ரஜினி அரசியலுக்கு வந்தால் அவருடன் மோதுவதற்கு தயார் – இயக்குநர் சீமான் பேச்சு..!

ரஜினி அரசியலுக்கு வந்தால் அவருடன் மோதுவதற்கு தயார் – இயக்குநர் சீமான் பேச்சு..!

‘ரஜினி அரசியலுக்கு வந்தால் அவருடன் மோதத் தயார்’ என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுத்தம்பி பிள்ளை பிரபாகரனின் 60-வது பிறந்த நாளையொட்டி, ‘வரலாற்று தலைவனுக்கு வாழ்த்துப் பா’ என்ற நூல் வெளியீட்டு விழா, ‘தாய்ப் புலிக்கு புகழ்பரணி’, ‘தலைமகனுக்கு தாலாட்டு’ ஆகிய 2 குறுந்தகடுகள் வெளியீட்டு விழா சென்னை, திருவொற்றியூரில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசும்போது ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி தனது கருத்தை வெளியிட்டார்.

சீமான் பேசும்போது, “ஈழத் தமிழர்களை அழித்துவிட்டு சிங்கள இனவாதத்தை முன் நிறுத்தும் நோக்கத்துடன் இலங்கை அரசாங்கம் செயல்பட்டு கொண்டு இருக்கிறது. தமிழர்கள் மீது ஏவிவிடப்பட்ட சிங்கள பயங்கரவாதத்தை எதிர்த்து நின்று உயிர் தியாகம் செய்த மாவீரர்களை நாம் நினைவு கூர்ந்து கொண்டு இருக்கிறோம்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை ‘பயங்கரவாத இயக்கம்’ என்று கூறி தடை செய்து உள்ளனர். முடக்கி போடுவதற்கும், மடக்கி வைப்பதற்கும் நாங்கள் குடைகள் அல்ல. புலிப் படையை பார்த்து வளர்ந்தது, நாம் தமிழர் படை.

நாங்கள் ஆட்சியை பிடிக்க சில ஆண்டுகள்கூட ஆகலாம். ஆனால் நிச்சயம் ஆட்சியை கைப்பற்றுவோம். அது வரை காத்து இருக்கிற பொறுமையும், தோல்வி ஏற்பட்டாலும் தொடர்ந்து மக்களுக்காக போராடுகிற தைரியமும் எங்களுக்கு உண்டு. சீமான் முதல்-அமைச்சர் ஆகிறானா இல்லையா? என்று தெரியாது. ஆனால் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவன் இந்த மண்ணை ஆளுகிற சூழலை உருவாக்காமல் விடமாட்டோம்.

ரஜினி அரசியலுக்கு வரணும் என்று பலரும் அழைக்கிறார்கள். அவர் அரசியலுக்கு வரட்டும்.. அதையும் பார்க்கலாம். அவர் தனியாக வந்தாலும் சரி, யாரோடும் கூட்டணி அமைத்துக் கொண்டு வந்தாலும் சரி… தேர்தல் வரட்டும். அவருடன் மோதிப் பார்க்க தயாராகவே உள்ளோம்.

2016 தேர்தலில் அனைத்துத் தொகுதியிலும் தனித்து நிற்கப் போகிறோம். எல்லா தமிழர்களுக்கான பொதுக் கட்சியாக, நம் கட்சியை எடுத்துச் செல்லவேண்டும். வெற்றி, தோல்வி இரண்டையும் ஏற்றுக் கொள்ள தயாராக இருப்போம். வாழ்வோ, சாவோ நாம் தனித்துத்தான் நிற்கப் போகிறோம். எங்கள் தலைமையை ஏற்று, எங்கள் பின்னே வர விரும்புபவர்கள் வரலாம்..” என்றார்.

ஒரு பக்கம் சீமானின் நெருங்கிய நண்பரான இயக்குநர் அமீர், ரஜினியை “தலைவா வா.. தலைமையேற்க வா.. உன் பின்னால் நாங்கள் வருகிறோம்..” என்கிறார். இன்னொரு பக்கம் அமீரின் நெருங்கிய நண்பரான சீமானோ, “ரஜினி களத்தில் குதிக்கட்டும். நேருக்கு நேர் சந்திக்கத் தயார்..” என்கிறார்..

ஒண்ணுமே புரியலை..!

Our Score