பரபரப்பாக இருக்கிறார் இயக்குநர் இமயம் பாரதிராஜா.
73 வயது. ஆனாலும் இன்னமும் தன்னை இளைஞராகவே நினைத்துக் கொள்ளும் பாரதிராஜா அடுத்த வருடத்தில் இன்னமும் பரபரப்பாக தான் இயங்கப் போவதை இன்றைக்குத் தெரிவித்திருக்கிறார்.
“மூன்று படங்களில் நடித்தும், ஒரு படத்தைத் தயாரிக்கவும் இருப்பதுதான் அடுத்த வருட திட்டம்..” என்கிறார்.
இவர் நடிக்கவிருக்கும் ஒரு படம் ‘ஓம்’. ‘சலீம்’ என்ற ஹிட்டடித்த படத்தைக் கொடுத்த நிர்மல்குமார் இயக்கப் போகும் அடுத்தப் படம் இதுதான்.
இந்தப் படத்திற்கு புதுப்புது கெட்டப்புகளில் அசத்தலாக காட்சி தருகிறார் இயக்குநர் இமயம்.
படம் பற்றி பேசிய பாரதிராஜா, “இந்த ‘ஓம்’ ஸ்கிரிப்டை நான் படிச்சு எட்டு வருஷமாச்சு. நடுவுல ‘பொம்மலாட்டம்’ படத்தை இயக்கினேன். அந்தப் படத்துல நான் நடிக்கலையே தவிர, படம் முழுக்கு என்னுடைய வைப்ரேஷன்ஸ் அந்தப் படத்துல இருக்கும்.
திடீர்ன்னு இப்போ ‘நீங்க நடிக்க வாங்க ஸார்’ன்னு கேட்டு நிறைய பேர் வர்றாங்க.. ‘என்னடா இது.. நாம நடிக்கிற அளவுக்கு நம்மகிட்டயே ஒரு கதை இருக்கே?’ன்னு அப்பத்தான் எனக்கு ஸ்டிரைக் ஆச்சு..
‘ஓம்’ன்னு சொன்னா ‘ஓல்டு மேன்’னு அர்த்தம். அழகான டைட்டில்.. நான் நடிக்கிறதுக்கு ரொம்பப் பொருத்தமா இருந்துச்சு.
படத்துக்கு யுவன் சங்கர் ராஜா மியூஸிக் பண்றான். ‘அங்கிள் உங்க படத்துக்கு நான் எப்போ மியூஸிக் பண்றது?”ன்னு கேட்டுக்கி்டடேயிருப்பான். ‘இருடா உங்கப்பன்கிட்ட இன்னும் சில ஜோலி இருக்கு.. முடிச்சிட்டு வரேன்’னு சொல்லி்ட்டேயிருந்தேன். இப்பத்தான் நேரம் வந்திருக்கு.. கூப்பிட்டேன்.. ‘ஆரம்பிச்சிடலாம் அங்கிள்’ன்னு உடனே வந்துட்டான்.
கதைன்னு பார்த்தா, ஒரு சின்னப் பொண்ணுக்கும், ஒரு கிழவனுக்கும் இடையில் நடக்குற உணர்ச்சிப் போராட்டம்தான் படம். ரொம்ப அற்புதமான ஸ்கிரிப்ட். அந்தக் கிழவன் சின்னப் பிள்ளை மாதிரியிருப்பான். அந்தப் பொண்ணு பெரிய மனுஷி மாதிரியிருப்பா..
இந்தியால இருந்து ரிட்டையர்டாகி அமெரிக்கா போறான் கிழவன். அவ அங்கேயே இருக்குறவ.. ரெண்டு பேரும் ஒருத்தரையொருத்தர் எப்படி பேஸ் பண்ணிக்கிறாங்க.. எப்படி அவங்க வாழ ஆரம்பிக்கிறாங்கன்றதுதான் கதை.. அவ்வளவுதான்.. ஒரு மியூஸிக்.. ஒரு மேஜிக்.. ஆனா நிச்சயம் ‘முதல் மரியாதை’ சாயல் இருக்காது..” என்கிறார் பாரதிராஜா..
வாழ்த்துகள் இயக்குநர் இமயத்திற்கு..!