Signal at 11:30 – Cast & Crew
Lead Cast
Santhosh Prathap
Bhavya Trikha
Pujita Ponnada
V. Jayaprakash
Munishkanth (Ramdoss)
Aryan
Technical Crew
Writer & Director: Malarvizhi Natesan
Music Director: D. Imman
Cinematographer: Raja Bhattacharjee
Editor: R. Kalaivanan
Art Director: Muni Krishnan
Producers: Malarvizhi Natesan & Shivani Subramani
Production Banner: Alar Studios
அதிகமாக அறிமுகம் இல்லாத ஒரு பெண் இயக்குநரால் என்ன செய்துவிட முடியும்? என்ன கொடுத்துவிட முடியும்? என்று நினைப்பவர்களுக்கு எதிர்பாராத ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார் இந்தப் படத்தின் இயக்குநரான மலர்விழி நடேசன்.
நள்ளிரவு பதினோரு முப்பது மணிக்கு ஒரு குறிப்பிட்ட நெடுஞ்சாலையில், ஒரு குறிப்பிட்ட சிக்னலின் அருகே என்ன நடந்தது? என்ன நடக்கிறது? என்பதுதான் இந்தப் படத்தின் கதைக் கரு.
ஒரு youtube சேனலில் பணியாற்றுகிறார் ஹீரோயின் பாவ்யா தாரிகா. ஒரு நாள் இரவில் மிக தாமதமாக தன்னுடைய பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு கிளம்பியவர் வீடு போய் சேரவில்லை.
மறுநாள் காலையில் அவருடைய தந்தையான ஜெயப்பிரகாஷ் தன் மகளை தேடி அலைகிறார்.
அதே சேனலில் பணியாற்றும் முனீஷ்காந்தும் ஜெயபிரகாஷ் உடன் இணைந்து பாவ்யாவைத் தேடுகிறார்.
காவல்துறையிலும் புகார் கொடுக்கிறார்கள். அவர்களும் தீர விசாரிப்பதாக சொல்கிறார்கள். ஆனாலும் ஜெயபிரகாஷ் தன் முனைப்போடு தேடிக் கொண்டிருக்கிறார்.
போலீஸ் சேனல் அலுவலகத்துக்கே வந்து விசாரிக்கிறது. அப்போது “ஒரு புதிய ஷோவுக்காக இரவு நேரத்தில் நாங்கள் சென்றிருந்தோம்.
அப்போது அந்த சிக்னலில் நள்ளிரவு 11.30 மணி அளவில் பாவ்யாவை நாங்கள் தவறவிட்டோம்.
அவர் எங்கள் கண்ணில் இருந்து மறைந்துவிட்டார். அவர் எங்கே போனார் என்று எங்களுக்கு தெரியவில்லை” என்கிறார்கள் உடன் வேலை பார்த்தவர்கள்.
ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றும் சித்தார்த் என்ற சந்தோஷ் பிரதாப் தன்னுடைய அலுவலகத்தில் இருந்து மிகவும் தாமதமாக வீட்டிற்கு வருகிறார்.
வரும் வழியில் ஒரு சிக்னல் அருகில் டூ வீலர் கீழே கிடப்பதை பார்த்து காரை நிறுத்தி விட்டு வந்து விசாரிக்கிறார். அதை ஓட்டி வந்த அந்தப் பெண் “வண்டியில் ஏதோ பிரச்சனை” என்கிறார். “பரவாயில்லை. என்னுடன் காரில் வாங்க நான் ட்ராப் செய்கிறேன்” என்கிறார் சந்தோஷ். ஆனால் அந்தப் பெண் மறுக்கிறார். சந்தோஷ் அந்தப் பெண்ணை மீண்டும், மீண்டும் வற்புறுத்துகிறார். அவரும் மறுக்கிறார். இவர்கள் இருவருக்குமான பேச்சு தடித்து போய் வாக்குவாதமாக மாறுகிறது. சந்தோஷ் அவளுடைய கையைப் பிடித்து இழுக்க… அவள் அவரை கன்னத்தில் அடித்துவிடுகிறார்.
சந்தோஷ் கோபத்தில் அந்தப் பெண்ணை அறைய, அவள் மயக்கமாகிறாள். அவளை தன்னுடைய காரில் தூக்கிக் கொண்டு செல்கிறார் சந்தோஷ்.
இந்த இரண்டு நிகழ்வுகளும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் நடந்திருக்கிறது.
இதன் தொடர்ச்சி என்ன? சந்தோஷ் தூக்கிச் சென்றது பாவ்யாவையா? அல்லது வேறொரு ஆளா? பாவ்யாவுக்கு என்ன ஆனது? அவளை மீட்டார்களா? இல்லையா?
இதுதான் சைக்காலஜிக்கல், திரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் திரைக்கதை.
இடைவேளைக்குப் பின் வரும் வேறு ஒரு கதையில் சித்தார்த் தன்னுடைய அலுவலகத்திற்கு ஒரு ப்ராஜெக்ட் பற்றி பேச வந்த ‘தாரா’ என்ற பூஜிதா பொன்னாடாவை சந்திக்கிறார்.
பார்த்த மாத்திரத்தில் பூஜிதாவின் அழகில் மயங்கிய சித்தார்த் அவரைக் காதலிக்கத் துவங்குகிறார்.
பூஜிதாவைச் சந்திக்க கொடைக்கானலுக்கு நேரில் செல்கிறார் சித்தார்த். அங்கே அவருடன் பேசி, பழகி தன்னுடைய காதல், திருமண விருப்பத்தை சொல்கிறார் சித்தார்த்.
முதலில் மறுக்கும் பூஜிதா பின்பு உண்மையான காதல் அது என்பதை உணர்ந்து ஏற்றுக் கொள்கிறார்.
இருவருக்கும் திருமணம் ஆகி இப்போது பூஜிதா கர்ப்பமாகவும் இருக்கிறார்.
இந்த நேரத்தில் சித்தார்த்தின் ஆபீஸ் பார்ட்டியில் இருவரும் கலந்து கொள்கிறார்கள். ஒரு சூழ்நிலையால் பூஜிதா தான் மட்டுமே காரை ஓட்டிக் கொண்டு வீட்டிற்கு வருகிறார்.
வரும் வழியில் நான்கு பைக்குகளில் வரும் குடிகார இளைஞர்கள் தாராவின் காரை விரட்டுகிறார்கள்.
விஷயம் தெரிந்து சித்தார்த்தும் தன்னுடைய காரை எடுத்துக் கொண்டு தாராவைக் காப்பாற்ற ஓடி வருகிறார்.
இந்தக் கதையின் முடிவு என்ன என்பது முந்தைய இரண்டு கதைகளின் முடிச்சாக அமைந்துள்ளது.
சித்தார்த்தாக நடித்திருக்கும் சந்தோஷ் பிரதாப் படத்தின் மிகப் பெரிய தூண் என்றே சொல்லலாம். அவர்தான் இவரா இவர்தான் அவரா என்று படத்தின் இறுதியில் நாம் சந்தேகம் கொள்ளும் அளவிற்கு அழகியலாக நடித்திருக்கிறார்.
பூஜிதா உடனான காதல் காட்சிகளில் துணையாக சுவாரசியமான வசனங்கள் கை கொடுக்க அதை டெலிவரி செய்து பூஜிதாவின் மனதில் இடம் பிடிக்க முயலும் ரொமான்ஸ் காட்சிகள் முழுவதிலும் நம்மை ஆக்கிரமித்துவிட்டார் சந்தோஷ்.
பூஜிதா நிலைமை வேறு யாருக்கும் வரக் கூடாது என்று எண்ணித்தான் இதை செய்திருக்கிறேன் என்று பாவியாவிடம் அவர் பேசுகின்ற பேச்சும் அதன் பின் அந்த வீட்டுக்குள் நடக்கும் அடிதடி வெட்டு குத்துக்களில் தன்னுடைய மூர்க்கத்தனமான நடிப்பைக் கொட்டி இருக்கிறார்.
இறுதிக் காட்சியில் நம்முடைய மொத்த பரிதாபத்தையும் வரவழைத்து ஐயோ பாவம் என்று நாமே கெஞ்சுகின்ற அளவுக்கு தன்னுடைய நடிப்பால் நம்மை கவர்ந்துவிட்டார்.
அவருடைய இறுதி முடிவு நாம் எதிர்பாராதது என்றாலும் இந்தப் படத்திற்கு அது தேவைதான் என்பதால் வருத்தமில்லை.
பூஜிதா சொன்னாரா மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் கட்டி இழுத்துவிட்டார். அந்தக் காலத்து ராதாவை போல வட்டமான, வடிவான முகம். கல்யாண முகம். கவர்ச்சியான தோற்றம். அனைத்திலும் சினிமா ரசிகர்களை கவர்ந்திழுக்கும் அத்தனை அம்சங்களையும் கொண்டிருக்கிறார்.
சந்தோஷ் உடனான முதல் சந்திப்பில் சற்று கோபமாகி பின்பு ப்ராஜெக்ட்டை எடுத்துரைக்கும் போது ஸ்டைலாக பேசுவதிலேயே சந்தோஷ் மட்டுமல்ல; நாமும் கவிழ்ந்துதான் போனோம்.
கொடைக்கானல்வரையிலும் துரத்தி வந்து சந்தோஷ் தன் காதலை சொல்லும்போது அதை ஏற்க மறுத்து அதே பாணியில் திருப்பி பதில் சொல்வதெல்லாம் ஒரு சுவையான காட்சி என்றாலும் அதில் பூஜிதாவின் நடிப்பு ஒரு குலோப்ஜாமூன்.
குடிகார இளைஞர்களிடம் மாட்டிக் கொண்டு பதற்றத்துடன் காரை ஓட்டிக் கொண்டே அவர் சந்தோஷ் உடன் பேசுகின்ற பொழுதும், அந்தக் கார் விரட்டும் காட்சி முழுவதிலும் ஒரு படபடப்பை நமக்கும் கடத்தி இருக்கிறார் பூஜிதா.
இவர் இன்னும் நிறைய படங்களில் நடித்து பெயர் எடுக்கலாம். புகழை சம்பாதிக்கலாம். ஆனால், எல்லாமும் நல்லதொரு இயக்குநர்களின் கைகளில் இருக்கிறது. நடக்கும் என்று நம்புவோம்.
இன்னொரு ஹீரோயினாக நடித்திருக்கும் பாவ்யா தாரிகாவும் தன்னுடைய அசத்தலான நடிப்பை கொடுத்திருக்கிறார். அறிமுகக் கட்சியில் மிரட்டுவது போல இரண்டு சீன்களில் அசத்தியிருந்தார். அதுவே இந்தப் படத்தின் தன்மையை சொல்லிவிட்டது.
சந்தோஷிடம் மாட்டிக் கொண்டு தப்பிக்க நினைக்கும் பொழுதும் அவருடைய சோக கதையை முழுமையாக கேட்டுவிட்டு ஒரு பரிதாப உணர்வை அவர் காட்டும் பொழுது, அதே உணர்வு நமக்கும் வந்தது.
மருத்துவமனையில் சந்தோஷை நான்கு ஆண்டுகளாக வைத்து காப்பாற்றி ட்ரீட்மெண்ட் கொடுத்து அவரை குணப்படுத்த முயலும் மருத்துவர் கேரக்டரையும் சிறப்பாக செய்திருக்கிறார்.
மகளைத் தேடி அலையும் ஜெயப்பிரகாஷும் படத்தில் ஒரு கதாபாத்திரமாகவே வந்து சென்றிருக்கிறார். அவர் முனீஷ்காந்துடன் பேசுகின்ற பேச்சும், அலுவலக ஹெச் ஆர் மேனேஜரிடம் பேசி கோபப்படும் காட்சியிலும் மிக மிக இயல்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜி தன்னால் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு இந்தப் படத்தின் தரத்தை தன்னுடைய ஒளிப்பதிவு மூலமாக உயர்த்தி இருக்கிறார்.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் இரவிலேயே நடப்பதால் அந்த இரவு நேரத்தின் இருட்டையும், அமைதியையும், சாலையின் வெறுமையையும் எவ்வளவு காட்டி ஒரு பயமுறுத்தலை தர முடியுமா அதை செய்திருக்கிறார்.
பூஜிதாவின் கார் துரத்தலை பரபரப்பான சேசிங்காக மாற்றி கொடுத்ததில் ஒளிப்பதிவாளருக்கும் மிகப் பெரிய பங்கு உண்டு.
இரண்டு நாயகிகளோடு நாயகன் சந்தோஷையும் மிக அழகாக காட்டியிருக்கிறார். சண்டை காட்சிகளில் சண்டை இயக்குநரோடு மிகவும் ஒத்துழைப்பு கொடுத்து அந்தக் காட்சிகளை ஹாலிவுட் ஸ்டைலில் படமாக்கியிருக்கிறார். இதற்காக சண்டை இயக்குநருக்கும் நமது தனி பாராட்டுக்கள்.
டி.இமானின் இசையில் பாடல்கள் மெலடி ரகமாக அமைதியான நீரோடையாக அழகாக ஒலிக்கிறது.
‘ஜோ ஜோம்மா.. நான் பெற்ற ராணி’ என்ற பாடலும், ‘நீ இன்றி’ பாடலும் இமானின் பெயரைச் சொல்லும் அளவுக்கு செம மெலடியாக அமைந்துள்ளன.
இந்தப் பாடல் காட்சிகளை வடிவமைத்தவிதமும், காட்சிகளும் அழகோ அழகு. படத்தின் கதையையும் சேர்த்தே சொல்லி இருக்கின்றன.
‘போகப் போகப் போகாதே’ என்ற படத்தின் தீம் பாடலை, கடைசியாக வைத்ததற்குப் பதிலாக சந்தோஷ் யார் என்று தெரிந்த பின்பு சட்டென்று அதை இடைமறித்து நுழைத்திருக்கலாம். நன்றாக இருந்திருக்கும்.
எங்கோ ஒரு மன நோயாளியின் மனதில் இருக்கும் கதையை தோண்டி எடுத்து, அதைத் திரைக்கதையாக்கி, வசனங்களை எழுதி, காட்சிகளாக திரைக்கதையில் பிரித்து…. அதையும் உண்மையான கதை போல் நம்ப வைக்கும் திறமை சில இயக்குநர்களிடம் மட்டும்தான் இருக்கும்.
அந்த வழியில் இந்தப் படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் மலர்விழி நடேசன் தமிழ் சினிமாவில் இந்த ஆண்டில் வெளிவந்த படங்களில் ஒரு மிகச் சிறந்த திரைப்படமாக இதைக் கொடுத்திருக்கிறார். அவருக்கு நமது பாராட்டுக்கள்.
மூன்று கதைகளைக் காட்டி அதன் தொடர்ச்சியில் இரு வேறு திரைக்கதையில் பயணிக்க வைத்து கடைசியாக அந்த இரண்டையும் ஒரு புள்ளியில் இணைத்து இதுதான் இந்த படக்கதையின் துவக்கம் என்று சொல்லி முடிப்பதெல்லாம் ஒரு மிகப் பெரிய திறமை.
இயக்குநரின் இந்த வித்தையில் படம் பார்க்க வரும் ரசிகர்கள் நிச்சயம் சிக்கிக் கொள்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
2022-ல் துவங்கி 2026-ல் முடியும் ஒரு கதைக் களம். ஆள் அரவமற்ற ஒரு இரவு நேரம். பிரதான நெடுஞ்சாலை. யாருமே இல்லாத ஒரு சிக்னல். அதன் அருகில் நடக்கும் ஒரு சம்பவம். இதன் தொடர்ச்சியாக ஒரு மனிதனுக்கு ஏற்படும் மனப்பிறழ்வு… இதை வைத்து மிக அழகான கதையாக இதை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் மலர்விழி நடேசன்.
அனைத்துமே நிஜமாக நடப்பதை போல நம்மை நம்ப வைத்து இறுதியில் எல்லாமே ஒரு மனப்பிறழ்வினால் உண்டான கற்பனைக் கதைதான் என்று சொல்லியிருக்கும் இயக்குநரின் எழுத்துத் திறமைக்கும், இயக்கத் திறமைக்கும் நமது கிரேட் சல்யூட்!
RATING : 4 / 5









