full screen background image

ஜெயலலிதாவிற்கும், செளகார் ஜானகிக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்..!

ஜெயலலிதாவிற்கும், செளகார் ஜானகிக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்..!

தமிழ்த் திரையுலகின் மூத்த நடிகையான செளகார் ஜானகிக்கும், ‘கலைச்செல்வி’ ஜெயலலிதாவிற்கும் இடையில் ஏதோ மோதல் நடந்திருக்கிறது. இதனால் மிக நீண்ட காலமாக அவர்களிடையே பேச்சுவார்த்தை இல்லை என்ற தகவல் தமிழ்த் திரையுலகத்தில் பரவலாகப் பேசப்பட்ட விவகாரம்.

ஆனால், இது பற்றி ஜெயலலிதா உயிருடன் இருந்தவரையிலும் செளகார் ஜானகி வெளியில் சொல்லவேயில்லை. ஆனால் இது உண்மைதான் என்பதை செளகார் ஜானகியே சொல்லியிருக்கிறார்.

எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது பிலிம் சேம்பர் தியேட்டரில் சினிமா துறை சம்பந்தமான ஒரு விழா நடைபெற்றது. அந்த விழாவில் பல்வேறு மாநில திரையுலக பிரபலங்களும் கலந்து கொள்வதால் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் பொறுப்பினை யாரிடம் ஒப்படைப்பது என்று அப்போது பிலிம் சேம்பரில் இருந்த நிர்வாகிகள் யோசித்தனர்.

யாராவது ஒரு நடிகை.. ஆங்கிலத்தில் பேசும் திறமை மிக்கவராக இருக்க வேண்டும் என்று தேடியபோது அவர்களிடத்தில் முதலில் ஞாபகத்திற்கு வந்தவர் செளகார் ஜானகிதான்.

ஏனெனில், அப்போதைய தமிழ்த் திரை நடிகைகளில் ஆங்கிலத்தை அழகாக உச்சரிப்பவர்கள் இரண்டே பேர்தான் ஒருவர் செளகார் ஜானகி. மற்றவர் ஜெ.ஜெயலலிதா.

பிலிம் சேம்பர் நிர்வாகிகள் செளகார் ஜானகியைத் தொடர்பு கொண்டு “இந்த விழாவினை நீங்கள்தான் தொகுத்து வழங்க வேண்டும்…” என்று கேட்டபோது செளகாரும் சந்தோஷத்துடன் ஒத்துக் கொண்டார்.

அதே விழாவில் நடிகை ஜெயலலிதாவும் கலந்து கொள்வதாக இருந்தார். அவருக்கும் இந்த நிகழ்ச்சியின் மேடையில் பங்கெடுக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. அதனால், இதனை அவர் எம்.ஜி.ஆரிடம் தெரியப்படுத்தியிருக்கிறார்.

உடனேயே முதல்வர் எம்.ஜி.ஆரும் பிலிம் சேம்பருக்கு போன் செய்து இதைச் சொல்ல.. “நாங்கள் ஏற்கெனவே செளகார் அம்மாவிடம் சொல்லிவிட்டோமே..?” என்று சொல்லியிருக்கிறார்கள். “அதனால் என்ன.. பாதி நேரம் செளகாரை பேசச் சொல்லுங்க.. அடுத்த பாதியை ஜெயலலிதாவை தொகுத்து வழங்கச் சொல்லுங்கள்…” என்று ஆணையிடுவதுபோல சொல்லிவிட்டு எம்.ஜி.ஆர் போனை வைத்துவிட்டார்.

முதலமைச்சரே சொல்லிவிட்டார் என்பதால் பிலிம் சேம்பர் நிர்வாகிகள் இதனை ஏற்றுக் கொண்டாலும், செளகார் ஜானகியிடம் இதை எப்படி சொல்வது என்பது புரியாமல் தவித்திருக்கிறார்கள்.

நிகழ்ச்சி நடந்த அந்தத் தினத்தன்று ஆர்வத்துடன் பேசுவதற்காக வந்திருந்த செளகாரிடம் எம்.ஜி.ஆர் சொன்னதை சேம்பர் நிர்வாகிகள் தெரிவிக்க செளகார் ஜானகி மிகவும் கோபப்பட்டிருக்கிறார். “எதுக்கு பாதி, பாதியா பேசணும்.. ஜெயலலிதாவையே முழுசா பேச வைங்க…” என்று சொல்லிவிட்டு நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே கிளம்பிச் சென்றுவிட்டார்.

அவரை எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அவர் கேட்காமல் சென்றுவிட்டதால் அந்த நிகழ்ச்சி முழுவதையும் ஜெயலலிதாதான் மேடையில் தொகுத்து வழங்கினார்.

இதற்குப் பிறகு அவர்கள் இருவருக்குமிடையில் பேச்சுவார்த்தையே இல்லாமல் போய்விட்டதாம். கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் கழித்து ஜெயா தொலைக்காட்சியில் ‘திரும்பிப் பார்க்கிறேன்’ என்னும் நிகழ்ச்சியை இயக்குநர் கா.பரத் தயாரித்து வழங்கியபோது அந்த நிகழ்ச்சியில் ஒரு வாரம் செளகார் ஜானகியும் தனது கடந்த கால சினிமா வாழ்க்கையைப் பற்றிப் பேசினார்.

அப்படி அவர் பேசிய முதல் நாள் நிகழ்ச்சி ஒளிபரப்பான உடனேயே ஜெயலலிதா செளகார் ஜானகிக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினாராம். அந்தக் கடிதத்தில் செளகார் பேட்டியில் குறிப்பிட்டிருந்தவைகளைச் சுட்டிக் காட்டியிருந்த ஜெயலலிதா, “தன்னையும், தனது அம்மாவையும் மறக்காமல் குறிப்பிட்டிருந்தமைக்கு” நன்றி தெரிவித்திருந்தாராம்.

இதற்குப் பின்புதான் செளகார் ஜானகியும், ஜெயலலிதாவும் நேரில் சந்தித்துக் கொண்டார்கள். ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டுக்கு ஒரு நாள் மதிய விருந்துக்கு செளகாரை அழைத்து கவுரவித்தார் ஜெயலலிதா.

அதன் பின்னர் 2016-ம் ஆண்டில் தான் முதல்வராகப் பொறுப்பேற்ற பின்பு தமிழ்த் திரையுலகத்தின் மூத்த நடிகைகளையெல்லாம் அழைத்து தன் வீட்டில் விருந்து அளித்தபோதும் செளகார் ஜானகியையும் அழைத்துப் பேசினார் ஜெயலலிதா.

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை நடத்திய சினிமா நூற்றாண்டு விழாவிலும் செளகார் ஜானகிக்கு தன் கையால் விருது கொடுத்து மகிழ்ந்தார் ஜெயலலிதா.

‘காலம்தான் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும் சிறந்த மருத்துவர்’ என்று சொல்வது இது போன்ற சம்பவங்களை வைத்துதான்..!

Our Score