தமிழ்த் திரையுலக வரலாற்றில் ‘அந்த நாள்’ என்னும் திரைப்படம் மறக்க முடியாத திரைப்படமாகும். 1954-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்தப் படம் உலகப் புகழ் பெற்ற ஜப்பானிய இயக்குநரான அகிர குரசோவாவின் ‘ரஷோமான்’ என்னும் திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டது.
மர்மக் கதையின் பின்னணியில் உருவான இந்தப் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், பண்டரிபாயும் நடித்திருந்தனர். அப்போதைய காலக்கட்டத்தில் ஒரு படத்திற்கு 10 பாடல்கள் இருந்த நிலையில்… ஒரு பாடல்கூட இடம் பெறாமல் வெளியான முதல் தமிழ்த் திரைப்படம் இதுவாகும்.
இந்தப் படத்திற்கு பிரபல நடிகரும், திரைக்கதை ஆசிரியருமான ஜாவர் சீதாராமன் திரைக்கதை எழுதியிருந்தார். வீணை எஸ்.பாலசந்தர் திறம்பட இயக்கியிருந்தார். ஏவி.எம். நிறுவனம் தயாரித்திருந்தது.
இப்போது 65-ம் வருடங்கள் கழித்து அதே ஏவி.எம். நிறுவனம் ‘அந்த நாள்’ என்னும் அதே பெயரில் ஒரு புதிய திரைப்படத்தை தந்திருக்கிறது.
இந்தப் படத்தை கிரீன் மேஜிக் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சி.ரகுநந்தன் தயாரித்திருக்கிறார்.
இந்தப் படத்தின் நாயகனாக அறிமுக நடிகர் ஆர்யன் ஷாம் நடிக்கிறார். இவர் ஏவி.எம்.குடும்பத்தைச் சேர்ந்தவர். தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணனின் பேத்தியும், தயாரிப்பாளர் எம்.எஸ்.குகனின் மகளுமான அபர்ணாவின் கணவர்.
கதையின் நாயகிகளாக ஆத்யா, லீமா பாபு, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ புகழ் ராஜ்குமார், ‘கைதி’ பட புகழ் கிஷோர், ஆகியோருடன் காமெடி வேடத்தில் இமான் அண்ணாச்சியும் நடித்திருக்கிறார்.
இந்தப் படத்திற்கு சதீஷ் கதிர்வேல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். என்.எஸ்.ராபர்ட் சற்குணம் இசையமைத்திருக்கிறார். ஜெ.எஃப்.காஸ்ட்ரோ படத் தொகுப்பு செய்திருக்கிறார். அறிமுக இயக்குநரான வி.வீ. இந்தப் படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார்.
வித்தியாசமான கதையமைப்போடு கிரைம், திரில்லர் கலந்த திகில் படமாக இதை உருவாக்கியிருக்கிறார்கள்.
படத்தின் நாயகன் ஆர்யன் ஷாம் ஒரு திரைப்பட இயக்குநர். தன்னுடைய புதிய திரைப்படத்தின் ஸ்கிரிப்ட் வேலைக்காக தன்னுடைய உதவியாளர்களுடன் இசிஆர் ரோட்டில் இருக்கும் பஞ்சமி பங்களா அப்படிங்கற ஒரு பங்களாவுக்கு வருகிறார்.
அவர்கள் அந்தப் பங்களாவிற்குள் வந்தவுடன் பல மர்மமான சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. இதைப் பார்த்து பயந்த ஆர்யன் ஷாமின் குழுவினர் அனைவரும் அங்கிருந்து வெளியிலே தப்பிச்சு போயிடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், அவர்களால் தப்பிக்க முடியவில்லை. அதே சமயம் முகமூடி போட்ட ஒரு மனிதனும் அவர்களைக் கொலை செய்ய துரத்துகிறான்.
இப்போது அங்கேயிருக்கும் அனைவரும் அதிலிருந்து தப்பிக்கிறதுக்கு என்ன வழி என்று யோசிக்கிறார்கள். அந்த முகமூடி மனிதன் யார்.. ஆர்யன் ஷாமும், அவரது உதவியாளர்களும் அங்கேயிருந்து தப்பித்தார்களா.. இல்லையா.. என்பதை சஸ்பென்ஸ், திரில்லரோட சொல்றதுதான் இந்த அந்த நாள் திரைப்படம்.
படத்தின் நாயகன் ஆர்யன் ஷாம் ரொம்பவும் உயரமான தோற்றத்துடனும், இறுக்கமான முகத்துடனும் இருப்பது அவருடைய பிளஸ் பாயிண்ட்டாக அமைந்துள்ளது. இந்த மாதிரி திகில் படங்களுக்கு உரிய கதாப்பாத்திரத்தில் கடைசிவரையிலும் தோற்றமளித்திருக்கிறார்.
சில நேரங்களில் கோவப்படுவதிலும், குழப்பமடைவதிலும், தனது நண்பர்களைக் காப்பாற்ற துடிப்பதிலும் தன்னாலான நடிப்பைக் காண்பித்திருக்கிறார். அவர் கோபப்பட்டு பேசுகிற காட்சிகளிலெல்லாம் நிஜமாகவே அவருடைய முகத்துக்கு அது ரொம்பவும் பொருத்தமாகவுள்ளது. கிளைமாக்ஸில் அவருக்கு ஒரு டிவிஸ்ட் வைத்துக் காட்டும்போது அந்த இன்னொரு நடிப்பிலும் வித்தியாசம் காட்டி நடித்திருக்கிறார் ஆர்யன்.
சசிகுமார், விஜய் ஆண்டனி மாதிரியானவர்கள் நடிக்கும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால் ஆர்யனும் ஒரு ரவுண்டு இந்த தமிழ் சினிமாவில் வலம் வரலாம்.
நாயகியான ஆத்யா பிரசாத்துக்கு ரொம்ப பெரிய அளவுக்கு முக்கியத்துவம் இல்லை என்றாலும் அவர் வருகின்ற அதை காட்சிகளில் தன்னுடைய கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்.
ஆர்யனின் உதவியாளர்களாக நடித்திருக்கும் லிமா பாபு, கிஷோர் ராஜ்குமார் ராஜ்குமார், இமான் அண்ணாச்சி என்று இந்த நான்கு பேருமே அந்த கேரக்டர்களுக்கு ஏற்ற மாதிரியான நடிப்பை நடித்துள்ளனர்.
இமான் அண்ணாச்சியோட சில சில வசனங்களும் அவருடைய ஸ்கிரீன் ப்ரெசென்ஸூம்தான் படத்துல அப்பப்போ நம்மை மூச்சுவிட்டு கடைசி வரைக்கும் பார்க்க வைத்திருக்கிறது என்றும் சொல்லலாம்..!
இந்த மாதிரியான திகில், சஸ்பென்ஸ், திரில்லர் படங்களுக்கு தொழில் நுட்பம் ரொம்ப, ரொம்ப முக்கியம் அது இந்த படத்தில் சிறப்பா அமைஞ்சிருக்கு என்று சொல்லலாம்.
படத்தின் முதல் காட்சிகளையே நரபலி கொடுக்கிற மாதிரி ஒரு காட்சியுண்டு. அந்தக் காட்சியிலேயே படத்தின் ஒளிப்பதிவின் தரம் நமக்கு தெரிந்துவிட்டது. அதற்குப் பிறகு இரவில் நடக்கின்ற பல காட்சிகளில் ஒளிப்பதிவாளர் சதீஷ் கதிர்வேலின் ஒளிப்பதிவு ரொம்பவும் சிறப்புதான்.
இசையமைப்பாளர் ராபர்ட் சற்குணத்தின் இசையைவிட பின்னணி இசைதான் கேட்பதுபோல இருக்கிறது. அதிலும் ஒரு திரில்லர் படத்துக்கு இருக்கக் கூடிய ஒரு பின்னணி இசையை கடைசி வரையிலும் பதிவு செய்துள்ளார்.
சஸ்பென்ஸ் திரில்லர் படம். இதனூடே கொஞ்சம் பயமுறுத்தணும். இதையெல்லாம் கச்சிதமாகத் தொகுத்து வழங்க வேண்டிய தொகுப்பாளர் இன்னும் கொஞ்சம் நன்றாக செய்திருந்தால் படத்தை நாமும் இன்னும் கொஞ்சம் கூடுதலா ரசித்திருக்கலாம்.
இந்தப் படத்தின் கதையை ஹீரோ ஆரியன் ஷாமும், டைரக்டர் கதிரேசனும் இணைந்து எழுதியுள்ளனர். கதை சஸ்பென்ஸ், திரில்லருக்கு ஏற்ற சரியான கதையாக இருந்தாலும் திரைக்கதை இன்னும் கொஞ்சம் சுவாரசியமாக இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்திருந்தால் இந்த படம் ரன் வேகத்தில் ஓடியிருக்கும். ஆனாலும், இப்போதைக்கு ஓரளவு படத்தின் கதையோடு நம்மை ஒன்றை வைத்து பார்க்க வைத்திருக்கிறார்கள்.
அவர்களைத் துரத்தும் கொலையாளி யார்? அந்த வீட்டிலிருந்து இவர்கள் எப்படி தப்பிக்க போகிறார்கள் என்ற ஆர்வத்தை துவக்கத்திலிருந்தே நமக்குள் புகுத்திவிட்டதால் கடைசிவரைக்கும் இருந்து பார்க்க வைத்திருக்கிறார்கள். இது ஒன்றுதான் இந்த படத்துல இருக்குற ஒரே ஒரு விஷயம்.
கடைசியில் வரும் ஆரியன் பற்றிய ஒரு டிவிஸ்ட், ‘அட’ என்று நம்மை சொல்ல வைக்கிறது. இருந்தாலும், ஒரு முழுமையான படத்திற்கு இது போதுமானதாக இல்லை என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்..!
ஒரு முறை பார்க்கலாம்தான்..!
RATING : 2.5 / 5