இயக்குநர் சாமியின் இயக்கத்தில் உருவாகி சமீபத்தில் தியேட்டர்களில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘அக்கா குருவி’ படத்தை இயக்குநரும், ‘நாம் தமிழர் கட்சி’யின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் சமீபத்தில் பார்த்தார்.
அதன் பின்பு பத்திரிகையாளர்களிடத்தில் பேசிய இயக்குநர் சீமான், “இந்த ‘அக்கா குருவி’ படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் குடும்பத்துடன் வந்து பார்த்து ஆதரவ ளிக்க வேண்டும்…” என்று கேட்டுக் கொண்டார்.
இயக்குநர் சீமான் இது குறித்துப் பேசும்போது, “என்னுடைய அருமைத் தம்பி இயக்குநர் சாமி தயாரித்து, இயக்கியிருக்கும் படம் ‘அக்கா குருவி’.
பல ஆண்டுகளுக்கு முன்பாக சென்னையில் நடைபெற்ற உலகத் திரைப்பட விழாவில் ஈரானிய இயக்குநரான மஜித் மஜிதியின் ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’ என்ற படத்தைப் பார்த்தோம். அப்படம் நாங்கள் வியந்து பார்த்து ரசித்த படம்.
அந்தப் படத்தைத்தான் தற்போது இயக்குநர் சாமி தமிழில் ‘அக்கா குருவி’ என்று ரீமேக் செய்திருக்கிறார். ஆனால், அத்திரைப்படத்தை ஏனோதானோ என்று இல்லாமல் மிகுந்த பொறுப்புணர்வோடு கதைக் கரு கொஞ்சமும் சிதையாமல் எடுத்திருக்கிறார்.
‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’ படத்தின் நீளம் 83 நிமிடங்கள். ஆனால், ‘அக்கா குருவி’ படத்தை 1 மணி 53 நிமிடங்களுக்கு நீட்டித்திருக்கிறார் இயக்குநர் சாமி. இருப்பினும், தேவையற்ற காட்சிகளை வலிந்து திணிக்கிறார் என்று சொல்ல முடியாத அளவிற்கு, முதன்மையான உணர்வை கெடுக்காமல், மக்களின் ரசனைக்கு ஏற்ப திரைக்கதை அமைத்து சிறப்பாக செய்திருக்கிறார் தம்பி சாமி. அதற்கு அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
அவருடைய முந்தைய படங்களைவிடவும் மிகவும் உணர்வுபூர்வமான, கவித்துவமான காவியம் இந்த ‘அக்கா குருவி’ படம்தான் என்று சொல்ல வேண்டும்.
இதில் முரணான விஷயம் என்னவென்றால், இது போன்ற படங்களை தயாரிக்க யாரும் முன் வர மாட்டார்கள். ஆகையால், அவருடைய ‘கனவு தொழிற்சாலை’, ‘முத்து மூவிஸ்’ என்ற நிறுவனங்கள் மூலமாக 9 பேர் இணைந்து இப்படத்தைத் தயாரித்திருக்கிறார்கள். ஏனென்றால், இன்றைய திரையுலக சூழல் அப்படி ஆகிவிட்டது.
இந்தப் படத்தில் நடித்திருக்கும் குழந்தைகள் மிகவும் அருமையாக நடித்து இருந்தார்கள். மேலும், நிறைய புதுமுகங்களும் நடித்திருக்கிறார்கள். ஆனாலும், அவர்கள் புதுமுகங்கள் மாதிரி தெரியவில்லை. அனைவரும் கதாபாத்திரத்தோடு ஒன்றி தங்களுடைய திறனை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். படம் பார்க்கும் உணர்வே எனக்கு வரவில்லை அந்த அளவிற்கு எல்லோரும் வாழ்ந்திருக்கிறார்கள். அது இப்படத்திற்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய வெற்றி.
இப்படத்தின் ஒளிப்பதிவாளர் உத்பல் வி. நாயனார் மலையாளத்தில் பல படங்களில் பணியாற்றி இருக்கிறார். கலை இயக்குநர் என்னுடைய தம்பி வீர சமர்.
ஈடு இணையற்ற இசை மேதையான இசைஞானி இளையராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். அவர் இசையைப் பற்றி சொல்லத் தேவையில்லை. சாதாரண படங்களுக்கே சிறப்பாக இசை அமைத்துக் கொடுத்தவர். இந்த மாதிரி படங்களை விடுவாரா என்ன?! மிகவும் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்.
அவர் இசையமைத்து இருக்கிறார் என்பதைவிட ஒவ்வொரு காட்சிக்கும் உயிர் கொடுத்து இருக்கிறார் என்பதுதான் உண்மை. தன்னுடைய இசையால், இப்படத்தை வருடிக் கொடுத்திருக்கிறார் இளையராஜா.
இந்த ‘அக்கா குருவி’ படம் தற்போது திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. என் அன்பு உறவுகள் அனைவரும் இந்தப் படத்தை கட்டாயமாக பார்க்க வேண்டும். அப்போதுதான் இது போன்ற சிறந்த படைப்புகளை உருவாக்கும் படைப்பாளிகளுக்கு ஊக்கமும். நம்பிக்கையும் வரும். இது எனது அன்பான வேண்டுகோள்.
மேலும் இப்படத்தை குழந்தைகளுடன் குடும்பம், குடும்பமாக தியேட்டருக்கு வந்து பார்க்க வேண்டும். வன்முறை, ஆபாசம், தேவையற்ற காட்சிகள், உரையாடல்கள் என்பது ஒரு துளிகூட இந்தப் படத்தில் கிடையாது.
தமிழில் மிக சிறந்த படைப்பு இது. இப்படிப்பட்ட படத்தை துணிந்து தயாரித்த என்னுடைய தம்பி இயக்குநர் சாமிக்கு என்னுடைய பாராட்டுக்களும், நன்றியும்.
அவருக்கு துணையாக இருந்து படத்தைத் தயாரித்திருக்கும் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். நன்றிகள்.
இது ஒரு போர்தான். இந்தப் படத்தை 9 பேர் இணைந்து தயாரித்து இருக்கிறோம் என்றார் சாமி. நாங்கள் 50 பேர் இணைந்து ஒரு படத்தைத் தயாரிக்க இருக்கிறோம் என்று கூறினேன். இது போன்ற முயற்சிகளை எடுக்கும் நமது பிள்ளைகளை நாம்தான் ஊக்கப்படுத்த வேண்டும்.
ஒரு முறை இந்தப் படத்தை பாருங்கள். படம் உங்களை நிச்சயமாக ஏமாற்றாது. மிகுந்த மன நிறைவை தரும் சிறந்த படம் இது. எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
என்னுடைய இந்தப் பாராட்டை இப்படத்தில் உழைத்த தொழில் நுட்ப கலைஞர்களுக்கு குறிப்பாக என்னுடைய தம்பி சாமிக்கு சொல்வதில் பெரிதும் மகிழ்கிறேன்.
இப்படத்தை தமிழகத்து மக்கள் அனைவரும் குடும்பத்துடன் வந்து பார்க்க வேண்டும் என்று அன்பாக வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்…” என்றார்.