படம் எடுக்குறதுகூட பெரிய விஷயமில்லை.. ஆனால் அதை தியேட்டர்களுக்கு கொண்டு வர்றதுக்குள்ள தாவு தீர்ந்திருது என்கிறார்கள் தயாரிப்பாளர்கள். இதில் நீண்ட காலமாக பீல்டில் இருக்கின்ற தயாரிப்பாளர்களே இன்றைக்கு பெருமூச்சு விடுகின்ற அளவுக்கு பிரச்சினைகள் பெரிதாகி வளர்ந்திருக்கின்றன..
பெரிய பட்ஜெட் படங்கள் கோடிக்கணக்கில் செலவழித்து டிவிக்களில் தங்களுடைய படங்களை விளம்பரம் செய்து ரசிகர்களை ஈர்க்கிறார்கள். அதே நேரத்தில் வெளியாகும் சின்ன பட்ஜெட் படங்கள் அந்த அளவுக்கு விளம்பரம் செய்ய முடியாததால் அவர்களுடைய படம் வந்ததுகூட தெரியாமல் தியேட்டரைவிட்டே ஓடிப் போகின்றன..
இதனால் வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து அனைத்து படங்களுக்குமே விளம்பரச் செலவாக அதிகப்பட்சம் 40 லட்சம் ரூபாய்தான் செலவு செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளதாம். இன்று காலையில் பிரசாத் லேப்பில் நடந்த ஆதார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் டி.சிவா இதனைத் தெரிவித்தார்..!
இது ஒருவகையில் நல்லதுதான் என்றாலும் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களுக்கு பாதிப்பு வரும். ரஜினியின் கோச்சடையான் 300 கோடி பட்ஜெட்டில் வரும் படம். இதற்கு வெறும் 40 லட்சம்தான் பப்ளிசிட்டி பட்ஜெட் என்றால் எப்படி..? அது அவர்களுக்குத் தாங்கக் கூடியதா..? இந்தியா முழுக்க.. எங்கேங்கே படம் ரிலீஸாகுதோ.. அங்கெல்லாம் ஓடிப் போய் பிரச்சாரம் செய்யணும்.. ஆர்ட்டிஸ்டுகள் போக, வர பிளைட் டிக்கெட்டுக்கே இந்த 40 லட்சம் சரியாயிரும்.. அப்புறம் மற்ற செலவுகளுக்கு..?
மீடியம் பட்ஜெட், சின்ன பட்ஜெட் படங்களுக்கு வேண்டுமானாலும் இப்படி கட்டுப்பாடு கொண்டு வரலாம்.. அது நிச்சயம் அவர்களுக்கு பலனளிக்கும்.. ஒருவேளை படம் தோல்வியடைந்தால், “நல்லவேளை.. 40 ல்டசம்ன்னு கோடு போட்டதால, பெரிசா இறக்குறதா இருந்தது தப்பிச்சிருச்சு..” என்று சொல்லி ஒரு கும்பிடுபோட்டுவிட்டு சொந்த ஊர்ப் பக்கம் போய்விடுவார்கள் பல தயாரிப்பாளர்கள். ஆனால், பெரிய பட்ஜெட் படங்களுக்கு இது வேலைக்கு ஆகாது என்கிறார்கள் ஒரு சில தயாரிப்பாளர்கள்.
எந்தத் திட்டத்திலும் இன்னொரு பக்கமும் இருக்கும். அதனைச் செயல்படுத்தும்போதுதான் அதன் விளைவுகளும் தெரியும்.. காத்திருப்போம்..!