full screen background image

பறந்து போ – சினிமா விமர்சனம்

பறந்து போ – சினிமா விமர்சனம்

இயக்குநர் ராம் எழுதி, இயக்கியுள்ள இந்த ‘பறந்து போ’ திரைப்படத்தை டிஸ்னி + ஹாட் ஸ்டார் நிறுவனம் இணைந்து வழங்குகிறது. செவன் சீஸ் மற்றும் செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

நடிகர் மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி, மாஸ்டர் மிதுல் ரியான், அஜூ வர்கீஸ், பாலாஜி சக்திவேல் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இசை – சந்தோஷ் தயாநிதி. படத்தின் பின்னணி இசையை யுவன் ஷங்கர் ராஜா அமைத்துள்ளார். மதி V.S. படத் தொகுப்பு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு, N.K.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடல்களை மதன் கார்க்கி எழுதியுள்ளார். சண்டைக் காட்சிகளை ஸ்டண்ட் சில்வா அமைத்துள்ளார்.

இந்தப் ‘பறந்து போ’ படம் மூலம் இயக்குநர் ராம், முதன்முறையாக காமெடி ஜானரில் களமிறங்கியுள்ளார். இந்தத் திரைப்படம், மனதை இலகுவாக்கும் நகைச்சுவையுடன், மியூசிக்கல் காமெடிப் படமாக உருவாகியுள்ளது.

பெற்றோர்களால் எளிதில் கணிக்க முடியாதது குழந்தைகளின் அக வாழ்க்கையையும் புற வாழ்க்கையையும்தான். அது காலத்துக்கு காலம் நேரத்துக்கு நேரம் மாறிக் கொண்டே இருக்கும். சுற்றுப்புறச் சூழலும், வாழும் வாழ்க்கையும், நகரமயமாதலும், பொருளாதார சிக்கல்களும் குழந்தைகளின் வாழ்க்கையை வடிவமைப்பதில் முக்கிய பங்கு எடுக்கின்றன.

குழந்தைகள் வாழ்க்கைப் பயணத்தில் பறந்து போகின்ற அளவுக்கு கற்பனை செய்து பார்க்கும் நமக்கு அந்தப்த்தலில் ஒரு சிறிய அளவினைகூட செய்ய பயமாக இருக்கும். எதையும் ஸ்டெப் பை ஸ்டெப்பாக அளவெடுத்து நடந்து, அளவெடுத்து அழுது, அளவெடுத்து சிரித்து, அளவில்லாத அன்பையும், பாசத்தையும் கொடுக்கும் பெற்றோர்களின் நிலைமை இன்றைக்கு திக்குத் தெரியாத காட்டில் இருக்கிறது. அப்படி ஒரு பெற்றோர்களின் கதைதான் இந்தப் பறந்து போ என்கின்ற திரைப்படம்.

எப்படியாவது ஒரு மளிகை கடை வைத்து தான் ஒரு தொழிலதிபர் ஆகிவிட வேண்டும் என்று நினைக்கிறார் குடும்பத் தலைவரான கோகுல் என்ற மிர்ச்சி சிவா. இவருடைய காதல் மனைவியான குளோரி என்ற கிரேஸ் ஆண்டனி தன்னுடைய பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி கோகுலை திருமணம் செய்து கொண்டு மதம் மாறிவிட்டதால் தன்னுடைய பிறந்த வீட்டு நட்புகள் அனைத்தையும் முறித்துக் கொண்டவர். பெற்றோர்கள் மற்றும் உடன் பிறந்த தங்கையின் அன்பு கிடைக்காமல் தன்னுடைய கணவர், தன்னுடைய பையன் என்று தனது அழகான குடும்பத்தின் மீது அதீத பாசம் வைத்திருக்கிறார்.

குடும்பத் தேவைக்காக பல்வேறு இடங்களில் வாங்கிய கடன்களின் இஎம்ஐ தொகை கோகுலை வாட்டி எடுக்க அதைச் சமாளிக்க பொருட்டு குளோரியும் பழைய சேலைகளை வாங்கி விற்பனை செய்து வருகிறார். இதற்காக இப்போது சென்னையில் இருந்து கோயம்புத்தூர் வந்து லாட்ஜில் தங்கி கொண்டு அங்கு நடக்கும் கண்காட்சியில் தன்னுடைய துணிக்கடையை வைத்து வியாபாரம் செய்து வருகிறார் குளோரி.

பகல் நேரத்தில் தான் வீடு வீடாக சென்று மளிகைப் பொருட்களை கொடுக்க வேண்டிய இருப்பதால், தன்னுடைய ஒரே மகனை வீட்டின் உள்ளே வைத்துவிட்டு வெளியில் கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு பறந்து செல்கிறார் கோகுல்.

ஒரு ஜெயில் போல வீட்டுக்குள் அடங்கி கிடக்கும் அடைந்து கிடக்கும் சிறுவன் அன்புவுக்கு வாழ்க்கையே வெறுப்பாக இருக்கிறது. தன்னை எங்காவது அழைத்துச் செல்ல வேண்டும் என்று கனவு காண்கிறான் அவன்.

அவனுடைய கனவை நிறைவேற்றும் பொருட்டு மிரட்டல் எல்லாம் விடுக்கவே அப்பாவும் வேறு வழியில்லாமல் மகனை அழைத்துக் கொண்டு பயணத்தை தொடங்குகிறார்.

இந்தப் பயணம் அவர்களுக்கு இடையிலான பாசத்தையும், அன்பையும், நேசத்தையும், பரிவையும் ஒவ்வொரு முறையும் உரசிப் பார்க்கிறது. பொறுமையின் எல்லைவரை கொண்டு செல்கிறது கோகுலை..! அவனுடைய அம்மாவான கிரேஸ் ஆண்டனி சென்னையைவிட்டு 500 கிலோ மீட்டர் தள்ளி இருந்தாலும் அவரையும் அந்த பதட்டம் தொற்றிக் கொள்கிறது.

இந்தப் பயணம் காட்டுகின்ற வழி என்ன? இந்த பயணம் சொல்கின்ற நீதி என்ன? அப்பா, மகன், அம்மா மூன்று பேரும் எப்பொழுது இணைந்தார்கள்? அந்த மகனின் சந்தோஷம் கிடைத்ததா.. இல்லையா..? என்பதுதான் இந்தப் ‘பறந்து போ படத்தின் ஒரு அழகான திரைக்கதை.

படத்தின் உண்மையான கதாநாயகன் அன்புவாக நடித்திருக்கும் அந்த சிறுவன்தான். மிதுல் ரியான் என்கின்ற இயற் பெயர் கொண்ட அன்பு இந்த படத்தில் நடித்ததன் மூலமாக ரசிகர்கள் அத்தனை பேரின் அன்பையும் பெற்று விட்டான்.

கொஞ்சம் துடிப்பு, கொஞ்சம் பெரிய மனுஷத்தனம், நிறைய அறிவு, எதை பற்றியும் கவலைப்படாத தன்மை, ஒரு குழந்தைத்தனம் என்று அத்தனை கட்டமைப்பையும் தனக்குள் கொண்டு முதல் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் தன்னுடைய அப்பழுக்கில்லாத பேச்சுகளாலும், நடிப்பினாலும் நம்மைப் பெரிதும் கவர்ந்துவிட்டான் அன்புவாக நடித்திருக்கும் சிறுவன் மிதுல் ரியான்.

காமெடி சட்டையர் என்று சொல்லக் கூடிய அளவுக்கான திரைக்கதையில் காமெடி வசனங்களினால், காமெடி இயக்கத்தினால் அனைத்துவிதமான திசைகளில் இருந்தும் காமெடி ஒன்றை மட்டுமே முன் வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டிருப்பதால் அன்பு என்கின்ற அந்த சிறுவன் பேசுகின்ற ஒவ்வொரு வசனமும் பட்டாசாக வெடித்து, நமக்கும் காமெடியை கொடுத்து இருக்கிறது.

தமிழ்ப் படம் என்கின்ற ஒரு சினிமாவை நையாண்டி செய்த திரைப்படத்தில் அறிமுகமாகி இன்றுவரையில் தன்னுடைய எதார்த்தமான ஒன் லைன் காமெடிகள் மூலமாக சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் மிர்ச்சி சிவா இந்தப் படத்தில் மிகப் பெரிய பிரளயத்தையே உருவாக்கி இருக்கிறார்.

இஎம்ஐ இன்னும் கட்டலையே என்ற ஒரு கேள்விக்கு அப்புறம் பேசுறேன் என்ற டக் என்று போனை கட் செய்யும் அந்த நிமிடத்தில் எழும் கை தட்டல், கடைசியாக சிவா அன்புவுடன் அமைதி பேச்சுவார்த்தையை முடித்து ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரையிலும் அவருடைய ஒவ்வொரு பேச்சிலும், எதார்த்தமான நடிப்பிலும் நமக்கு காமெடியை வாரி வழங்கி இருக்கிறார் மிர்ச்சி சிவா.

மகனது அடாவடித்தனமான பேச்சினாலும், நடத்தையாலும் சில இடங்களில் கோபம் வந்தாலும் அந்த கோபத்தை வைத்து எதுவும் செய்ய முடியாத அன்புமிக்க மனிதரான சிவா வசனங்களால் பல காட்சிகளை நகர்த்தி இருக்கிறார்.தே வசனங்களால் முதலில் இருந்து கடைசிவரையிலும் குலுங்கி குலுங்கி சிரிக்கவும் வைத்திருக்கிறார்.

மகனைக் காப்பாற்றுவதற்காக மரத்தில் ஏறியவர் மரத்திலிருந்து இறங்க முடியாமல் தவித்தபடியே இருந்து மனைவிக்கு போன் செய்து வரவழைக்கும் நேரத்தில் கட்டையை சாய்த்து மரத்திலேயே தூக்கி கொண்டு இருக்கும் அந்த ஒரு காட்சியில் எழுகின்ற குபேர் சிரிப்பு அலையை அடக்க நெடுநேரம் ஆனது. ஒரு காட்சி அமைப்பிலேயே சிரிப்பை வரவழைத்துவிட முடியும் என்று ஒரு சீரியஸ் இயக்குரான ராம் செய்திருப்பது நிச்சயம் ஆச்சரியத்திற்குரியது.

அவருடைய மனைவியாக நடித்திருக்கும் மலையாள நடிகை கிரேஸ் ஆண்டனி தன்னுடைய சிறப்பான நடிப்பை காண்பித்திருக்கிறார். தொலைபேசியில் பேசும் பொழுது சாந்தமான முகத்துடன்.. அமைதியான அம்மாவாக.. பிரியமான மனைவியாக பேசுகின்றார்.

ஆனால் தன்னுடைய கணவரை நேரில் பார்த்தவுடன் அவர் அப்படியே உல்டாவாக அவரை வாடா.. போடா என்றெல்லாம் பேசி அழைக்கின்ற அழைக்க ஆரம்பித்த உடன் ஹா.. இது நமக்கான படம்…” என்று பெண்களும், “ஹா நம்மளை வச்சு செய்யப் போறாங்க…” என்ற ஆண்களுமாக நிமிந்து அமர்ந்து படத்தை ரசிக்க துவங்குகிறார்கள். இந்த இடத்தில் இருந்து இயக்குர் ராமின் இயக்கத் திறமை மேலோங்கியிருக்கிறது.

அதே சமயம் தன்னுடைய உடன் பிறந்த தங்கை தன்னைப் புறக்கணித்துவிட்டு செல்வதை நினைத்து கண் கலங்கி அழும் காட்சியில் நிறைய எமோஷன்சை ரசிகர்களிடத்தில் உருவாக்கி இருக்கிறார் கிரேஸ் ஆண்டனி.

சில காட்சிகளே ஆனாலும் அஞ்சலியின் அந்த அருமையான அழகான, அமைதியான.. நடிப்பு ஆட்டோகிராப் மல்லிகாவை நமக்கு ஞாபகப்படுத்துகிறது.

அஞ்சாங் கிளாஸ் படிச்சப்ப கேட்ட சூரியகாந்தி பூவை என் பையன் அஞ்சாங் கிளாஸ் படிக்கும் போது கொண்டு வந்து கொடுக்கிறாயேடா…” என்று அஞ்சலி கேட்கின்ற அந்தக் கேள்வியில் தியேட்டரே அதிர்கிறது.

அஞ்சலியின் கணவராக நடித்திருக்கும் அஜு வர்கீஸ் தன்னுடைய சிறப்பான நடிப்பினால் நம்மை கவர்ந்திருக்கிறார். நம்முடைய எக்ஸின் கணவர் ப்படி ஒருவராக இருக்கக் கூடாதா என்று படம் பார்க்கும் ரசிகர்கள் அத்தனை பேரையும் ஏங்க வைத்திருக்கிறார்.

அஞ்சலியும், சிவாவும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது மகன் அன்புவின் செருப்பைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு நீங்க பேசிட்டு வாங்க…” என்ற சொல்லிவிட்டு அசால்டாக வண்டியை திருப்பிக் கொண்டு போகும் அந்தக் காட்சியில் கை தட்டுவதா, அல்லது ஆனந்தப்படுவதா என்கின்ற ஒரு இன்பச் சிக்கலில் கொண்டு வந்து விட்டார் அஜு வர்கீஸ்..

குளோரியின் கடையில் வேலை செய்யும் அந்த பெண்ணும் ஒரு காட்சியில் நம்மை மனமுருக வைத்துவிட்டார். அவ்வளவு அழகான நடிப்பு.

ஏகாம்பரத்தின் கேமரா வேலை இந்த படத்தை பரபரவென பறக்க வைத்திருக்கிறது. அன்பு முதலில் குளிக்கும் அந்த நீச்சல் குளத்தை டிரோன் காட்சியில் பார்க்கும்பொழுது ஆஹா இப்படி ஒரு இடமா.. தேடி கண்டுபிடித்தாவது போய் அந்தக் குளத்தில் குளிக்க வேண்டும் என்கின்ற ஒரு ஆசையை நமக்குள் தோற்றுவித்துவிட்டது அந்த ட்ரோன் காட்சி. அஞ்சலி இருப்பிடம் சம்பந்தமான காட்சிகள் எல்லாம் கேமராவின் பங்களிப்பு மிக அபாரம் என்று சொல்லலாம்.

படம் முழுவதும் அப்பாவும் பையனும் ஓடிக் கொண்டே இருப்பதால் அதற்குரிய பலனை கொடுப்பதை போல கை தேர்ந்த வித்தகராக அதனைப் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

சந்தோஷ் தயாநிதியின் இசையில் அத்தனை பாடல்களுமே அமர்க்களம். மிக எளிமையான வார்த்தைகள். இசையை பின்னால் வைத்துக் கொண்டு பாடல் வரிகளை மட்டும் முன்னால் நம்முடைய காதில் மிக எளிதாக விழுகும்படி இசையமைத்திருக்கிறார். இதற்காகவே நமது பாராட்டுக்கள்.

மதன் கார்க்கி எழுதிய அத்தனை பாடல் வரிகளும் அற்புதம் என்றே சொல்லலாம். அதிலும் டாடி ரொம்ப பாவம்..” என்ற பாடல் தியேட்டரைவிட்டு வெளியில் வரும்பொழுதும் நம் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. உண்மையில் அந்த திரைக்கதைக்கு ஏற்றவாறு, அந்தக் காட்சிக்கு ஏற்றவாறு பாடல் வரிகளை எழுதி இருப்பது சிம்ப்ளி சூப்பர்ப் என்றே சொல்லலாம்.

யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி செய்யும் குறிப்பிடத்தக்கது. நகைச்சுவையை முன் வைத்து அவர் போட்டிருக்கும் அந்த இசை சிரிக்கலாம் வேண்டாமா என்று கொஞ்சம்கூட யோசிக்க விடாமல் நம்மை நகைக்கவும் வைத்து, வாய் விட்டு சிரிக்கவும் வைத்திருக்கிறது.

படத்தொகுப்பாளர் மதியும் தன் பங்குக்கு படத்தின் காட்சிகளை மிக அழகாக நறுக்கித் தந்திருக்கிறார். அதிலும் விஜய் யேசுதாஸூம், மிர்ச்சி சிவாவும் வீட்டுக்குள்ளே ஆடும் அந்த மூன்று நிமிடம் நடன காட்சி அசத்தல். அதை அவ்வளவு அழகாக படம் ஆக்கி இருந்தாலும் அதை தொகுத்து வழங்கியதில்தான் அந்தக் காட்சியின் வெற்றியே அடங்கி இருக்கிறது.

இருக்க இடமில்லாமல் தனியே மண்டபத்தில் தங்கியிருப்பவரின் பெயர் ‘எம்ப்ரர்’.. காலையில் எழுந்து போய் இவர்களுக்காக இட்லி வாங்கி வருவதும், கண் தெரியாதவனிடம் மகன் பற்றிக் கேட்கும்போது.. “அவங்கவங்க வீட்டுக்குத்தான் போனாங்க..” என்று அந்தக் கண்ணில்லாதவர் சொல்லும் பதிலெல்லாம் இயக்குநர் ராமின் தனிப்பட்ட டச் என்றே சொல்லலாம். இந்த 2 கதை மாந்தர்களைப் பார்க்கும்போது ராமின் குருவான பாலு மகேந்திரா சட்டென்று நினைவுக்கு வருகிறார்.

கற்றது தமிழ், ‘தரமணி, ‘தங்க மீன்கள்’, ‘பேரன்பு போன்ற படங்களை இயக்கிய ராமா இந்தப் படத்தை இயக்கியது என்கின்ற ஒரு கேள்வியை இத்திரைப்படம் எழுப்பி இருக்கிறது என்பதே ராமின் வெற்றிக்கான அடையாளம்தான்.

குழந்தைகள் ஓவராக பேசுகிறார்கள் என்று அவர்களை தலையில் கொட்டிக் கொட்டியே நாம் அவர்களை பேச விடாமல் செய்துவிடுகிறோம். அவர்கள் நிறைய பேசினால் அது மரியாதை குறைவு என்று நாம் எடுத்துக் கொள்கிறோம்.

ஆனால் உண்மையில் குழந்தைகள் அது மாதிரி பேசுவதற்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நிறைய பேச வேண்டும் என்று துடிக்கிறார்கள். ஆவல் கொள்கிறார்கள். ஆசையுடன் இருக்கிறார்கள். அதைக் கேட்க வேண்டியது பெற்றோர்களுடைய கடமை.

அதேபோல் அவர்களின் சின்ன சின்ன ஆசைகளைகூட நாம் நிறைவேற்றாமல் போனால் அது அவர்களின் மனதில் ஒரு வெறுமையை ஏற்படுத்தும். அந்த வெறுமை பெற்றோர்களுக்கு எதிராக ஒரு வெறுப்புணர்வை உண்டாக்கும் என்பதை இந்தப் படத்தின் மூலம் இயக்குர் ராம் அழகாக சொல்லி இருக்கிறார்.

வெறுமனே வீட்டுக்குள்ளேயே வைத்து படி, படி என்று சொல்லி உயிரை வாங்குவதைவிட வெளியில் அழைத்துச் சென்று வெளியுலகத்தை காட்டி இன்னும் கொஞ்சம் பறந்து போ இன்னும் கொஞ்சம் பறந்து போ உடன் நாங்கள் வருகிறோம் என்று சொல்லி அந்த சிறுவனின் றத்தலை ஊக்குவித்தால் அவனுடைய அக, புற வாழ்வியல் சிறந்து விளங்கும். அதன் மூலம் அவன் எதிர்காலத்தில் இயற்கையை நேசித்து.. மனிதர்களை நேசித்து ஒரு சிறந்த மனிதனாக வருவான் என்பதை இந்தப் படத்தின் மூலமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராம்.

நிச்சயம் இத்திரைப்படம் தமிழ் திரையுலக வரலாற்றில் ஒரு மிகச் சிறந்த திரைப்படம்.

ராமின் படங்களிலும் இத்திரைப்படம் ஒரு சிறந்த திரைப்படமாக இடம் பெறுகிறது.

இத்திரைப்படத்தை அனைவரும் குடும்பத்துடன் பார்த்து மகிழ வேண்டும்.

மிஸ் பண்ணிராதீங்க..!!!

RATING : 4.5 / 5

Our Score