தமிழ்ச் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் நடத்தி வரும் ஆஷ்ரம் பள்ளி, சென்னை கிண்டியில் உள்ளது. இந்தப் பள்ளியில் பணியாற்றிவரும் ஊழியர்களுக்கு கடந்த 13 மாதங்களாக சம்பளம் கொடுக்கவில்லை என்று அவர்கள் திடீர் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
லதா ரஜினியின் ஆஷ்ரம் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கிறார்கள். 69 ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். இவர்கள் அனைவரும் பல முறை இந்த கொரோனா காலக்கட்டத்தில் கஷ்டத்தை சமாளிக்க முடியாமல் தங்களுக்கு சேர வேண்டிய ஊதியத்தை கேட்டும் கொடுக்காத காரணத்தால் தற்போது போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இது குறித்து அந்தப் பள்ளியில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் கூறியபோது, “லதா ரஜினிகாந்தின் ஆஷ்ரம் பள்ளியில், கடந்த 25 வருடங்களாக பணியாற்றி வருகிறேன். திடீரென்று ஒரு நாள் எனது பணிக் காலம் முடிந்துவிட்டதாக கூறி என்னை பணியில் இருந்து நின்று கொள்ளுமாறு பள்ளியின் மேனேஜர் என்னிடம் தெரிவித்தார். நானும் எனக்கு சேர வேண்டிய ஊக்கத் தொகை, மற்றும் சம்பள பாக்கியை தருமாறு கேட்டேன்.
இது தொடர்பாக லதா ரஜினிகாந்தின் உதவியாளரை அணுகியபொழுது “நீங்கள் யாரும் பணியில் இருந்து நீக்கப்படவில்லை” என்று கூறினார். எனவே நாங்கள் மீண்டும் பள்ளிக்கு பணிக்கு வர தொடங்கினோம். நாங்கள் தொடர்ந்து வேலை செய்து வந்த போதிலும் கடந்த 13 மாதங்களாக எங்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. 4 ஆண்டுகளாக ஊக்கத் தொகையும் கொடுக்கவில்லை.
இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் பல முறை கேட்ட போதும் “இப்போ தர்றோம்.. அப்போது தருகிறோம்..” என்று இழுத்தடித்து வருகிறார்கள்.
இப்பிரச்சனை குறித்து லதா ரஜினிகாந்திடம் முறையிட்டபோது, “என்னிடம் இப்போது பணம் இல்லை. சில சொத்துக்களை விற்றுதான் தர முடியும்” என்கிறார். ரஜினிகாந்த் நினைத்தால் இதுவொரு விஷயமே இல்லை. அவருடைய சொந்தப் பணத்தில் இருந்துகூட கொடுத்துவிடலாம். ஆனால், இதை அவர் கவனத்திற்கு எங்களால் கொண்டு செல்ல முடியவில்லை. தங்களின் இந்த நிலைக்கு முழுக்க, முழுக்க காரணம் லதா ரஜினிகாந்துதான்..” என்று குற்றம் சாட்டினார்.