இப்போதெல்லாம் படம் சம்பந்தமான விஷயங்களைத் தவிர மற்ற விஷயங்களில்தான் கோடம்பாக்கத்து குமாரர்களின் பெயர்கள் அதிகமாக அடிபடுகின்றன..!
இசைஞானியின் வாரிசு என்ற முறையிலும், இன்றைய இளைய தலைமுறை இயக்குநர்களின் அனைவருக்கும் ராசியான கை என்பதாலும் அதிகம் எதிர்பார்க்கப்படும், எதிர்பார்க்கப்பட்ட யுவன்சங்கர்ராஜாவின் இசை அதிகம் இங்கே விமர்சிக்கப்பட்டதோ இல்லையோ.. அவரது சொந்த வாழ்க்கைதான் பத்திரிகைகளில் அதிகம் அசை போடப்பட்டிருக்கிறது..
யுவன்சங்கர் ராஜா 3-வது முறையாகத் திருமணம் செய்துள்ளதாக ஒரு செய்தி 2 நாட்களுக்கு முன் வெளியானது.. கோவையில் நடந்த நடிகர் கிருஷ்ணாவின் திருமணத்தில் தனது புதிய இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த மனைவியுடன் யுவன் கலந்து கொண்டார் என்று புகைப்படத்துடன் வந்த செய்தி அன்றைக்கு அந்த கல்யாணச் செய்தியைவிடவும் பரபரப்பாக பரவியது.
இதைவிட அதிர்ச்சியான விஷயமாக இருந்தது.. யுவன் இஸ்லாமிய மதத்துக்கு மாறிவிட்டார் என்பதுதான்..! இருக்குமா..? இருக்காதா..? என்கிற குழப்பத்தில் அனைத்துவகை செய்தித் தளங்களும் இதனை மறு பிரசுரிப்பு செய்திருந்தன.
இந்த இரண்டு செய்திகளுக்கும்தான் இன்றைக்கு டிவிட்டரில் பதில் சொல்லியிருக்கிறார் யுவன். தான் 3-வது திருமணம் செய்யவில்லை என்றும் அது பொய்யான தகவல் என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார். இருந்தாலும், தான் இஸ்லாமிய மதத்திற்கு மாறிவிட்டதை மட்டும் ஒத்துக் கொண்டிருக்கிறார்..!
இசைஞானி பழுத்த ஆன்மிகப் பழம்.. அந்தப் பழத்தில் இருந்து விழுந்து, எழுந்த இந்த விதை மட்டும் மரம் மாறி சேர்ந்தது ஏன் என்பது மில்லியன் டாலர் கேள்வி.. ஒரு தனி மனிதரின் சுதந்திரத்தில் நாம் தலையிட முடியாது என்பதால் நாம் தள்ளியே நின்று கொள்வோம்..
யுவன் எங்கே இருந்தாலென்ன..? மனது சுத்தமாகவும், அமைதியாகவும் இருப்பதற்கு இருக்கின்ற இடம் ஒருவருக்கு உதவினால், அவரைப் பொறுத்தவரையில் அது நியாயமானதுதான்..! யுவனுக்கு இஸ்லாம் அமைதியை வழங்கினால் நாம் வருத்தப்பட என்ன இருக்கிறது..? நமக்குத் தேவை அவரது இசை.. அதை மட்டு்ம் தொடர்ந்து வழங்கினால் போதுமானது..!