நடிகர் சூர்யா நடித்த ‘சூரரைப் போற்று’ திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சிறந்த படம், நடிகர், நடிகை என 3 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுப் பட்டியலுக்கு ‘சூரரைப் போற்று’ திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சிறந்த நடிகர் பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு சூர்யா பெயரும், சிறந்த நடிகை பிரிவில் அபர்ணா பாலமுரளி பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்தியத் திரையுலகினர் மத்தியில் கொண்டாடப்பட்ட படம் ‘சூரரைப் போற்று’.
சூர்யாவின் அசுரத்தமான நடிப்பு, நாயகியான அபர்ணா பாலமுரளியின் யதார்த்தமான நடிப்பு, இயக்குநர் சுதா கொங்கராவின் துல்லியமான இயக்கம், ஜி.வி.பிரகாஷின் ஆர்ப்பரிக்கும் இசை, நிக்கத் பொம்மியின் சுத்தமான ஒளிப்பதிவு என அனைத்து பிரிவுகளிலும் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியது.
கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான படங்களில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தமிழ்ப் படம் என்ற அபார சாதனையை இந்த ‘சூரரைப் போற்று’ திரைப்படம் படைத்திருந்தது.
தற்போது ‘சூரரைப் போற்று’ படக் குழுவினரின் அபாரமான உழைப்புக்கு மேலும் பெருமைச் சேர்க்கும் வகையில் இத்திரைப்படம் ஆஸ்கர் போட்டியிலும் களமிறங்கியுள்ளது.
இந்த முறை கரோனா அச்சுறுத்தலால் ஆஸ்கர் போட்டி விதிமுறைகளில் பல மாற்றங்களைச் செய்துள்ளனர். ஓடிடி தளங்களில் வெளியான படங்களும்கூட ஆஸ்கர் போட்டியில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வரிசையில் ஆஸ்கர் போட்டியின் பொதுப் பிரிவில் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் போட்டியிட்டது.
இந்த முதல் கட்டப் போட்டியில் தேர்வான ‘சூரரைப் போற்று’ திரைப்படம் தற்போது பரிந்துரை பட்டியலிலும் இடம் பிடித்திருக்கிறது.
‘சிறந்த படம்’, ‘சிறந்த நடிகர்’, ‘சிறந்த நடிகை’ என்று 3 பிரிவுகளில் ஆஸ்கர் பரிசுக்காக இத்திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டிருப்பது தமிழ்த் திரையுலகத்திற்கே பெருமை சேர்க்கும் விஷயமாகும்.
இதுவரையிலும் வேறு எந்தத் திரைப்படமும் இந்தப் பரிந்துரை பட்டியலுக்குக் கூட வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.