செப்டம்பர் மாத வெளியீட்டை நோக்கி வேகமான இறுதிக்கட்ட படப்பிடிப்பிலும் மற்ற வேலைகளிலும் சுழன்று கொண்டிருக்கிறது Thriller / Horror படமான ‘கா கா கா’ திரைப்படம்.
இயக்குனர் மனோன் அவர்கள் சொன்ன குறுகிய நாட்களில் படத்தை எதிர்பார்த்ததைவிட அழகாகவும் தத்ரூபமாகவும் முடித்து கொடுத்திருப்பதை சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருப்பதாக சொல்கிறார் தயாரிப்பாளர் கிரன் பதிகொண்டா.
இந்த பாராட்டைப் பெறுவதற்கு தன் நடிகர்கள் அசோக், கிரன், மேகாஸ்ரீ, சங்கீதா பட், யோகி பாபு, நாசர், ஜெயசுதா மற்றும் பேபி யுவினா பார்கவியும், தொழில் நுட்ப கலைஞர்கள் ஒளிப்பதிவாளர் சரவண நடராஜன், படத்தொகுப்பாளர் சஷிகுமர் மற்றும் அனைவரின் ஒத்துழைப்பே காரணம் என்கிறார் இயக்குநர்.
படப்பிடிப்பின்போது நீச்சல் குளத்தில் குதித்த ஹீரோ அசோக்கிற்கு தன் முகத்தில் அடிபட்டு வெட்டுக் காயம் ஏற்பட்டும் அந்த வலியோடு முழு காட்சியை முடித்து கொடுத்த பிறகே ஆஸ்பத்திரிக்கு சென்றார் என்று மொத்தக் குழுவே ஆச்சரியத்துடன் கூறியது.
படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்னால் ஒரு பெரிய பட்டு போன மரமும், அதில் காக்கா உட்கார்ந்திருப்பது போலவும் கிராஃபிக்ஸில் உருவாக்க நினைத்துள்ளனர், ஆனால் கடைசி நேரத்தில் ஏதேச்சையாக அதே போன்ற ஒரு மரம் கிடைக்க அதை கிரேன் மூலமாக வேரோடு பிடுங்கி வந்து படப்பிடிப்பு தளத்தில் நட்டுள்ளனர்.
மரம் நட்டு ஒரே நாளுக்குள் ஆச்சரியத்தை உண்டாக்கும் விதத்தில் உண்மையாகவே அந்த மரத்தில் ஒரு காக்கா கூடு கட்டி அமர்ந்ததாம்.
இதனால் எந்த ஒரு தடங்களும் இல்லாமல் தத்ரூபமாக காட்சிகளை எடுத்து முடித்துள்ளனர், இந்த நிகழ்வு சாட்சியாக குழுவிடம் வீடியோ காட்சியும் உள்ளதாம் படத்தின் தலைப்பிற்கேற்ப காக்கா தங்களுக்கு உதவியதாக குழுவினர் சந்தோஷப்பட்டனர்.
இது மட்டுமில்லாமல் படப்பிடிப்பு நடந்த வீட்டில் பல அமானுஷ்யமான நிகழ்வுகள் நடந்துள்ளதாம், குழுவில் பலர் இதனால் பயந்ததாகவும், நேரடியாக அனுபவப்பட்டதாகவும் திகிலுடன் கூறினர்.
படப்பிடிப்பு மொத்தமும் முடிவடையும் தருவாயில்தான் அந்த ஊரில் உள்ள சிலர், அது உண்மையாகவே பேய் வீடு என கூறியதாக மொத்த குழுவும் உயிர் தப்பிய பெருமூச்சுடன் சொல்கிறார்கள்.