full screen background image

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்

தென்னிந்திய சினிமாவின் பழம்பெரும் நடிகையான சௌகார் ஜானகி இன்று மதியம் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 95.

1950ம் ஆண்டு என்.டி.ராமாராவ் நடித்த தெலுங்கு திரைப்படமான ‘சவுகாரு’ படத்தில் கதாநாயகியாக திரையுலகில் அறிமுகமானதால், ‘சௌகார் ஜானகி’ என அழைக்கப்பட்டார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட பல்வேறு மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

‘இரு கோடுகள்’, ‘உயர்ந்த மனிதன்’, ‘பாமா விஜயம்’, ‘எதிர் நீச்சல்’, ‘புதிய பறவை’ உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தவர்.

சினிமாவுக்கு வருவதற்கு முன்னதாக சுமார் 300-க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார் சௌகார் ஜானகி.

கடந்த 2020-ஆம் ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளியான ‘பிஸ்கோத்’ படம்தான் சௌகார் ஜானகி நடித்த கடைசி (400-ஆவது) திரைப்படம்.

ஆந்திராவின் மறைந்த முதலமைச்சர் என்.டி.ராமாராவ், மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர்கள் MGR, கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய 4 முதலமைச்சர்களுடன் நடித்த பெருமைக்குரியவர் சௌகார் ஜானகி.

நாடகம் மற்றும் சினிமாவில் அவரது கலைச் சேவையை பாராட்டி இந்திய அரசு கடந்த 2022-இல் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.

சௌகார் ஜானகிக்கு யக்னா பிரபா கோட்டி, வெங்கடரமண சங்கரமஞ்சி, ஆகிய 2 மகள்களும், சசி ராவ் என்ற மகனும் உள்ளனர்.

சௌகர் ஜானகி நடித்திருந்த புகழ்பெற்ற பாடல்களான ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே’ பாடலும், `நீரோடும் வைகையிலே’, `கண் போன போக்கிலே கால் போகலாமா’, `புன்னகை மன்னன் பூவிழி கண்ணன்’, ‘பார்த்த நியாபகம் இல்லையோ’ போன்றவைகள் இப்போதும் காலம் கடந்தும் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன.

1985-ல் அப்போதைய தமிழக முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் உடல் நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த பொழுது அவரும், சௌகார் ஜானகியும் இணைந்து நடித்த ஒளிவிளக்கு படத்தில் சௌகர் ஜானகி நடித்து பாடிய ‘இறைவா உன் மாளிகையில் என்ற பாடல்’ தமிழகம் முழுவதும் பட்டி தொட்டியெங்கும் பாடப்பட்டு சௌகாரின் புகழ் மேலும் உயர்ந்தது.

வயது முதிர்வு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் சௌகார் ஜானகி.

ஒரு வார காலமாக தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனளிக்காமல் இன்று மதியம் அவரது உயிர் பிரிந்தது.

தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகைகளுக்கு ஒரு அடையாளமாக இருந்த சௌகார் ஜானகியின் மறைவுக்கு திரை உலகப் பிரமுகர்கள் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

 

Our Score