“வாலு’ படத்திற்காக நடிகர் விஜய் பண உதவி செய்யவில்லை..” – டி.ராஜேந்தர் பேட்டி..!

“வாலு’ படத்திற்காக நடிகர் விஜய் பண உதவி செய்யவில்லை..” – டி.ராஜேந்தர் பேட்டி..!

அப்பாடா என்று பெருமூச்சு விட்டிருக்கிறார்கள் சிம்புவின் ரசிகர்கள்..!

‘வாலு’ படம் வருமா வராதா என்கிற செய்தியெல்லாம் இப்போது பின்னுக்குப் போய், ‘வாலு’ படத்திற்கு எதிராக யார், யாரெல்லாம் சதி செய்கிறார்கள் என்கிற செய்தியே ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது.

vaalu-movie-poster

நேற்றைக்கு ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படத்தை தமிழகம் முழுவதிலும் வெளியிடும் உதயநிதி ஸ்டாலினை டிவிட்டரில் போட்டு வறுத்தெடுத்தார்கள் சிம்புவின் ரசிகர்கள். அவரால்தான் ‘வாலு’ படத்திற்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்றார்கள் சிம்புவின் ரசிகர்கள். 

“ஏய்யா.. லூஸா நீங்க.. அறிவோட பேச மாட்டீங்களா..? நான் எதுக்கு வாலு படத்துக்கெதிரா சதி செய்யணும்..?” என்று ‘எனக்கெல்லாம் சிம்பு ஒரு ஆளா?’ என்கிற ரீதியில் உதயநிதி ட்வீட் செய்ய.. மீண்டும் போர்க்களமானது டிவிட்டர் தளம். 

இதற்கிடையில் இன்று காலை தனது வீட்டில் பத்திரிகையாளர்களை சந்தித்த ‘வாலு’ படத்தின் விநியோகஸ்தரான டி.ராஜேந்தர் ‘வாலு’ படம் வரும் 14-ம் தேதி ரிலீஸாகவிருப்பதை உறுதி செய்துள்ளார்.

Vaalu press meet - 5

‘வாலு’ என்று பெயர் வைத்தபோதே நான் சொன்னேன், வாலு என்றாலே பிரச்சினைகள் நீளும் என்று.!

அதுபோல எத்தனை எத்தனை தடங்கல்கள் இறுதியில் எல்லாத் தடைகளையும் தாண்டி இந்த ‘வாலு’ திரைப்படம், வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது.

‘வாலு’ படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் உலகம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடுகிறது. தமிழகத்தில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.

எனக்கு நடிகர் விஜய் மீது பெரிய மரியாதை உள்ளது. அவர் நல்ல இதயம் கொண்ட பச்சைத் தமிழர். விஜய் எனது பெரிய ரசிகர் என்பதை அவரது நண்பர்கள் சிலர் மூலம் அறிந்து கொண்டேன். நானும் அவருக்கு ரசிகன்தான்.

சினிமாவைச் சேர்ந்த யாரும் இந்த விஷயத்தில் எனக்கு எந்தவொரு உதவியும் செய்ய முன்வராதபோது, நடிகர் விஜய் தனது மேனேஜர் பிடி செல்வகுமார் மூலமாக ’வாலு’ படத்துக்கு உள்ள சிக்கல்களை கேட்டறிந்தார். அவரது தார்மீக ஆதரவு எங்களுக்கு பெரிய உதவியாக இருந்தது.

எனது மகன் ‘தல’ ரசிகர், அதையெல்லாம் நினைக்காமல் ஒரு சக நடிகனாக ‘வாலு’ பட வெளியீட்டிற்கு விஜய் எனக்கு தார்மீக ஆதரவு அளித்திருக்கிறார். அவருக்கு எனது நன்றி.

பி.டி. செல்வகுமார் மற்றும் கோவையைச் சேர்ந்த காஸ்மோ பிலிம்ஸ் விநியோகர் சிவாவிடம் பேசி ’வாலு’ படம் எந்த சிக்கலுமின்றி வெளியாக உதவி செய்யச் சொன்னார் விஜய்.

அவர்கள் இருவரும் விஜய்க்கும், எங்களுக்குமிடையேயான தூதுவர்களைப் போல. என்னுடன் நேற்று இரவுவரை இருந்து அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க உதவி செய்தனர்.

சிம்பு படத்தை எடுத்ததால்தான் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி கடன் பிரச்சினையில் இருக்கிறார் என்கிறார்கள் அப்படியல்ல.. அவர் அவரது மகனை வைத்தும் 3 படங்களை தயாரித்திருக்கிறார்… அந்தப் படங்களை சரியான நேரத்தில் அவரால் வெளியிட முடியாததால் அந்தப் படங்களுக்காக வாங்கிய கடன் வட்டி, வட்டிக்கு வட்டி என்று குட்டி போட்டு, பெரிய கடன் சுமையாக வளர்ந்திருக்கிறது.

எனது மகன் நடித்த படம் என்பதால் மட்டுமல்ல.. அவன் ஒரு நல்ல நடிகன். அவனது படம் முடங்கக் கூடாது என்கிற எண்ணத்தாலும், 26 கோடிகளுக்கு மேல் கடன் வாங்கி சம்பந்தப்பட்டவர்களுக்கு ‘செட்டில்” செய்து விட்டுத்தான் இந்த ‘வாலு’ படத்தைத் வெளியிடுகிறேன்.

நான் யாரையும் குற்றம் சாட்டவில்லை. இப்போது சினிமா துறை எக்கச்சக்கமாக மாறியுள்ளது. படத்துக்கான மினிமம் கேரண்டி தொகையை தர திரையரங்க உரிமையாளர்கள் தயாராக இல்லை. எனவே விநியோகஸ்தர்கள்தான் அனைத்து பணத்தையும் செலவழிக்க வேண்டியுள்ளது.

அடிக்கடி படங்களை வெளியிடும் விநியோகஸ்தர்களுக்கு, திரையரங்க உரிமையாளர்கள் முன்னுரிமை கொடுப்பது வழக்கம்தான். எனவே அவர்கள் இன்னொரு படத்துக்கு அதிக அரங்குகளை ஒதுக்கியுள்ளனர்.

சென்னையை தவிர மற்ற ஊர்களில் ’வாலு’ படம் பெரிய அரங்குகளில் வெளியாகும் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

ஒரு முறை மலேசியா டிவி நிகழ்ச்சிக்காக விஜய்யின் தாய், தந்தையுடன் மலேசியா சென்றிருந்தபோது அவர்களுடன் ஏற்பட்ட பழக்கம், இ்பபோதுவரையிலும் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இனி வரும் காலங்களிலும் நானும், சிம்புவும் அவர்களுடன் இணைந்து செயல்படுவோம்.

இனிமேல் தொடர்ந்து படங்களை வெளியிடுவேன். புலி படத்தினை வெளியிட பலர் இருக்கிறார்கள். இருந்தாலும்  நானும் வெளியிட ஆவலாக இருக்கிறேன். அதுமட்டுமில்லாமல்,  வேறு நடிகர்கள் நடித்த படங்களையும் சிம்பு சினி ஆர்ட்ஸ் வெளியிடும்..” என்றார்.

‘புலி’ படத்தின் பிரமோஷன் மற்றும் விநியோகத்தில் எங்களது உதவி தேவைப்பட்டாலும் அழைக்காமலேயே ஓடிச் சென்று உதவுவோம்.. அந்த வெற்றியில் பங்கெடுப்போம்..” என்றார் டி.ஆர்.

கூடவே, “வாலு’ படத்திற்கெதிராக சதி செய்தவர்களைப் பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை..” என்று முத்தாய்ப்பாக சொன்னார் டி.ஆர்.

Our Score