தயாரிப்பாளர்கள் சி.வி.குமார் மற்றும் எஸ்.தங்கராஜ் ஆகியோரின் தயாரிப்பில், இயக்குநர் எஸ்.ஜே.அர்ஜுன் இயக்கத்தில், ‘அகில உலக சூப்பர் ஸ்டார்’ மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘சூது கவ்வும்–2’.
இந்த ‘சூது கவ்வும்-2’ திரைப்படத்தில் மிர்ச்சி சிவா, வாகை சந்திரசேகர், கருணாகரன், ராதாரவி, எம் எஸ் பாஸ்கர், அருள்தாஸ், ரமேஷ் திலக், யோக் ஜேபி, ஹரிஷா ஜஸ்டின், கராத்தே கார்த்தி, கல்கி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கார்த்திக் தில்லை ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு எட்வின் லூயிஸ் விஸ்வநாத் – ஹரி ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.
திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் தங்கம் சினிமாஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சி.வி.குமார் மற்றும் எஸ்.தங்கராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
விஜய் சேதுபதி நடிப்பில், நலன் குமாரசாமி இயக்கத்தில் 2013-ஆம் ஆண்டு வெளியான கல்ட் க்ளாஸிக் திரைப்படம், ‘சூது கவ்வும்’. அத்திரைப்படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்று விஜய் சேதுபதியின் மார்க்கெட்டை உயர்த்திவிட்டது. தற்போது, இப்படத்தின் தொடர்ச்சியாக இந்த ‘சூது கவ்வும்-2’ திரைப்படம் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி வேடத்தில் மிர்ச்சி சிவா நடித்துள்ளார். தன்னுடைய கூட்டாளிகளுடன் இணைந்து சின்னச் சின்னத் திருட்டுக்களை செய்து கொண்டு அவ்வப்போது ஜெயிலுக்கும் சென்று வந்து கொண்டிருக்கிறார்.
இந்த நேரத்தில் தமிழகத்தின் முதல்வராக ராதாரவி பொறுப்பில் உள்ளார். அவருடைய சமூகக் கட்சியின் தலைவரான வாகை சந்திரசேகர் கடந்த 30 ஆண்டுகளாக கோமாவில் இருந்து வருகிறார்.
இவர் கோமாவில் வீழ்வதற்குக் காரணமான அருமைப் பெருமாள் என்ற கருணாகரன் தற்போது மாநிலத்தில நிதியமைச்சராக பொறுப்பு ஏற்று, மிகப் பெரிய ஊழல்களை கூச்சப்படாமல் செய்து, பல்லாயிரம் கோடிகளை முறைகேடாக சம்பாதித்துக் குவித்திருக்கிறார். இந்தப் பணத்தில் பெரும் பகுதியை கட்சிக்கு நன்கொடையாகவும் கொடுத்திருப்பதால் யாரும் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார் கருணாகரன்.
திடீரென்று கோமாவில் இருந்து எழுந்த வாகை சந்திரசேகர் ராதாரவி அண்ட் கோ-வின் கூட்டுக் கொள்ளையைப் பார்த்து அதிர்ச்சியாகிறார். இவர்களைக் கண்டிக்கிறார். ஆனால் பண பலத்தினால் கட்சி இப்போது ராதாரவியின் கைகளில் இருப்பதை அறிந்து தான் வேறு பெயரில் புதிய கட்சியைத் துவக்குகிறார்.
கருணாகரனின் அப்பாவான எம்.எஸ்.பாஸ்கர், வாகை சந்திரசேகருடன் இணைந்திருக்கிறார். மாநிலத்தில் தேர்தல் அறிவிக்கப்படுகிறது. தேர்தலில் ஜெயிப்பதற்காக மக்களுக்கு நூதன முறையில் லஞ்சம் கொடுக்க மெக்சிகோவை சேர்ந்த ஒரு வங்கியின் துணையுடன் ஏற்பாடுகளை செய்கிறார் கருணாகரன்.
மிகச் சரியாக இந்த நேரத்தில் கருணாகரனை கட்டம் போட்டு தூக்குகிறது மிர்ச்சி சிவாவின் கூட்டணி. ஒரு பக்கம் நிதியமைச்சர் இல்லாமல் ஆட்சி கவிழ்ந்த நிலை.. மறுபக்கம் தன் மகனை எம்.எஸ்.பாஸ்கரும் தேடிப் பிடித்துக் கொலை செய்ய பேயாய் அலைகிறார். கருணாகரனோ அந்த வங்கி கொடுத்த டேப்பை தேடி அலைகிறார். இன்னொரு பக்கம் கருணாகரனால் பதவியிழந்த 2 போலீஸ் அதிகாரிகளும் கருணாகரனைப் பழி வாங்கத் தேடுகிறார்கள்.
இறுதியில் என்ன நடக்கிறது? என்பதுதான் இந்த சூது கவ்வும்-2 திரைப்படத்தின் திரைக்கதை.
சிவா தனது வழக்கமான டைமிங் காமெடியில், ஒரு சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். காமெடிக் காட்சிகளில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
மது அருந்தாவிட்டால் கண் முன்னே பாம்புகள் இருப்பது போல் தோன்றும் அவரது கேரக்டர் ஸ்கெட்ச் திரைக்கதைக்கு எந்தவிதத்திலும் உதவியாக இல்லை. பின்பு எதற்கு அந்த ஸ்கெட்ச்…?
முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் சிவா, கருணாகரன் இருவரில், திரைக்கதையில் கருணாகரனுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை அவரும் மிகச் சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கிறார்.
அரசியல்வாதியாக கருணாகரன் செய்யும் சேட்டைகளும், பேச்சுக்களும் மிகவும் ரசிக்க வைக்கின்றன. பணத்தின் தேவை பற்றி மற்ற மந்திரிகளுக்கு எடுத்துரைக்கும்போதும், மக்களுக்கு லஞ்சமாக பணத்தை எப்படி கொடுக்கப் போகிறோம் என்பதை சொல்லும்போதும் இன்றைய நாட்டு நடப்பை அப்படியே பிரதிபலித்திருக்கிறார்.
க்ளைமாக்ஸில், கருணாகரன் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன், அவர் தலையாட்டும் ஸ்டைல் வேற லெவல்!
அரசியல் கட்சித் தலைவர்களாக வாகை சந்திரசேகரும், ராதாரவியும் தங்களது அனுபவமிக்க நடிப்பினால் கவர்கிறார்கள். ராதாரவி முன்னாள் தமிழக முதலமைச்சர் நெடுஞ்செழியனை போலவே தோற்றமளிப்பது உள்ளடி வேலைதானோ..?
M.S.பாஸ்கர் ஒரு அப்பாவியான, உண்மையான தொண்டனை பிரதிபலித்திருக்கிறார். மனைவியைத் துரத்திச் செல்லும்போது கதவை கடப்பாரையால் உடைத்து மீடியாக்களிடம் மாட்டிக் கொள்ளும் காட்சியில் பார்த்தவுடனேயே சிரிப்பு வருகிறது.
மற்றைய கதாப்பாத்திரங்களில் கவியும், கல்கியும், அருள் தாஸூம் டயலாக் பேசியே கொல்கின்றனர். சில இடங்களில் புன்னகைக்க மட்டுமே வைக்கின்றனர்.யோக் ஜேபி மற்றும் கராத்தே கார்த்தி கோஷ்டியின் தேடுதல் வேட்டை அவ்வப்போது சிரிக்க வைக்கிறது.
கார்த்திக் கே.தில்லையின் ஒளிப்பதிவு சுமாராகத்தான் உள்ளது. படத்தின் நாயகனான சிவாவை அழகாக காட்டக்கூட நினைப்பில்லாமல் கோட்டைவிட்டுவிட்டார். ஆனால் கருணாகரன் மட்டும் ஜொலிக்கிறார். பாடல் காட்சிகளிலும், ரோட்டில் நடைபெறும் காட்சிகளிலும் மட்டும் கொஞ்சம் லைட்டிங்கை காட்டியிருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் எட்வின் லூயிஸ் விஷ்வநாத்தின் பாடல்கள் மனதில் நிற்கவில்லை ஆனால், ஹரி எஸ்.ஆரின் பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
படத் தொகுப்பாளர் இக்னேசியஸ் அஸ்வினுக்கு வேலையே கொடுக்காமல் அப்படியே இணைத்து வைத்து திரைக்கு வந்திருக்கிறது படம்.
மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தை, அதன் முந்தைய பாகத்தின் தொடர்ச்சி என்ற முறையில் இன்னும் கூடுதலான சுவாரஸ்யமாக அமைத்திருக்க வேண்டும். இயக்குநரின் எழுத்தில் கஞ்சத்தனம் ஏனோ..?
மிர்ச்சி சிவாவின் கதாபாத்திரம் முதல் பாகத்தின் நாயகனான விஜய் சேதுபதியுடன் ஒப்பிடும்போது சுமாராகவே அமைந்துவிட்டது நமது துரதிருஷ்டம்தான்.
ஆனால் இதை ஈடு கட்டும்விதமாக கருணாகரன் கதாபாத்திரத்தின் மூலம் பல இடங்களில் பலவீனங்களை மறைத்து காமெடியாக படத்தை நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குநர் எஸ்.ஜே.அர்ஜுன்.
முதல் பாதியைவிடவும் இரண்டாம் பாதியில் கூடுதலாக விறுவிறுப்பு மற்றும் டிவிஸ்ட்டுகளை வைத்து படத்தை ரசிக்கவும் வைத்துவிட்டார் இயக்குநர்.
நகைச்சுவை படம்தான் என்றாலும் இன்றைய தேதியில் நாட்டில் நிலவும் அரசியல் களம்.. தேர்தல் நிலவரம்.. கட்சிகளின் செயல்பாடுகள், லஞ்சம், ஊழல், முறைகேடுகளைப் பற்றி எடுத்துரைப்பது.. பணம் வாங்கிவிட்டு ஓட்டுப் போடும் முட்டாள் மக்கள்.. இலவசங்கள், பொய்யான வாக்குறுதிகளை வைத்து மக்களை மயக்கி ஆட்சிக்கு வர நினைக்கும் தலைவர்கள் என்று அனைவரையும் வெளிப்படையாக சொன்னதற்காக இந்தப் படத்தின் இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள்..!
RATING : 2.5 / 5









