Cast:
Ashwin Kumar
Archana ravichandran
Sidhu Kumaresan
Vinoth Kishan
Kalaivani Bhaskar
Crew :
Produced by Cinemum – Lisha P Chandran & Adithya J Raju
Written & Directed by: Jeyachandra Hashmi
Director of Photography: Kanna R
Music: Deepan Chakravarthy
Editor: Ram Pandian
Art Director: Saravana Abiraman
Costume Designer: Gayathri B
Stunt Director: Suresh Babu
Creative Producer: Muthukumar R
Executive Producer: K. Rajaraman
Production Manager: Chokkalingam
Colorist: Babu
Sound, Mixing & Dubbing: Lights On Media
Trailer Editor: Ganesh Siva
Cult Digital – Suunil Jain & Aditya Joshi
Co-Produced by – Kuppuswamy.C
சினிமாவுக்கு மாற்றாக ஓடிடி தளங்கள் வெப் சீரிஸ்கள் மூலம் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் சூழலுக்கு உண்மையான காரணம், சினிமாவில் சொல்ல முடியாத விஷயங்களை வெப் சீரியஸில் நிதானமாக நிறுத்தி அழகாகச் சொல்லலாம் என்பதால்தான்!
அந்த வகையில் சமீபத்திய வெப் சீரிஸ்கள் பலவும் திரைப்படங்களை விடவும் அதிகமாக மக்களிடமும், ரசிகர்களிடமும் பாராட்டை பெற்று வருகின்றன.
அப்படி ஒரு பாராட்டை பெறுகிறது ZEE. 5 OTT-யில் வெளியாகியுள்ள இந்த ‘ஆக்டோபஸ்’ என்ற வெப் சீரிஸ்.
சஸ்பென்ஸ், திரில்லர் என்ற பாணியில் உருவாகி ரன் பாஸ்டில் ஓடும் இதன் திரைக்கதை கிளைமாக்ஸில் மர்டர், மிஸ்டரியில் வந்து நிற்பது… எதிர்பாராத ஒரு சுவையான திரைக்கதை!
விழுப்புரம் அருகே வாணிமங்கலம் என்ற ஊரில் இருக்கும் அன்பு குடியிருப்புதான் இந்த வெப் சீரிஸின் கதைக் களம்.
ஏற்கனவே அந்தக் குடியிருப்பில் இருக்கும் அனைவரும் ஒரே குடும்பத்தினர் போலவே நெருங்கி பழகி இருக்கிறார்கள். வருடக் கணக்காக அதே இடத்தில் குடியிருந்து வருகிறார்கள்.
இப்போது அதே குடியிருப்பில் புதிதாக ஒரு வீட்டை விலைக்கு வாங்கி தனது மனைவி சித்துவுடன் குடியேறுகிறார் அஸ்வின் குமார்.
பார்ப்பதற்கு கரடு முரடான தோற்றத்தில் இருக்கும் அஸ்வின் குமார், நிஜமாகவே உள்ளுக்குள் ஒரு வில்லனாகவே இருக்கிறார் என்றுதான் அக்கம் பக்கத்தினருக்குத் தெரிய வருகிறது.
மனைவி சித்துவை தினமும் காலை அலுவலகத்திற்கு செல்லும் முன்பாக வீட்டு வாசலில் வைத்து அனைவரின் முன்பாக முத்தம் கொடுக்கிறார் அஸ்வின்.
ஆனால் வீட்டுக்குள் மனைவியிடம் கொடூரமாக நடந்து கொள்வதாக குடியிருப்பில் இருக்கும் பெண்களுக்கு தெரிய வருகிறது.
கணவனுக்கு நேரெதிராக சித்து மட்டும் அக்கம்பக்கம் குடும்பத்தினருடன் அன்பாகப் பாசமாக நெருங்கிப் பழகுகிறார். அதே சமயம் தன் கணவரையும் விட்டுக் கொடுக்காமல் அவர் தன் மீது இருக்கும் காதலால்தான் இப்படி முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறார் என்றும் சமாளிக்கிறார் சித்து.
சித்துவின் எதிர் வீட்டில் இருக்கும் அர்ச்சனா ஒரு பாட் காஸ்ட் நடத்தி வருகிறார். நிறைய சமூக பிரச்சனைகளைப் பற்றிப் பேசி வருகிறார்.
அவருக்கு அஸ்வின் மீது ஒரு வெறுப்பு. மனைவியை அடிமையாக நடத்துகிறார் என்று நினைத்து அஸ்வின் மீது கோபம் கொண்டிருக்கிறார். ஆனால் சித்து உடன் மிக நெருக்கமாக பழகி வருகிறார்.
இந்த நேரத்தில் ஒரு நாள் திடீரென்று அன்றைய இரவில் சித்து வீட்டில் இருந்து சித்து அலறும் சத்தம் கேட்கிறது. ஆனால் யாரும் அந்த வீட்டுக்கு போய் என்னவென்று கேட்க தயங்குகிறார்கள்.
இதைக் கேட்டு அர்ச்சனாவும் கொதிக்கிறார். ஆனால் அவருடைய தந்தை அவரைத் தடுத்து வைக்கிறார்.
மறுநாள் காலையில் இருந்து சித்து அந்த வீட்டில் காணவில்லை. அவர் எங்கோ வெளியூர் சென்றிருப்பார் என்று மற்றவர்கள் நினைத்தார்கள். ஆனால், பல நாட்களாகியும் சித்து வரவில்லை.
இதனால் சந்தேகம் அடையும் அனைவரும் அஸ்வினிடம் சித்து பற்றி கேட்க அவர்களை உதாசீனப்படுத்தி அவமானப்படுத்துகிறார் அஸ்வின்.
“உங்களுக்கெல்லாம் வேறு வேலையே இல்லையா?” என்று கிண்டலும் செய்கிறான்.
சித்துவை அஸ்வின் ஏதோ செய்து விட்டான் என்று முழுமையாக நம்புகிறாள் அர்ச்சனா. அதனால் அக்கம்பக்கத்தினரை தூண்டிவிட்டு அனைவரும் ஒன்று சேர்ந்து போலீஸிடம் புகார் கொடுக்கிறார்கள்.
போலீஸும் அஸ்வினை வீடு தேடி வந்து விசாரிக்கிறது. வீட்டையும் சோதனை செய்கிறது. போலீஸ் விசாரணையில் அஸ்வின் ஒரு திடுக்கிடும் தகவலை சொல்கிறார்.
“சித்து யார் என்றே எனக்கு தெரியாது. எனக்கு இன்னும் திருமணமே ஆகவில்லை. இந்த வீட்டில் எந்தப் பெண்ணும் என்னுடன் இல்லை” என்கிறான் அஸ்வின்.
மொத்தக் காலனியும் திகைத்துப் போகிறது. “இல்லை… இந்த வீட்டில் சித்து என்ற பெண் இருந்தாள்” என்று அனைவரும் சாதிக்கிறார்கள். ஆனால் சித்துவுடன் இவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டாலும், அஸ்வின் குமாரும், சித்துவும் இணைந்து இருக்கும் ஒரு புகைப்படத்தைக்கூட இவர்களால் கொடுக்க முடியவில்லை.
இதனால் போலீசும் இந்த வழக்கை கைவிடுகிறது. ஆனால் குடியிருப்புவாசிகள் விடுவதாக இல்லை. நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்கள். நீதிமன்றமே இந்த வழக்கை கையில் எடுத்து விசாரிக்கிறது.
இதன் பின் என்ன நடக்கிறது? சித்து திரும்பி வந்தாரா? அஸ்வின் ஏன் அப்படி ஒரு பொய்யைச் சொன்னார்? நீதிமன்ற விசாரணைகள் நடந்தது என்ன? என்பதுதான் இந்த ‘ஆக்டோபஸ்’ என்ற வெப் சீரிஸின் திரைக்கதை.
மொத்தம் ஏழு எபிசோடுகள் கொண்ட இந்த வெப் சீரியஸில் வெப் சீரிஸுக்கே உரித்தான இலக்கணத்தோடு, ஒவ்வொரு எபிசோடின் முடிவிலும் ஒரு புது கதைக்கான டிவிஸ்ட் கொடுக்கப்பட்டு… அடுத்து என்ன என்று ஆவலோடு எதிர்பார்க்க வைக்கும் வகையில் திரைக்கதை எழுதப்பட்டுள்ளது.
இந்த வெப் சீரிஸின் இயக்குநர் ஜெயச்சந்திரன் ஹஸ்மி மிக சிறப்பாக தன்னுடைய இயக்கத்தை செய்திருக்கிறார்.
ஒவ்வொருவருக்கும் ஒரு முகமூடி உண்டு என்பதைப் போல நல்லவர்களாக இருப்பவர்கள் எல்லாம் கடைசியில் கெட்டவர்களாக நம் கண்முன்னே வரும்பொழுது நமக்கு ஏற்படும் ஏமாற்றம் மிகப் பெரியது.
ஆனால் அந்த ஏமாற்றத்தை அடப்பாவிகளா என்று நாம் வாய்விட்டுச் சொல்லும் அளவுக்கு படத்தில் நடித்த அனைவரையும் அவ்வளவு நல்லவர்களாக காட்டி இருக்கிறார் இயக்குநர்.
ஒரு வில்லனுக்குரிய முகத்தோற்றத்துடன் இருக்கும் அஸ்வின் குமார் ஒரு நல்ல கணவர் இல்லை என்பது போலவே அவரது கேரக்டர் ஸ்கெட்ச்சை அமைத்திருக்கிறார் இயக்குநர். அதற்கேற்ற நடிப்பையும் அஸ்வின் மிக சிறப்பாகவே கொடுத்திருக்கிறார்.
நமக்கே சில நேரங்களில் அஸ்வினை நாலு சாத்து சாபத்தினால் என்ன என்றுதான் தோன்றுகிறது. அந்த அளவுக்கு தன்னுடைய நடிப்பின் மூலமாக வெறுப்புணர்வை வரவழைத்திருக்கிறார் அஸ்வின் குமார்.
“உங்களுக்கெல்லாம் வேற வேலை வெட்டி இல்லையா?” என்று அலட்சியமாக அக்கம் பக்கத்தினரை லெப்ட் ஹேண்டில் டீல் செய்யவும் அஸ்வினின் அந்தத் தெனாவட்டு பேச்சு ரசிக்கக் கூடியது.
நீதிமன்றத்தில் தன் மீதான புகார்கள் வலுவாக இருந்தும், ஏதோ ஒன்றை நினைத்து அவர் சிரிக்கின்ற சிரிப்பிலேயே இதுவரையிலும் அவரை வில்லனாக பார்த்த அத்தனை பேரும் முட்டாள்கள் என்பது போல அந்த ஒரு செகண்டில் நினைக்க வைத்துவிட்டார் அஸ்வின். அவருக்கு நமது பாராட்டுக்கள்.
ஒரு துடிப்பான இளைஞியாக நடித்திருக்கும் அர்ச்சனா எதிர் வீட்டில் என்ன நடக்கிறது? சித்து ஏன் வீட்டை விட்டு வெளியில் வராமல் இருக்கிறார்? அஸ்வின் எப்படி மனைவியிடம் நடந்து கொள்கிறார்? என்றெல்லாம் கேள்விமேல் கேள்வியை கேட்டு இந்தப் பிரச்சனையை நீதிமன்றம் வரையிலும் கொண்டு வர வைக்கும் ஒரு துடிப்பான கதாப்பாத்தித்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
கடைசியில் மொத்தக் கதையும் தலைகீழாக மாறிய பின்பு தன்னுடைய தந்தையிடம் “ஏம்ப்பா இப்படி?” என்று அவர் கேட்கின்ற அந்த ஒற்றை கேள்வியும்… அப்போது அவர் காட்டி இருக்கும் நடிக்கும் ஏ ஒன்.
அழகான, அன்பான, அமைதியான குடும்ப பெண்ணாக தோற்றம் அளிக்கும் சித்து தான் காணாமல் போகும் வரையிலும் நம்முடைய பரிதாபத்தை பெற்றுக் கொண்டு விட்டார்.
இறுதியில் மீண்டும் அவர் வந்து சாட்சி செல்லும்பொழுது அடப்பாவி என்று நம்மை திட்டவும் வைத்துவிட்டார். அவருடைய மிக இயல்பான நடிப்பு இந்த வெப் சீரிஸ்க்கு மிகப் பெரிய பலமாக அமைந்துள்ளது.
மேலும் அக்கம் பக்கத்தினராக நடித்திருக்கும் பக்ஸ் என்ற பகவதி பெருமாள், மாற்று திறனாளி, அர்ச்சனாவின் அப்பா, அம்மா சத்யா மருதாணி, ஒரு வயதான அம்மா… மற்றவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கேரக்டருக்கேற்ற நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.
அஸ்வின் தெருவில் வைத்து மனைவி சித்துவுக்கு முத்தம் கொடுப்பது பற்றி பெண்கள் நாலு பேர் பேசுகின்ற அந்தப் பேச்சு மிக சுவையானது. அதில் அவர்களது நடிப்பும் அழகோ அழகு!
போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆக நடித்தவரும் ஒரு இயல்பான போலீஸ் இன்ஸ்பெக்டர் எப்படி இருப்பாரோ அப்படி இருக்க முயற்சி செய்திருக்கிறார்.
சில இடங்களில் எல்லைக்கோட்டை தாண்டி இருந்தாலும் லாஜிக்கே இல்லாமல் கொடுக்கும் புகார்களை எப்படி எடுத்துக் கொள்வது என்ற பொறுப்பில் அவர் பேசுகின்ற அந்த பேச்சும் நடிப்பும் ஓகேதான்.
கல்லூரி மாணவராக நடித்திருக்கும் வினோத் கமிஷனும், அவரது காதலியாக வடித்தவரும் உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறார்கள். கிளைமாக்ஸில் இவர்களை வைத்துதான் கதையே நகர்கிறது.
வினோத் கிருஷ்ணனின் ஒரு பொறுப்பற்ற இளைஞனின் நடிப்பு இப்போது இருக்கும் இளைய ஜென் ஸீ சமூகத்தின் பிரதிபலிப்புதான்.
காதலிகளை தெரிந்து கொள்ளாமல், பெண்களை புரிந்து கொள்ள முயற்சிக்காமல் அதிகப்பிரசங்கித்தனமாக அனைத்தையும் யோசிக்கும் வினோத் கிருஷ்ணின் இந்த கேரக்டர்ஸ் ஸ்கெட்ச் மிக இயல்பானது.
ஆனால் கிளைமாக்ஸ் சீனில் இவரும் நம்மிடம் இருந்து மிகப் பெரிய பரிதாபத்தைப் பெற்றுக் கொள்கிறார். இவரது காதலியாக நடித்த கலைவாணி பாஸ்கர், காதலனையும் சமாளிக்க முடியாமல் அவனுடைய காதல் பேச்சுகளையும் புறந்தள்ள முடியாமல் காதலையும் விட்டுவிட முடியாமல் தவிக்கின்ற தவிப்பில் மிகச் சிறப்பாக தன் நடிப்பைக் கொடுத்திருக்கிறார். அவருக்கு ஒரு தனி பாராட்டுக்கள்.
ஆர்.கண்ணாவின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு கேரக்டர்களின் தன்மைக்கு ஏற்ப அவர்களுக்கான குளோசப் காட்சிகளில் ஒளியை கூட்டியும் குறைத்தும் படமாக்கி இருக்கிறார்.
ஏழு எபிசோடுகளிலும் எந்த இடத்திலும் வெளிச்சம் மங்கவில்லை. நடித்தவர்கள் அத்தனை பேரும் அழகுற பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
தீபன் சக்கரவர்த்தியின் பின்னணி இசை ஒரு சஸ்பென்ஸ், திரில்லரை கூட்டுவது போலவே படத்தில் ஒலித்திருக்கிறது.
ரொமான்ஸ், காதல், சந்தேகம், குடும்பம் பாசம், அன்பு என்று எந்தெந்த இடங்களில் எல்லாம் இந்த குணாதிசயங்கள் வெளிப்படுகிறதோ, அதற்கேற்றவாறு பின்னணி இசையையும் அமைத்திருக்கிறார்.
படத் தொகுப்பாளர் ராம் பாண்டியன் ஹீரோ அஸ்வின் குமாரையே குறி வைத்து அவரை குற்றஞ்சாட்டும்விதமாகவே நகரும் திரைக்கதையை அழகாக தொகுத்து இருக்கிறார்.
ஆனால், நீதிமன்ற காட்சிகளிலும், கிளைமாக்ஸ் காட்சிகளில் மட்டும்தான் கோட்டை விட்டுவிட்டார்.
இதுபோன்று போலீஸ், சட்டம், நீதிமன்றம், வழக்குகள் என்று எழுதப்பட்ட சட்டங்களின்படி கதை நடப்பதுபோல சொன்னால் அதில் அதிகப்படியான அளவுக்கு உண்மைத்தன்மை இருக்க வேண்டும்.
இந்தக் கதைக்கு திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கும் இயக்குநர் ஜெயச்சந்திர ஹஸ்மி, ஒரு திடுக்கிடும் திருப்பம்.. ஆணவக் கொலைகளை வீரியமாகச் சொல்லுவதற்காக சட்டம் போலீஸ், நிதி துறைகளைப் பற்றி கவலைப்படாமல் அதைத் தூக்கிக் கடாசிவிட்டு தன்னுடைய விருப்பத்தின்படி திரைக்கதையை மாற்றி அமைத்திருக்கிறார்.
இதற்கு முன்பாக ஒரு கொலை வழக்கு நடந்து, அந்த வழக்கின் விசாரணையும் நீதிமன்றத்தில் முடித்து குற்றவாளிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது.
இப்போது அந்த வழக்கை மீண்டும் ரீ ஓப்பன் செய்து விசாரிக்க வேண்டும் என்றால் அதற்கு நிறைய பர்மாலிட்டீஸ்கள் உள்ளன.
இயக்குநர் ஜெயச்சந்திர ஹஸ்மி இந்தப் படத்தில் காட்டி இருப்பது போல, ஒரு வழக்கின் விசாரணையில் கிடைக்கும் தகவல்களை வைத்து இதற்கு முந்தைய வழக்கின் விசாரணையை மீண்டும் நடத்தச் சொல்லி கேட்பதும், அந்த வழக்கின் தீர்ப்பை அடியோடு மாற்றுவதும் நிஜத்தில் நடக்காத ஒன்று.
அதற்காக நிறைய நேரங்கள் தேவைப்படும். நிறைய விசாரணைகள் தேவைப்படும்.
ஆனால் இது எதையும் செய்யாமல் இது வெப் சீரிஸ் என்பதால் மிக எளிதாக அடுத்த விசாரணையிலேயே முந்தைய வழக்கினை ஓப்பன் செய்து விசாரிப்பதுபோல கதையை கொண்டு போய்விட்டார்.
இதுதான் இந்த வெப் சீரிஸின் நம்பகத்தன்மையை சோதித்துப் பார்க்கச் சொல்கிறது.
சாட்சிகள் அளித்த வாக்குமூலத்தின்படி பார்த்தாலும் பழைய வழக்குகளுக்கும் இப்போதைய வழக்குகளுக்கும் இடைப்பட்ட காலத்தில் அவர்களுக்கு ஏதேனும் நடந்து, அதனால் சாட்சிகள் அப்படி சொல்லி இருக்கலாம் என்று வாதத்தை வைத்தால் நிச்சயமாக இந்த வெப் சீரிஸின் கிளைமாக்ஸே அடிபட்டு போய்விடும்.
“அப்படி எல்லாம் ரொம்ப யோசிக்க வேண்டாம்…. வழக்கை உடனே ரீ ஓப்பன் செய்தோம். விசாரித்து உண்மை குற்றவாளிகளை அடையாளம் காட்டிவிட்டோம்.
செய்யாத குற்றத்திற்கு தண்டனை அனுபவித்து வருபவரை வெளியில் அழைத்து வந்துவிட்டோம்” என்று சொல்லி வெற்றிகரமாக இந்த வெப் சீரிஸை முடித்திருக்கிறார் இயக்குநர்.
இயக்குநரின் இந்த எழுத்து சாமர்த்தியத்திற்கு நமது மனமார்ந்த பாராட்டுக்கள்!
RANKING : 4 / 5









