full screen background image

டெலிவரி பாய் – சினிமா விமர்சனம்

டெலிவரி பாய் – சினிமா விமர்சனம்

Delivery Boy Cast & Crew Details

Cast

Radhika Sarathkumar
Leo Sivakumar
Brigida Saga
Kali Venkat
Jenson Dhivakar
Bose Venkat
Dushyanth
Udaya Deep
& Others

Crew

Written & Directed by: Nani
Producers: Amutha Leoni, Lenin Matheswaran
Banners: ASASI Creations, Chandi Talkees

DOP: Ashokkumar Raj, Prasanna S Kumar
Music: Sundaramurthy KS
Editor: R. Vasanthakumar
Stunt: Phoenix Prabu
Art Director: P. Jai Murugan
Dialogues: Nandamanivasagam
Production Controller: Sundarsivam
Co-Directors: Rajini Ramesh, S.R. Ashwinbarath, Kaushik R. Arrjun
VFX: iSquare Media
Sound Mixing: Rashid 

ஒரு டெலிவரி பாயின் வாழ்க்கையில் நடக்கும் பரமபத விளையாட்டுதான் இந்தப் படம்!

கோவை அருகில் இருக்கும் துடியலூர் கிராமத்தில் வசிக்கும் ஹீரோ லியோ சிவக்குமார். டெலிவரிபாயாக வேலை பார்த்து வருகிறார். கூடவே அதே ஊரில் இருக்கும் தேன்மொழி என்ற ஹீரோயினையும் காதலித்து வருகிறார்.

ஹீரோவுக்கு அப்பா இல்லை. அம்மா ராதிகா மட்டுமே.! வீட்டு வாசலில் இட்லி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார் அம்மா ராதிகா. ஒரு நாள் ராதிகா திடீரென்று ஒரு விபத்தில் சிக்குகிறார்.

“உடனடியாக ஆபரேஷன் செய்தால்தான் அம்மாவை காப்பாற்ற முடியும்” என்று மருத்துவர்கள் நெருக்கடி கொடுக்க 5 லட்சம் பணம் தேடி அலைகிறார் சிவக்குமார்.

கடைசியாக ஒரு நண்பனிடமிருந்து கிடைத்த இரண்டு லட்ச ரூபாயை வாங்கிக் கொண்டு போகும் பொழுது, இன்னொரு இளைஞன் அந்தப் பணத்தைப் பறித்துக் கொண்டு போகிறான்.

அவனை விரட்டி சென்று பிடிக்கும்போது அவனுடைய சிறு வயது பையன் மருத்துவமனையில் சீரியஸாக இருப்பதாகவும் அதற்குத்தான் அந்த பணம் தேவைப்படுவதாகவும் அந்த இளைஞன் கதறுகிறான்.

அதனால் வேறு வழி இல்லாமல் அந்த இரண்டு லட்ச ரூபாயை விட்டுவிட்டு மனம் வெறுத்துப் போய் திரும்புகிறார் ஹீரோ.

வரும்பொழுது ஒரு ஏ.டி.எம். வாசலில் கையில் பணத்தை வைத்து எண்ணிக் கொண்டிருக்கும் துஷ்யந்தை பார்த்தவுடன் ஹீரோவின் மனது மிருகமாகிறது.

நொடிப் பொழுதில் துஷ்யந்திடமிருந்து அந்தப் பணத்தைப் பறித்துக் கொண்டு ஓடுகிறார் ஹீரோ. வழியில் ஒரு விபத்தில் சிக்கப் போகும் நிலையில் இருந்த ஹீரோவை துஷ்யந்த் காப்பாற்றிவிட்டு அந்தப் பணத்தைக் கேட்காமலேயே சென்று விடுகிறார்.

அந்தப் பணத்தை வைத்து தன் அம்மாவை காப்பாற்றுகிறார் ஹீரோ. அதற்குப் பிறகு அம்மாவின் உடல்நிலை சரியான பின்பு கொஞ்சம், கொஞ்சமாக பணம் சேர்த்து இப்போது அந்த இரண்டு லட்ச ரூபாயை கையில் வைத்துக் கொண்டு தான் யாரிடம் இருந்து பணத்தை பறித்தோமோ அவரிடம் அதை திருப்பிக் கொடுக்கலாம் என்று துஷ்யந்தைத் தேடி சென்னைக்கும், கோவைக்குமாக அலைகிறார் ஹீரோ.

வெளிநாடு சென்றிருந்த துஷ்யந்த் திரும்பி வரும் நிலையில் போலீசாரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படுகிறார்.

அவரை பார்ப்பதற்காக ஓடோடி வரும் ஹீரோ போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று துஷ்யந்தைத் தேடுகிறார். அவர் கிடைக்கவில்லை என்றாலும் வேறோரு சந்தர்ப்பத்தில் அவரை சந்திக்கிறார்.

அப்போது துஷ்யந்தை சுற்றிலும் ஒரு நெருக்கடி சூழ்ந்து இருப்பதை அறிகிறார் ஹீரோ.

இப்போது துஷ்யந்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஹீரோவுக்கு வர அவரைக் காப்பாற்றியே தீருவேன் என்று சொல்லி அவருடனேயே இருக்கிறார் ஹீரோ.

துஷ்யந்தை சுற்றி இருக்கும் நெருக்கடி என்ன? அவருக்கு நெருக்கடி கொடுப்பவர்கள் யார்? ஹீரோ என்ன செய்தார்? துஷ்யந்த் காப்பாற்றப்பட்டாரா? இல்லையா? ஹீரோ ஊர் திரும்பி திருமணம் செய்தாரா? இல்லையா? என்பதெல்லாம் இந்தப் படத்தின் பிற்பாதி கதை.

எந்த லேபிளிலும் சிக்காமல் ஒரு ஹீரோவாக தொடர்ந்து நடித்து வரும் லியோ சிவக்குமார், இந்தப் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருக்கு பொருத்தமானதும்கூட.

அம்மாவுடன் பாசம், தேன்மொழி என்ற தனது காதலியின் ஊடான நெருக்கம்.. ரொமான்ஸ் என்று சாதாரணமான ஒரு ஹீரோ போலவே துவக்கத்தில் வலம் வரும் லியோ, பின்பு சட்டென்று தடம் மாறுகிறார்.

அம்மாவைக் காப்பாற்ற துடிக்கின்ற துடிப்பும், தன்னிடமிருந்து பணம் பறித்தவனின் வாழ்க்கைக் கதையை கேட்டவுடன் சட்டென்று அதை கொடுத்துவிட்டு திரும்பி பார்க்காமல் நடக்கின்ற பொழுது அவர் முகம் காட்டும் நடிப்பு அழகு.

துஷ்யந்த் தன்னை எதுவும் செய்யாமல் போவதை நம்ப முடியாமல் திகைத்துப் போய் நடுரோட்டில் விழுந்து கிடக்கின்ற அந்தக் காட்சியிலும் அவருடைய நடிப்பு அபாரம். மிகச் சிறப்பாக லியோவிடமிருந்து நடிப்பை வரவழைத்து இருக்கிறார் இயக்குநர்.

துஷ்யந்தை தேடி அலைகின்ற பொழுதும் அவரை சந்தித்து தன்னுடைய நன்றிக் கடனை அவர் தெரிவிக்கின்ற பொழுதும் நிஜமாகவே படம் பார்க்கின்ற ரசிகர்களின் மனதைத் தொட்டுவிட்டார் லியோ.

அம்மாவின் உயிரை காப்பாற்றிய நண்பரின் உயிரை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைக்கும் அளவுக்குத் துணியும் கடைசி கட்ட காட்சிகளில் நடிப்பைப் பெரிதும் கொட்டியிருக்கிறார்.

கிளைமாக்ஸ் சண்டை காட்சிகளில் உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறார் என்பது படத்தைப் பார்க்கும் பொழுது தெரிகிறது. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

சாதாரணமான அம்மா என்றாலே நடிப்பை தெறிக்க விடும் கலையரசி ராதிகா இந்தப் படத்திலும் பாசமான அம்மாவாக தனக்கு கிடைத்த காட்சிகளில் எல்லாம் ஸ்கோப் செய்திருக்கிறார்.

அவருடைய இயல்பான நடிப்பு எப்போதும்போல் ரசிக்க கூடியதாக இருக்கிறது. அதிலும் அம்மாவுக்கு தெரியாமல் காதலியின் டிபன் பாக்சில் வடையை வைக்கும் பொழுது அதைப் பார்த்துவிட்டு அதற்கும் சேர்த்து பில் போடும் அந்தக் காட்சியில் ராதிகாவின் நடிப்பு ஸ்டைலை வேறு எந்த நடிகையால் செய்ய முடியும் என்று யோசிக்க வைக்கிறது.

ஜென்டில்மேன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் துஷ்யந்த். எளிமையான மனிதனாகவும், கருணை உள்ள நண்பனாகவும் அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் மிகவும் பிடித்திருக்கிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துஷ்யந்தைக் காப்பாற்ற துடிக்கும் கேரக்டரில் போஸ் வெங்கட் மிகவும் அமைதியாக நடித்திருக்கிறார்.

வில்லன்களாக நடித்திருக்கும் அந்த ஏழு பேரும் வெறித்தனமாக தங்களுடைய நடிப்பை கொட்டி இருக்கிறார்கள். அதிலும் அந்த சண்டை காட்சியில் அவர்கள் காட்டியிருக்கும் மூர்க்கம் மிகக் கொடூரம். எப்படி அவர்களை இப்படியொரு சண்டை காட்சிகள் நடிக்க வைத்தார்கள் என்று தெரியவில்லை. சண்டை பயிற்சியாளர் பினிக்ஸ் பிரபுவுக்கு நமது பாராட்டுக்கள்.

ஹீரோயினாக படத்தின் முற்பதியில் மட்டும் வந்து செல்லும் பிரிகடா சாதாரணமான ஒரு கிராமத்து பெண்ணுக்கு ஏற்ற வேடத்தில் அடித்திருக்கிறார் பிற்பகுதியில் அவரும் சென்னை வரும்படியாக திரைக்கதையில் இணைத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

லியோவின் நண்பனாக நடித்திருக்கும் காளி வெங்கட், துஷ்யந்தின் நண்பர்களாக நடித்திருப்பவர்கள் என்று பலருமே இயக்குநரின் சிறப்பான இயக்கத்தால் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர்கள் அசோக்குமார் ராஜ், பிரசன்ன குமார் இருவருமே தங்களுடைய ஒளிப்பதிவு பணியை கச்சிதமாக செய்து இருக்கிறார்கள்.

கூடவோ, குறைவோ இல்லாமல் முதலில் இருந்து கடைசி வரையிலும் ஒளிப்பதிவு ஒரே மாதிரியாகவே இருக்கிறது.

இடையில் வரும் ஒரு குத்து பாடலுக்கு மட்டும் அதற்கான நேட்டிவிட்டியோடு ஒளிப்பதிவினை கலர்ஃபுல்லாக அமைத்திருக்கிறார்கள்.

கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். டூயட் பாடல் ரொமான்ஸை கூட்டி இருக்கிறது சோகப் பாடல்கள் மனதை தொடுகின்றன. பாடல் வரிகள் மிக எளிமையாக நம் காதில் நுழைகின்றன.

பின்னணி இசையில் அடித்து ஆடியிருக்கிறார். பணத்தைத் தேடி ஓடும் அந்த ரேஸிங் காட்சிகள் முழுவதிலும் சண்டை இயக்குநர், இசையமைப்பாளர், படத் தொகுப்பாளர் மூவருமே அட்டகாசமாக வேலை செய்திருக்கிறார்கள். அதிலும் கிளைமாக்ஸ் சண்டை காட்சியில் தெறிக்க வைத்திருக்கிறது பின்னணி இசை.

ஒரு அழகான, எமோஷனலான கதை இது.

படம் பார்க்கும் அத்தனை பேரையும் மனம் கனக்க வைக்கும் அளவுக்கான கதைக் கருவை இந்தப் படம் கொண்டுள்ளது.

திருடிச் சென்ற பணத்தை திரும்ப கொடுத்து மன்னிப்பு கேட்கும் ஒரு எளிய மனிதன்… அந்த பணத்தை விட்டுக் கொடுத்துப் போகும் ஒரு படித்த இளைஞன்… எப்படியாவது தன்னுடைய மகனின் உயிரை காப்பாற்ற துடிக்கும் ஒரு ஏழை இளைஞன்…

இப்படி இவர்களின் எமோஷன்ஸ் மொத்தத்தையும் படத்தின் பிற்பகுதியில் அழகாக கொண்டு சென்று இருக்கிறார் இயக்குநர்.

துஷ்யந்த் வெளிநாட்டுக்கு கிளம்புகின்ற வரையிலும் இந்த படம் மிகவும் நீட்டாக சென்று கொண்டிருந்தது. அதற்கு பிறகு திடீரென்று டிராக் மாதிரி ஹீரோயினாக மாறிவிட்டது பெரும் வருத்தம். இந்தக் கதை இப்படி சென்றிருக்கக் கூடாது.

அந்த சண்டை காட்சிகளே இல்லாமல் மாற்றி அமைத்திருக்கலாம். ஹீரோயிசம் எப்பொழுது எழுகிறதோ அப்போது கதை அம்சம் கீழே தாழ்ந்துவிடும். அதுதான் இந்த படத்துக்கு நிகழ்ந்துள்ளது.

ஹீரோ லியோ சிவக்குமார் மிகச் சிறப்பாக சண்டையிடுவார். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அதை நிரூபிக்க வேண்டிய படம் இது அல்ல என்பது நமது கருத்து.

அந்த ஏழு ரவுடிகளின் கதையையும் இல்லாமல் வேறு ஒரு பிரச்சனையில் துஷ்யந்த் சிக்கியிருப்பதாகவும் அவரை அதே இரண்டு லட்ச ரூபாய் மணத்தை வைத்து ஹீரோ காப்பாற்றுவதாகவும் மாற்றி அமைத்து இருந்தால் படம் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்.

ஆனாலும், ஒரு மனதைத் தொடும் கதையில் முடிந்தவரையில் நம்மை கடைசி வரையிலும் படத்தைப் பார்க்க வைத்திருக்கும் இயக்குநருக்கு நமது மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

RATING : 3.5 / 5

Our Score