நடிகர்கள் :
நிவின் பாலி – ஜஸ்டின்
மமிதா பைஜு – ஆஷ்லி
சங்கீத் பிரதாப் – ஜோயல்
பிந்து பணிக்கர் – குஞ்சான்டி
சுரேஷ் கிருஷ்ணா – பைஜு எஸ்
வினய் சூஃபோர்ட் – அலெக்ஸ்
ஸ்ரிந்தா – ரேஷ்மா
ஷமீர் கான் – பிரிண்டோ
மீனாட்சி ரவீந்திரன் – ரியா
அயசங்கர் கரிமுட்டம் – தங்கச்சாஜ்
தங்கம் மோகன் – ரோசிலி
வெட்டுக்கிளி பிரகாஷ் – டேவிஸ்
தொழில்நுட்பக் குழு:-
இயக்கம் – கிரிஷ் ஏ.டி
தயாரிப்பாளர்கள் – திலீஷ் போத்தன், ஃபஹத் ஃபாசில், ஷ்யாம் புஷ்கரன்
இசை – விஷ்ணு விஜய்
எழுத்தாளர்கள் – கிரிஷ் யுனு, கிரண் ஜோசி
ஒளிப்பதிவு – அஜ்மல் சாபு
படத்தொகுப்பு – ஆகாஷ் ஜோசப் வர்கீஸ்
கலை இயக்கம் – ஆஷிக் எஸ்
டப்பிங் இயக்கம்: ஆர்.பி. பாலா
ஆடை வடிவமைப்பு – தன்யா பாலகிருஷ்ணன்
ஒலி வடிவமைப்பு – சங்கரன் ஏ.எஸ்., கே.சி. சித்தார்தன்
பாடல் வரிகள் – சுஹைல் கோயா, விநாயக் சசிகுமார்
சண்டைக் காட்சிகள் – சந்தோஷ்
தயாரிப்பு நிர்வாகி – ஜம்ஷீர் புரக்காட்டிரி
விஎஃப்எக்ஸ் – எக் வைட் விஎஃப்எக்ஸ்
நிர்வாக தயாரிப்பாளர்கள் – பென்னி கட்டப்பனா, ஜோஸ் விஜய்
பத்திரிக்கை தொடர்பு: யுவராஜ்.
மலையாள சினிமாவில் எந்த ஒரு கதைக் களமாக இருந்தாலும் அதை உச்சமான நிலைமைக்கு கொண்டு போகாமல் இயல்பு தன்மையோடு சொல்லியே பழகி விட்டார்கள்.
தமிழ் சினிமாபோல் கோபம், ஆத்திரம், அழுகை, வீரம், வெறுப்பு என்று சினிமாவில் காட்டப்படும் அத்தனை உணர்வுகளையும் வகைப்படுத்தும்படியாக இல்லாமல் ஒரு மென்மையான தன்மையைப் பயன்படுத்தி கதை சொல்லும்போக்கு மலையாள சினிமாவில் அதிகம் உண்டு.
அந்த வகையில் சினிமாவில் அழியாத சப்ஜெக்டாக இருக்கும் காதலை முன் வைத்து வந்திருக்கும் இந்தப் படம் ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கிறது.
கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிரப்பள்ளி நகரின் அருகே இருக்கும் ஒரு சிறு கிராமம் முண்டக்கயம்.
இந்தக் கிராமத்திலிருந்து எர்ணாகுளம் அருகே இருக்கும் கருங்காட்டி என்ற பகுதிக்கு குடி வருகிறார் ஆஷ்லி என்ற மமீதா பைஜு.
இவருடைய அப்பாவின் தீவிரமான குடிப்பழக்கம் காரணமாகத்தான் இந்தக் குடும்பம் அங்கிருந்து இங்கே வந்திருக்கிறது.
அதோடு மமீதா தான் படித்த கல்லூரியில் படிப்பையும் விட்டுவிட்டு இங்கே எர்ணாகுளம் அருகில் இருக்கும் வேறொரு கல்லூரியில் சேர்ந்து தொடர்ந்து படிக்கிறார்.
இவருடைய வீட்டுக்கு நேர் எதிர் வீட்டில் இருப்பவர் ஜஸ்டின் என்ற நிவின் பாலி. வயது முப்பதை தாண்டிவிட்டாலும் இன்னமும் திருமணம் ஆகவில்லை. திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் அவருக்கு இல்லை.
இவருடைய தம்பியான ஜோயல் ஷார்ட் பிலிம் எடுக்கிறேன் என்று சொல்லி நிவின் பாலியை மேலும் கடனாளியாக்கிக் கொண்டிருக்கிறான்.
மமீதாவும், நவீன் பாலியும் அடிக்கடி சந்திக்கிறார்கள். இந்த சந்திப்பின்போது நவீன் பாலின் மீது அந்தப் பகுதி மக்களும், இளைஞர்களும் வைத்திருக்கும் அன்பும், பாசமும் மமீதாவை கவர்கிறது. அதனால் அவர் மீது தன் பார்வையை அழுத்தமாக பதிக்கிறார் மமீதா.
மமீதாவின் இந்தக் கவனிப்பு கொஞ்சம் கொஞ்சமாக நவீன் பாலியை நோக்கி காதலில் தள்ளுகிறது. தானும் அந்தக் காதலில் விழுந்துவிட்டதாக ஒரு நாள் உணர்கிறார் நவீன் பாலி. இவர்கள் இருவரும் காதலிப்பதாக ஒத்துக் கொள்கிறார்கள்.
இந்த விஷயம் மமிதாவின் மாமா மூலமாக அவரது அம்மாவுக்கு தெரிய வர அவர் அதை விரும்பவில்லை. மமிதாவை கோழிக்கோடு அருகில் வசிக்கும் அவருடைய பாட்டி வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
மமீதாவை கடத்தி வந்து திருமணம் செய்ய நவீன் பாலிக்கு விருப்பமில்லை. இரண்டு குடும்பத்தினரின் சம்மத்துடன்தான் திருமணம் நடக்க வேண்டும் என்று நினைக்கிறார்.
ஆனால், மமிதாவின் அம்மாவோ அவரை அயர்லாந்துக்கு அனுப்பி வைக்க பெரும் முயற்சி எடுக்கிறார்.
இன்னொரு பக்கம் மமீதா இனிமேல் நிவின் பாலியை நினைக்கமாட்டேன் என்று அவருடைய குடும்பத்தினரிடம் சத்தியம் செய்கிறார். இந்த செய்தியும் நிவின் பாலிக்கு வந்து சேருகிறது.
குடும்பத்தினரும், அவருடைய நண்பர்களும் இந்தக் காதலை எப்படியாவது சேர்த்து வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்கான முயற்சியையும் எடுக்கிறார்கள்.
அவர்களுடைய விருப்பம் நிறைவேறியதா? இவர்கள் இருவரின் திருமணம் நடந்தேறியதா? என்பதுதான் இந்தப் படத்தின் சுவையான திரைக்கதை.
நிவின் மாலியின் தோற்றம் வயது முப்பதை தாண்டியது போலவே தெரிவதால் அந்த யதார்த்தமே இந்தப் படத்தில் அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்சாக காட்டப்பட்டுள்ளது.
தற்செயலாக மமீதாவை அவர் சந்திக்கும் காட்சிகளில் மமீதா அவரைப் பார்த்தவுடன் விருட்டென்று ஓடுவதும் அதை பார்த்து நிவின் ஜெர்க்காகி நிற்பதும் ஒரு சுவையான காட்சி.
இதன் பின்பு இருவரும் சந்திக்கும் பொழுது நிவினுக்குள் ஏற்படும் அந்த தடுமாற்றமே அவருடைய காதலின் முதல் படியாக இருக்கிறது. அந்த உணர்வை மிக அழகாக, இயல்பாக காட்டியிருக்கிறார் நவீன் பாலி.
தம்பிக்காக அடிதடிவரையிலும் இறங்குகிறார் நிவின். அந்த சண்டை காட்சிகளில்கூட சினிமா சண்டைபோல் இல்லாமல் மிக எதார்த்தமான காட்சிகளாக அமைத்து இருப்பதால் அதிலும் ஸ்கோர் செய்திருக்கிறார் நிவின்.
பாடல் காட்சிகளின் மாண்டேஜ் ஷாட்டுகளில் அவர் காட்டுகின்ற முக பாவனைகளும் நடிப்பும்.. பொதுவாக நடிகைகளிடம் மட்டுமே கிடைக்கும். அதை நிவின் கைப்பற்றிவிட்டார் என்றே சொல்லலாம்.
தன்னுடைய வயதுக்கேற்ற பக்குவத்துடன் மமீதாவை கடத்தி வந்து திருமணம் செய்ய மாட்டேன் என்று உறுதியாக அவர் சொல்லும்பொழுது கை தட்ட வைத்துவிட்டார். இதுதான் உண்மையான காதல் என்று நாம் சொல்லலாம்.
நிவின் இங்கே விரும்புவது மற்றவர்களுக்காக செய்யப்படும் காதல் அல்ல. அவருடைய திருமணத்திற்காக செய்யப்படும் காதல் என்பதால் இந்தக் காதலை நாம் வரவேற்கும் அளவுக்கு தன்னுடைய நடிப்பில் நியாயப்படுத்தி இருக்கிறார் நிவின் பாலி.
இன்னொரு பக்கம் மமீதா பைஜு தன்னுடைய சிறப்பான நடிப்பினால் பெண் ரசிகைகளையும் கவர்ந்து இழுத்து இருக்கிறார்.
அவருடைய முகத்தில் காட்டும் சின்ன, சின்ன காதல் உணர்வுகள்.. வெட்கப்படுவது, கோபப்படுவது, கிண்டல் செய்வது என்று மமீதாவுக்கு வைத்திருக்கும் குளோஸப் ஷாட்டுகளே அவரை மிகவும் பிடிக்க வைத்திருக்கிறது.
மமீதாவின் அம்மாவாக, அப்பாவாக நடித்தவர்கள், நிவின் பாலியின் அம்மா, அப்பாவாக நடித்தவர்கள் என்று இரு தரப்பு பெற்றோரும் தனித்தனி கேரக்டர் ஸ்கெட்ச்சுகளில் கவனிக்க வைத்திருக்கிறார்கள்.
நிவின் பாலியின் 45 வயது நண்பராக நடித்திருக்கும் பைஜூவும் பல இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார். இவருடைய தம்பியாக நடித்திருக்கும் சந்தீப் பிரதாப்பும் ஒரு அழகான நடிப்பை கொடுத்திருக்கிறார். படம் முழுவதும் துரு துரு என்று ஓடிக் கொண்டே இருக்கும் சந்தீப் இளைஞிகளை கவர்வார் என்பதில் சந்தேகம் இல்லை.
ஜோயலின் மைத்துனராக நடித்தவரும் படத்தின் இரண்டாம் பாதியில் கலகலப்புக்கு பெரும் உதவியை செய்திருக்கிறார்.
மமீதாவின் மாமாவாக நடித்திருக்கும் வினய் போர்ட்டும் சில காட்சிகளில் சிரிக்க வைத்திருக்கிறார். அதோடு படத்தின் திரைக்கதையை நகர்த்தவும் உதவி இருக்கிறார்
இயக்குநரின் சிறப்பான இயக்கத்தினால் நடிகர்களில் அத்தனை பேருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இதேபோல் தொழில் நுட்ப கலைஞர்களும் தங்களது பங்களிப்பை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் அஜ்மல் சப் முதல் கட்சியிலிருந்து இறுதி வரையிலும் ஸ்கிரீன் முழுவதிலும் அழகு உணர்ச்சியை கொண்டு வந்திருக்கிறார்.
கேரளா என்பதால் இயற்கை அழகை மட்டுமே கொடுக்காமல் இருவரின் வீடுகளின் உட்புறம், சர்ச் கல்லூரி, மைதானம், சாலைகள் என்று அந்தப் பகுதியை சுற்றி வளைத்து படமாக்கி இருக்கிறார்.
அதோடு சில முக்கியமான காட்சிகளில் நடிகர், நடிகரின் குளோசப் சாட்டுகளை ரசிக்கும் வகையில் அமைத்து அவர்களின் நடிப்பை பெரிதும் ரசிக்க வைத்திருக்கிறார்.
விஷ்ணு விஜய்யின் இசையில் பாடல்களின் இசையும் அசத்தல் ரகம். தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பாடல்களின் எளிய வரிகள் நம் காதுகளில் விழுகின்றன. இசையும் அசத்தலாக இருப்பதால் பாடல்கள் அனைத்துமே கேட்கும் படியாக உள்ளது. பின்னணி இசையிலும் குறை இல்லாமல் இசைத்திருக்கிறார். சண்டை காட்சிகளில் இசை காட்டுகின்ற அந்த வேகமே அந்தக் காட்சியின் தாக்கத்தை அதிகப்படுத்தி இருக்கிறது.
படத் தொகுப்பாளராக ஆகாஷ் ஜோசப் பர்கீஸ் இந்தப் படம் மொத்தக் குடும்பத்தினரையும் கவரக் கூடிய குடும்பக் கதை என்பதால் அதற்கேற்றவாறு காட்சிகளை தொகுத்து கொடுத்திருக்கிறார்.
ஒவ்வொரு காட்சியிலும் எதிரில் இருப்பவரின் ரியாக்ஷனை விட்டுவிடாமல் பதிவு செய்திருப்பதால் நமக்கும் உடனுக்குடன் சிரிப்பு வந்துவிட்டது.
படம் நெடுகிலும் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை நகைச்சுவை தெளித்துக் கொண்டே இருப்பதற்கு முழுமையான காரணம் இந்த எடிட்டர்தான்.
இந்தப் படத்தை எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் கிரிஷ் ஏ.டி., பழமையான காதல் என்ற அந்த சப்ஜெக்டை புதுமையான திரைக்கதையில் எதார்த்தமான நடிப்பினால் அழகாக படப் பதிவு செய்து நமக்கு கொடுத்து நம்மை சிரிக்க வைத்திருக்கிறார்.
இன்னொரு பக்கம் சிச்சுவேஷன் காமெடி என்று சொல்லப்படும் அளவுக்கு திரைக்கதைகளும், பல வசனங்களின் மூலமாகவும் நகைச்சுவையை கொடுத்து நம்மை சிரிக்கவும் வைத்திருக்கிறார்
படம் முழுவதிலும் ஒரு கண்ணியமான காட்சி அமைப்புகளாலும், குளிர்ச்சியான வசனங்களினாலும் இப்படி ஒரு சம்பவம் நம் வீட்டில் நடந்தால் நாம் எப்படி அதை எதிர்கொள்வோம் எதிர்கொள்ள வேண்டும் என்பதை நமக்கு சொல்லிக் கொடுக்கும்விதமாகவும் இந்தபா படத்தினை நன்கு வடிவமைத்து உருவாக்கி கொடுத்திருக்கிறார். இதற்காக இயக்குநருக்கு நமது மனமார்ந்த பாராட்டுக்கள்.
படத்தில் குறை எதுவுமே இல்லையா என்று கேட்டால் இருக்கிறது.
முதலில் மமீதாவின் அம்மா இந்தக் காதலை ஏன் எதிர்க்கிறார் என்பதற்கான வலுவான காரணத்தை எந்த இடத்திலும் இயக்குநர் சொல்லவில்லை. ஏன் என்றும் தெரியவில்லை.
அடுத்தது அதிகமான குடியை படம் முழுவதும் காட்டி இருப்பதுதான். அதோடு பெண்களும் குடிப்பது போல காட்சிகளை வைத்திருப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது.
கேரளாவில் வீட்டுக்கு வீடு இப்படித்தான் குடிப்பார்கள் என்றாலும் அடுத்த தலைமுறையாவது இந்த குடியிலிருந்து காப்பாற்ற வேண்டிய பொறுப்பு சினிமா துறைக்கு இருப்பதால் இந்தக் காட்சிகளையாவது இயக்குனர் நீக்கி இருக்கலாம்.
அந்தக் கட்சியை நீக்கியிருந்தால் படத்திற்கு எந்த ஒரு பாதிப்பையும் அது கொடுத்திருக்காது. ஆனால் இயக்குநர் ஏன் அதை வைத்தார் என்று தெரியவில்லை
எப்படி இருந்தாலும் அந்த குடி சம்பந்தமான காட்சிகளைத் தவிர்த்து பார்த்தால் இந்தப் படம் ஒரு அருமையான குடும்ப திரைப்படம்.
அதோடு இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் யார் என்று பார்த்தால் இயக்குநர், நடிகர் திலீப் போத்தன், நடிகர் பகத் பாசில் புஷ்கரன் மூவரும் இணைந்து தயாரித்துள்ளனர்
இது மிக ஆச்சரியத்தை கொடுக்கிறது. ஏனெனில் பகத் பாசில் மலையாளத்தில் மிகச் சிறந்த நடிகர். அவர் நினைத்திருந்தால் இந்தக் கதையில் நான் நடிக்கிறேன் என்று சொல்லி வாங்கியிருக்கலாம்.
ஆனால் இதில் நிவின்பாலி நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என்று சொல்லி அவரை ஹீரோவாக வைத்து இவர் படத்தை தயாரித்து இருக்கிறார் என்றால் சினிமா மீதான இவருடைய பார்வை எப்படி இருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.
தமிழ் சினிமாவில் இப்போது வரையிலும் காதலை வைத்து கொத்து புரோட்டா போட்டுக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின் இப்போதைய இலக்ஷளைய இயக்குநர்களும் புதிதாக இயக்குநர்களாக துடித்துக் கொண்டிருக்கும்… இணை, துணை உதவி இயக்குநர்களும் கண்டிப்பாக இந்த படத்தை பார்க்க வேண்டும் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்தப் படம் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம். அதிலும் இளைஞர்களாக பிள்ளைகள் இருந்தால் நிச்சயமாக அவர்களை அழைத்துச் சென்று இந்தப் படத்தை பாருங்கள். அவர்களுக்கும் காதல் பற்றிய ஒரு புரிதல் கிடைக்கும்!
RATING : 4 / 5









