full screen background image

சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் – சினிமா விமர்சனம்

சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை லார்க் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.குமார் பிரம்மாண்டமாக பொருட் செலவில் தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மேகா ஆகாஷ் மற்றும் நடிகை அஞ்சு குரியன் இருவரும் நடித்திருக்கிறார்கள். சிறிய இடைவெளிக்கு பிறகு பாடகர் மனோ ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

இவர்களுடன் நடிகர் மா.கா.பா.ஆனந்த், பக்ஸ், ஷா.ரா., மொட்டை ராஜேந்திரன், கல்கி ராஜா, கே.பி.ஒய்.பாலா, ‘மைக்செட்’ அபினாஷ், நடிகை திவ்யா கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஆர்தர்.ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்ய, லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். தயாரிப்பு ஒருங்கிணைப்பு மற்றும் கலை இயக்கத்தை ஜி.துரைராஜ் கவனிக்க, பூபதி செல்வராஜ் படத் தொகுப்பாளராக பணியாற்றுகிறார். நடன காட்சிகளை நடன  இயக்குர் சாண்டி அமைக்க, சண்டை பயிற்சி இயக்கத்தை போனிக்ஸ் பிரபு மேற்கொள்கிறார். அறிமுக இயக்குநரான பி.என்.விக்னேஷ் ஷா இந்தப் படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார். இப்படத்தை 11 : 11 புரொடக்சன்ஸ் பிரபு திலக் வெளியிட்டுள்ளார். 

மிர்ச்சி சிவா படத்திற்கு போனால் காமெடி எதிர்பார்க்கலாம். ஆனால் லாஜிக் எதிர்பார்க்கக் கூடாது என்பது எழுதப்படாத விதி. இப்படத்திலும் அப்படியே ஆனால், என்னவொன்று இதில் காமெடியும் இல்லை என்பது நமது துயரம்தான்.

சிங்கிள் பசங்களுக்காக ஆர்ட்டிபிஷல் இன்டலிஜன்ட் மூலம் செல்போன் ஒன்றை தயாரிக்கிறார் ஷாரா. அந்த செல்போனை திருடர்கள் திருடிச் சென்று விடுகின்றனர்.

இந்த நிலையில் உணவு டெலிவரி வேலை செய்யும் நாயகன் சிவாவிடம் அந்த போன் கிடைக்கிறது. அதன் பிறகு சிவாவின் தேவைகளை அந்த செல்போன் நிறைவேற்றுகிறது.

ஒரு கட்டத்தில் அந்த செல்போன் சிவாவிடம் தனது காதலை சொல்கிறது. ஆனால் நீ உண்மையான பெண் கிடையாது என்று அதனை ஏற்க மறுக்கிறார். இதனால் ஆத்திரமடையும் அந்த இயந்திரம் சிவாவின் வாழ்வில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்துகிறது. இறுதியில் அந்த குழப்பங்கள் நீங்கி சிவாவின் வாழ்வில் ஒளி பிறந்ததா என்பதே கதை.

சிவா வழக்கம்‌போல தனக்கு என்ன வருமோ அதனை செய்துள்ளார். ஆங்காங்கே அவரது நகைச்சுவை வசனங்கள் ரசிக்க வைக்கின்றன. மற்றபடி ஒன்றுமில்லை. மேகா ஆகாஷ், செல்போன் அழகியாக ஜொலிக்கிறார். அவரது குட்டி, குட்டி முகபாவனைகள் ரசிக்க வைக்கிறது. அஞ்சு குரியன் அழகான காதலியாக வந்து போகிறார். மாகாபா , திவ்யா கணேஷ், மனோ அனைவரும் கொடுத்த வேலையை நிறைவாக செய்துள்ளனர்.

ஆர்தர் ஏ.வில்சனின் கேமரா வொர்க் மிகப் பெரிய பட்ஜெட் படம் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்துள்ளது. கலர்புல் காட்சிகளில் குறைவில்லை. லியோன் ஜேம்ஸின் இசையில் ‘ஸ்மார்ட்போன் சென்யோரிட்டா’ பாடல் மட்டுமே முணுமுணுக்க வைக்கிறது. பின்னணி இசையும் சிறப்பாகவே வந்திருக்கிறது.

‘எந்திரன்’ படத்தை கலாய்ப்பது போன்ற சில இடங்கள் நமக்கு போரடிக்கிறது. படத்தில் காமெடியைத் தாண்டி எதுவுமில்லை என்பதால் காமெடி சீன் அடுத்து எப்போ வரும் என்று நம்மை எதிர்பார்க்க வைத்திருக்கிறது.

இதில் போதாக்குறைக்கு உருவக் கேலி செய்யும் வசனங்களும், செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் பற்றிய உண்மைகளை உள்ளதுபடி சொல்லத் தெரியாமல் சொதப்பி வைத்திருப்பதும் படத்திற்கு மைனஸ் பாயிண்ட்டாகிவிட்டது.

படத்தின் தொடக்கத்திலேயே “இப்படத்தில் லாஜிக் பார்க்க வேண்டாம்” என்று ஸ்லைடு போடுகின்றனர். சிவா படத்துக்கு வந்தால் ரசிகர்களே லாஜிக் பார்க்கவே மாட்டார்கள். ஆனால் காமெடி படத்துக்கு தேவையான கதையைக் கையில் வைத்துக் கொண்டு திரைக்கதையில் சொதப்பி வைத்துள்ளனர். இன்னும் கொஞ்சம் காமெடிக்கு மெனக்கெட்டு இருந்தால் ஓகே படமாகவாவது வந்து இருக்கும்.

RATING : 2.5 / 5

Our Score