள்ள ‘நெற்றிக்கண்’ என்ற திரைப்படம் ‘பிளைண்ட்’ என்ற தென்கொரியப் படத்தின் முறைப்படி அனுமதி பெற்ற ரீமேக் படமாகும்.
இது தவிர, மலையாளத்தில் சென்ற ஆண்டு வெளியாகி பெரும் பாராட்டைப் பெற்ற ‘அய்யப்பனும் கோஷியும்’ திரைப்படமும் தமிழிர் ரீமேக் ஆகவுள்ளது. இந்தப் படத்தில் சிம்புவும், விஜய் சேதுபதியும் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூடவே ‘திரிஷ்யம்-2’ படமும் கமல்ஹாசன், மீனா நடிப்பில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் மலையாளத்தில் வெளியான ‘டிரைவிங் லைசென்ஸ்’, ‘தி பிரிஸ்ட்’ ஆகிய படங்களும் தமிழில் ரீமேக் செய்யப்படவுள்ளன. இதேபோல் இந்தாண்டு விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான தெலுங்கு திரைப்படமான ‘உப்பெனா’வும் தமிழுக்கு வரும் என்று உறுதியாய் தெரிகிறது.
எப்படியிருந்தாலும் மற்றைய மொழிகளில் இருந்து ரீமேக் செய்யப்பட்ட படங்களில் இதுவரையிலும் திருஷ்யம் படம் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மற்றைய மொழிகளில் இருந்து எதை மாற்றினாலும் தமிழ் மண்ணுக்கே உரித்தானவகையில் கதை, திரைக்கதையில் கொஞ்சம் மாற்றம் செய்தால்தான் அந்தப் படம் ஜெயிக்கும். இதை மனதில் வைத்து இயக்குநர்கள் செயல்பட வேண்டும்.