தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் விழா, இன்று காலையில் தி.நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் சங்கத்தின் தலைவரான நடிகர் நாசரின் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநரும் நடிகருமான R.சுந்தர்ராஜன் கலந்து கொண்டார். அவர் பேசும்போது, “நான் ஒரு இயக்குநராக இருந்தும் இந்த விழாவை சிறப்பிக்க அழைத்த நடிகர் சங்க தலைவர் நாசருக்கு முதற்கண் நன்றி.
நாசர், நேற்று என்னை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு, ‘நீங்கள் வந்து இந்த விழாவை சிறப்பிக்க வேண்டும். கண்டிப்பாக வர வேண்டும்’ என்றார். ‘நாளை காலை நினைவுபடுத்துங்கள். கண்டிப்பாக வருகிறேன்’ என்று நான் சொன்னேன்.
அதேபோல் இன்று காலையும் தொலைபேசி மூலமாக என்னை மீண்டும் தொடர்பு கொண்டு நினைவுபடுத்தினார். விட்டால், என் வீட்டிற்கு காரை அனுப்பி என்னை அழைத்து வந்திருப்பார் தலைவர் நாசர். அவர் மனதளவில் எப்போதும் நல்ல எண்ணங்களை கொண்டவர். எப்போதும் அவர் நல்லதையே நினைப்பதால் அவருக்கு தமிழ்த் திரையுலகில் நல்ல பெயர் இருக்கிறது. இந்த குணம்தான் அவரை பற்றி எந்தவித கிசுகிசுவும் இதுவரையிலும் வராததற்கு முக்கிய காரணம். தலைவராக இருப்பதற்கு நாசருக்கு எல்லா தகுதியும் உள்ளது…” என்றார்.
விழாவில் நடிகர் சங்க தலைவர் நாசர் பேசும்போது, “அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள், இந்த தீபாவளியை அனைவரும் மாசற்ற தீபாவளியாக கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நடிகர் சங்கத்தில் எங்களுக்கு டீ வேண்டும் என்றால்கூட எங்களுடைய சொந்தக் காசில்தான் நாங்கள் வாங்கி சாப்பிடுகிறோம். அந்த அளவுக்கு நாங்கள் சிக்கனமாக நடிகர் சங்கத்தில் பணியாற்றி வருகிறோம்.
இந்த தீபாவளிக்கும், சென்ற தீபாவளியை போன்று சிறப்பாக அனைவருக்கும் சிறப்பு பரிசு வழங்கப்படுகிறது அதற்கு முக்கிய காரணம் நமது நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, நடிகர் பாபி சிம்ஹா, சூரி ஆகியோர்தான். நாடக நடிகர்கள் பலர் நாங்களும் நிர்வாகத்துடன் இணைந்து தீபாவளி பரிசு வழங்குகிறோம் என்று கூறி எங்களிடம் கோரிக்கை வைத்தனர். அவர்களுக்கும் எனது நன்றிகள்..” என்றார்.
விழாவில் நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் பேசும்போது, “தீபாவளிக்காக அனைவருக்கும் சிறப்பு பரிசு வழங்குவது மகிழ்ச்சியாக உள்ளது. சென்ற வருடம் கொடுத்தது போல் இந்த வருடமும் அனைவருக்கும் தீபாவளி சிறப்பு பரிசு வழங்க உறுதுணையாக இருந்த ராம்ராஜ் நிறுவனத்தினருக்கு நன்றி.
பொருளாளர் கார்த்தி, இயக்குநர் சுந்தர்.சி, நடிகை குஷ்பூ, நடிகர் பாபி சிம்ஹா, நடிகர் சூரி ஆகியோரும் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி சிறப்பு பரிசு வழங்க உறுதுணையாக இருந்தனர். ராம்ராஜ் நிறுவனத்தினரின் உதவியால்தான் நாங்கள் இப்போது நடிகர் சங்கத்தின் 3000 உறுப்பினர்களுக்கு வேஷ்டி, சட்டையை வழங்கியுள்ளோம்.
நாங்கள் ஸ்டார் கிரிக்கெட்டில் ஊழல் செய்துள்ளோம் என்று கூறுபவர்கள் எங்கள் மீது தேவையில்லாமல் வீண் பழி சுமத்தி பணத்தை செலவழிக்க வேண்டாம். ஸ்டார் கிரிக்கெட் பற்றிய அனைத்து தகவல்களும் நாளைய தினம் நடிகர் சங்கத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும். இதை பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் காணலாம்..” என்றார் பொதுச் செயலாளர் விஷால்.
விழாவில் நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன் பேசும்போது, “நமது நடிகர் சங்கத்தின் கட்டிடம் கட்ட நிதி திரட்டும் பொருட்டு, விஷாலும், கார்த்தியும் இணைந்து நடிக்கும் படம் எப்போது துவங்கும் என்று அனைவரும் கேள்வி எழுப்புகிறார்கள்.
அவர்கள் இருவரும் சேர்ந்து நடித்துதான் நடிகர் சங்கத்துக்கு நிதி அளிக்க வேண்டும் என்று இல்லை. அவர்கள் இருவரும் நடிகர் சங்கத்தின் வளர்ச்சி மீது அதிகம் கவனம் செலுத்துபவர்கள். அவர்கள் இருவரும் தனித்தனியாக படத்தில் நடித்து அதில் கிடைக்கும் சம்பளத்தை நடிகர் சங்கத்துக்கு நிதியாக அளித்தால்கூட போதும். அப்படி நடிகர் சங்கம் ஒரு படம் தயாரித்தால் அதில் ஸ்டார் கிரிக்கெட்டில் பங்கேற்றது போன்று நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களான நடிகர்கள் அனைவரும் நடிப்பார்கள்…” என்றார்.
விழாவில் நடிகர் சங்கத்தின் துணைத் தலைவரான கருணாஸ் பேசும்போது, “சென்ற ஆண்டு அனைவருக்கும் தீபாவளி சிறப்பு பரிசு வழங்கியது போன்று இந்த ஆண்டும் வழங்கப்படுவதை நினைத்தால் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. பொது வாழ்க்கை என்று வந்தால் விமர்சனம் வரத்தான் செய்யும். அதில் எது உண்மை என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்…” என்றார் துணை தலைவர் கருணாஸ்.
இந்த விழாவில் மூத்த நடிகர், நடிகைகளான சரஸ்வதி, கமலா, மணி ஐயா, ஜெய் பாலையா, ஜெயராமன், டி.கே.எஸ். நடராஜன் மற்றும் 500-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசாக வேட்டி, சட்டை, சேலை, இனிப்பு வகைகள் வழங்கப்பட்டது.