இந்திய பெண்களை பெருமைப்படுத்தும்விதமாக இந்திய புராணங்களில் இருந்து எடுத்தாளப்படும் பெண்களின் உச்சமயமான கதாபாத்திரம் சாவித்திரி.
ஆயுட் காலம் முடிந்து இறப்புக்கு தயார் நிலையில் இருக்கும் தன்னுடைய கணவன் சத்தியவானை எமதர்மனிடமிருந்து போராடி காப்பாற்றும் அந்த சாவித்திரியின் தலைப்பில் இந்தப் படம் வந்திருந்தாலும் கதை அப்படியே உல்டாதான்.
வக்கீலுக்கு படித்திருக்கும் சாவித்திரி ஒரு மிகப் பெரிய பெயர் சொல்லும் வக்கீலாக பெயர் எடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
ஆனால் அவரது தந்தையோ அவருக்கு சீக்கிரமாக திருமணம் செய்து வைத்து குடும்ப வாழ்க்கையில் திணித்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்.
சாவித்திரிக்கு இது உடன்பாடு இல்லை என்றாலும் அவரால் மறுக்க முடியாத நிலைமை. அந்த நேரத்தில் பெண் பார்க்க வந்த சாருகேஷுக்கு சாவித்திரியை மிகவும் பிடித்துப்போய்விட உடனடியாக திருமணத்திற்கு ஒத்துக் கொள்கிறார். திருமணமும் நடக்கிறது.
இருவரும் சென்னை வந்து தனிக்குடித்தனம் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் சாருகேஷின் அம்மாவுக்கும் வேலைக்குப் போகும் பெண் பிடிக்காது என்பதால் என் மகள் இனி வேலைக்கு போக மாட்டாள் என்று உத்தரவாதம் கொடுத்திருக்கிறார் சாவித்திரியின் தகப்பனார்.
ஆனால் புது மனைவி மீது கொண்ட காதலால் சாருகேஷ் தன் மனைவியை வேலைக்கு அனுப்புகிறார். சென்னையில் மிகச் சிறந்த வழக்கறிஞராக இருக்கும் மார்க்கண்டேயனிடம் என்னும் உதவி வழக்கறிஞராக சேர்கிறார் சாவித்திரி.
அரசு மருத்துவமனையில் 20 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியதாக மருத்துவமனையின் டீன் தங்கதுரை கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிராக அரசு தரப்பு வழக்கறிஞராக கடுமையாக வாதாடி வருகிறார் மார்க்கண்டேயன்
இந்த வழக்கை கூர்ந்து கவனித்து வரும் சாவித்திரிக்கு ஏனோ டீன் இந்த வழக்கில் திட்டமிட்டு சிக்க வைக்கப்பட்டிருக்கிறார் என்று தோன்றுகிறது.
இதை மார்க்கண்டேயனிடமும் சொல்கிறார். ஆனால் ஒரு ஜூனியர் வக்கீல் எனக்கு ஆலோசனை சொல்வதா என்ற அகங்காரத்தில் இதை ஏற்க மறுக்கிறார் மார்க்கண்டேயன்
திடீர் திருப்பமாக இந்த வழக்கில் மார்க்கண்டேயனை எதிர்த்து தம்பித்துரையின் வழக்கறிஞராக வாதாடினார், திடீரென்று வழக்கிலிருந்து வெளியேற, அந்த இடத்தை சாவித்திரி பிடித்துக் கொள்கிறார். தங்கதுரைக்காக அவரை வாதாடுகிறார்.
தன்னிடம் 10 நாட்கள் ஜூனியராக இருந்த ஒருவரே தன்னை எதிர்த்து வாதாடுகிறார் என்கின்ற கோபத்தில் கொந்தளிக்கிறார் மார்க்கண்டேயன்.
ஆனால், புத்திசாலித்தனமான தனது வாதத்தால் மார்க்கண்டேயனின் சாட்சிகளை உரைக்கிறார் சாவித்திரி. இந்த வழக்கில் டீனுக்கு விடுதலை கிடைக்கிறது.
இதற்கு அடுத்த சில நாட்களில் சாருகேஷ் ஒரு பெண் கொலை வழக்கில் கைது செய்யப்படுகிறார். அந்தப் பெண் சாருகேசின் கார் டிக்கியில் பிணமாக கிடைக்கிறார். இந்த ஒரு ஆதாரத்தை வைத்து அவரை கைது செய்து சிறையில் அடைக்கிறது போலீஸ்.
விசாரணை தொடங்குகிறது. இந்த வழக்கிலும் மார்க்கண்டேயன் என அரசு தரப்பு சிறப்பு வக்கீலாக பணியாற்றுகிறார். சாவித்திரியோ தன் கணவரை காப்பாற்றுவதற்காக தான் சாட்சியாக இல்லாமல் வழக்கறிஞராக இந்த வழக்கில் வாதாடுகிறார்.
இந்த வழக்கில் விசாரிக்க விசாரிக்க பல திடுக்கிடும் திருப்பங்கள் ஏற்படுகிறது.
இறுதியில் இந்த வழக்கில் சாவித்திரி ஜெயித்தாரா? தன்னுடைய கணவரை சிறையில் இருந்து விடுவித்தாரா? உண்மையில் யார் அந்தக் கொலையைச் செய்தது என்பதுதான் இந்தப் படத்தின் மீதமான கதை.
ஏற்கனவே ‘மகாநடி’ என்ற படத்தில் நடிகையர் திலகம் சாவித்ரியாக வாழ்ந்து காட்டிய கீர்த்தி சுரேஷ், இந்தப் படத்தில் புராண சாவித்திரியாக தன்னுடைய நடிப்பால் நம்மை அசத்தியிருக்கிறார்.
நீதிமன்ற காட்சிகளுக்கு முன்பாக பெண் பார்க்க வரும் சாருகேசிடம் அவர் பேசுகின்ற பேச்சும், பாடல் காட்சிகளிலும் அவர் காட்டுகின்ற சின்ன சின்ன பாவனைகள் அனைத்தும் நம்மை சொக்க வைக்கின்றன. ரசிக்க வைக்கின்றன.
ஸ்கிரீனில் அவரது முகம் வந்தால் அவரைத் தவிர வேறு பக்கம் நம் கண்கள் திரும்ப மறுக்கிறது. அந்த அளவுக்கு தனது அழகான முக வசீகரத்தால் நம்மைக் கவருகிறார் கீர்த்தி சுரேஷ்.
அதிலும் கொஞ்சம் நடிப்பையும் சேர்த்து கொடுக்க ஆரம்பித்தவுடன் இந்தப் படம் முழுவதையும் தானே தோளில் சுமந்து இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
தடுமாற்றத்துடன் தனது வாதத்தை எடுத்து வைத்து ஆரம்பிக்கும் கீர்த்தி இறுதியில் மிக தைரியமாக தன்னுடைய வாதங்களை பூர்த்தி செய்து அவர் முடிக்கும் பொழுது.. பரவாயில்லை.. ஒரு நிஜமான ஒரு ஜூனியர் வழக்கறிஞர் எப்படி பயிற்சி பெற்று பேசுவார் அதுபோலவே நமக்கு ஒரு சிறப்பான வழக்கறிஞராக நடித்துக் காட்டி இருக்கிறார் கீர்த்தி
ஒரு பக்கம் சிறையில் இருக்கும் கணவன் இன்னொரு பக்கம் குடும்பத்தாரின் வற்புறுத்தல்… கடைசியாக மார்க்கண்டேயனை தோற்கடிக்க வேண்டும் என்கின்ற ஒரு வெறி.. இது அனைத்தும் ஒன்று சேர்ந்து நீதிமன்ற வாதாடல்களில் அவருடைய நடிப்பை கொட்ட வைத்திருக்கிறது.
‘மார்க்கண்டேயன்’ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் மிஷ்கின், ஒரு சமயம் வில்லனாகவும் இன்னொரு சமயம் குணசித்திர கதாபாத்திரமாகவும் செய்து தன்னுடைய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
சீனியர் வக்கீல் என்ற திமிரிலும், தானே எல்லாம் தெரிந்தவன் என்ற அகந்தையிலும், தன்னைச் சுற்றிலும் இத்தனை உதவி வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள் என்ற பெருமையிலும்… தன்னுடைய பேச்சு நடத்தை இதையும் தாண்டி தன்னுடைய நடையில்கூட ஒரு ஸ்டைலையும் திமிரையும் காட்டி அசத்தி இருக்கிறார். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
கிளைமாக்ஸில் இந்தக் கொலையை யார் செய்தது என்று அவர் விவரிக்கும்போது தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்து ஒரு விரக்தியான ஒரு சிரிப்பை சிரிக்கிறார் பாருங்கள்!.. அங்கேதான் இயக்குநரே ஜெயித்திருக்கிறார்.
கீர்த்தியின் கணவராக நடித்த சாருகேஷ் கீர்த்திக்கு பொருத்தமானவராக இருக்கலாம். ஆனால், அந்தக் கதாபாத்திரத்தில் மக்களுக்கு நன்கு அறிமுகமான ஒருவரை நடிக்க வைத்திருந்தால் இன்னுமும் நன்றாக இருந்திருக்கும்.
அவரும் தன்னுடைய கேரக்டரை புரிந்து கொண்டு நடித்திருக்கிறார். தன்னுடைய மனைவியிடம் அன்பையும், காதலையும் எதிர்பார்ப்பதும் தன் மனைவியே தன்னை கைவிடும் சூழலில் நிர்க்கதியாய் இருக்கும் போது பரிதாபமாக தன் நடிப்பைக் காண்பித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் இன்னொரு பக்கம் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது நீதிபதியாக நடித்திருக்கும் குமார் நடராஜனை!
மார்க்கண்டேயன், சாவித்திரி இருவருக்குமான மோதலை அவ்வப்பொழுது சமரசம் செய்து, சமாதானம் செய்து அவர்களை கூல் செய்து, அதேசமயம் திரைக்கதையின் வேகத்திற்கு ஏற்ற வசனங்களையும் பேசி மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.
சாவித்திரியின் அப்பாவாக நடித்த சரத் லோகிஸ்தஸ், மாமாவாக நடித்த ஆர்.சுந்தர்ராஜன், அம்மாவாக நடித்த மாலா, டீன் தங்கத்துரையாக நடித்தவர் மற்றும் பலரும் இயக்குநரின் சிறப்பான இயக்கத்தினால், சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
கீர்த்தியுடன் கூடவே படம் முழுவதும் வரும் பால சரவணன் அவ்வப்பொழுது கொஞ்சம் கொஞ்சம் சிரிக்க வைத்திருக்கிறார்.
கவர்ச்சியான தோற்றத்தில் மட்டுமில்லாமல் கவர்ச்சியான குரலினாலும் நடித்திருக்கிறார் ஷில்பா மஞ்சுநாத்.
புராண கால சத்தியவான் சாவித்திரி கதையில் நடித்திருக்கும் பிரிகடாவும் நம்மை கவர்கிறார்.
அருள் வின்சென்ட்டின் ஒளிப்பதிவில் அனைத்து நடிகர் நடிகைகளும் அழகாகவே காட்டப்பட்டிருக்கிறார்கள்.
சாவித்திரியான கீர்த்தியின் அழகு இந்தப் படத்தில் இன்னமும் கொஞ்சம் கூடுதலாக தெரிகிறது.
நீதிமன்றக் காட்சிகளிலும், இரவு நேர காட்சிகளிலும் ஒளியை குறைத்து கலர் டோனையும் மாற்றி, மாற்றியமைத்து ரசிக்க வைத்திருக்கிறார்கள்.
சாம் சி.எஸ்.ஸின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். ஆனால் பின்னணி இசை ஏனோ எடுபடவில்லை. அதுவும் படத்தில் பின்னணி இசை நமக்கு தேவை இல்லாத சூழல் என்பதால் பெரிய குறையாகத் தெரியவில்லை.
கோர்ட் டிராமா என்பதால் எந்த அளவுக்கு வசன காட்சிகளை சண்டை போடுவதுபோல் கொடுக்க முடியுமோ அதை அப்படியே கொடுத்து படத்தை பெரிதும் ரசிக்க வைத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஜி.கே. பிரசன்னா.
கீர்த்தியின் ஆடை வடிவமைப்பாளருக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு! ஆள் பாதி ஆடை பாதி என்பதுபோல அவரது அழகை மெருகேற்றியதில் ஆடை வடிவமைப்பாளருக்கும் ஒரு பங்கு உண்டு.
குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படுவது சகஜம். பிரச்சனை இல்லாத குடும்பங்களே இல்லை.
பிரச்சனைகள் எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.
பழிக்குப் பழி, பல்லுக்குப் பல், உயிருக்கு உயிர் என்று சாதாரண பொது மக்களும் களத்தில் இறங்கினால் பிறகு சட்டம் எதற்கு? நீதி எதற்கு? நீதிமன்றங்கள் எதற்கு? அரசுகள் எதற்கு? என்ற கேள்விகள் எழும்!
இந்தப் படத்தில் இயக்குநர் சொல்ல வந்தது புராண காலத்து சாவித்திரிகள் புராணத்தில் மட்டும்தான். இப்போது நிஜத்தில் அப்படி அல்ல என்பதைத்தான்!
ஆனால் அதைச் சொல்வதற்கு அவர் எடுத்துக் கையாண்டிருக்கும் இந்தக் கதை மிக, மிக தவறானது.
ஒரு குற்றம் நடந்தால் குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும். அல்லது சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
இது இரண்டையும் செய்யாமல் அவர் சுதந்திரமாக ஒரு கொலையை செய்துவிட்டு தப்பிக்கிறார் என்றோ அல்லது தனக்கு நேர்ந்த ஒரு கொடுமைக்கு பதிலாக இன்னொரு கொலையை அவரும் செய்துவிட்டு நிம்மதியாக இருப்பார் என்று ஒரு முடிவாக சொல்வது எந்த வகையிலும் நியாயம் அல்ல!
திரைப்படங்கள் இப்போது புதிதாக வளர்ந்து வரும் புதிய தலைமுறையினருக்கு இன்னொரு பள்ளிக்கூடம் போல் உள்ளது.
அதனால் இதுபோன்று தவறான விஷயங்களை கதைகளாகக் கொடுக்க வேண்டாம் என்று இயக்குநர்களிடம் கேட்டுக் கொள்கிறோம்.
இந்த ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படம் படமாகப் பார்க்கப் போனால் சிறந்த மேக்கிங்தான்.
ஆனால், தவறான நீதியையும், தவறான கதையையும் சொல்லியிருக்கிறது.
RATING : 3.5 / 5









