full screen background image

ஓம் – சினிமா விமர்சனம்

ஓம் – சினிமா விமர்சனம்

Movie: O.M – OPERATION MOLE

Cast: Dhanush, Mammootty, Sai Pallavi, Sreeleela

Written & Directed By – Rajkumar Periasamy
Music – Sai Abhyankkar
Director Of Photography – Ezhil Arasu K
Editor – R.Kalaivanan
Action – Yannick Ben , Kecha Khamphakdee
Production Designer – Rajeevan
Art Director – A.Pannerselvam
Choreography – Sandy
Sound Design – Sync Cinema
Sound Mix – Kannan Ganpat
Costume Designer – Kavya Sriram
DI – Prasad Lab
Colorist – Ranga
VFX – Phantom fx | spectre post
VFX Supervisor – Syam PM
Stills – V.Sittrarasu
Makeup – B.Raja
Costumer – Nagu
Publicity Design – Kabilan
PRO – Riaz Ahmed | Aim Satish
Production Controller – D.Ramesh Kuchirayar
production executive – meenushri hariharan.

ஆந்திராவில் பல்லாண்டு காலமாக நடந்து வரும் செம்மர கடத்தலின் பின்னணியில் இந்தப் படம் உருவாகி உள்ளது.

ஆந்திராவில் சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்று புதிய முதல்வர் பொறுப்பேற்கிறார். அவர் கடந்த ஐந்தாண்டுகளாக முதல்வர் பதவியில் இல்லை.

அந்த நேரத்தில் செம்மர கடத்தல் ஆந்திராவில் கொடி கட்டி பறந்து இருக்கிறது. அதை செய்த ரெட்டிகளை ஆதாரத்துடன் கைது செய்ய வேண்டும் என்று புதிய முதல்வர் பொறுப்பேற்கும் முன்பாகவே டிஜிபியை அழைத்து சொல்கிறார்.

இதனால் டிஜிபி ‘நித்யா ரெட்டி’ என்ற சாய் பல்லவி தலைமையில் ஒரு புதிய டீமை உருவாக்குகிறார்.

இந்த டீமிற்கு ஒரு துடிப்பான இளைஞன் வேண்டும் என்பதற்காக பழனிக்குமார் என்ற தனுஷை தேர்ந்தெடுக்கிறார்கள். உடனேயே தனுஷை உளவு வேலை பார்ப்பதற்காக திருவண்ணாமலைக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

திருவண்ணாமலையில் அந்த ஊரின் காட்ஃபாதராக இருக்கும் ‘கார்த்திகேயன்’ என்ற மம்முட்டிதான் ஆந்திராவில் வெட்டப்படும் செம்மரங்களை பாதுகாப்பாக பதுக்கி வைத்து ஆந்திர துறைமுகங்கள் மூலமாக வெளிநாடுகளுக்கு ரகசியமாக ஏற்றுமதி செய்கிறார் என்பது ஆந்திரா போலீஸ் உளவுத்துறையின் தகவல்.

இதனால் கார்த்திகேயனை உளவு பார்க்கவும், அவரை கையும் களவுமாகப் பிடிக்கவும் தனுஷ் கார்த்திகேயன் உடன் மிகவும் நெருக்கமாக பழகி அவருடைய குடும்பத்தில் ஒருவராக மாறி செம்மர கடத்தலின் அடி ஆழம் வரையிலும் தெரிந்து கொள்கிறார்.

ஆனால் தனிப்பட்ட முறையில் கார்த்திகேயன் நல்ல மனிதராகவும் பலருக்கு உதவி செய்யும் மனம் உடையவராகவும் இருப்பதை அறிந்து தனுஷ் அவர் மீது கொஞ்சம் பரிதாபம் கொள்கிறார்.

ஆனால் கடமை தவறாத காவல் அதிகாரியாக இருந்த தன்னுடைய தந்தையை செம்மரக் கடத்தல்காரர்கள் படுகொலை செய்ததையும், தன்னுடைய கணவரான ஐபிஎஸ் அதிகாரியை லாரி ஏற்றி கொலை செய்ததையும் தாங்க முடியாமல் இந்தப் பதவிக்கு வந்திருக்கிறார் சாய் பல்லவி.

அதனால் அவருடைய மனதில் பழி வாங்கும் உணர்வு மேலோங்கி இருக்க.. கார்த்திகேயன் மற்றும் அவருடைய கூட்டாளிகள் மொத்தப் பேரையும் பிடித்தே தீர வேண்டும் என்கின்ற வெறியில் இருக்கிறார்.

கார்த்திகேயனை பிடிக்கும் முதல் முயற்சியாக 300 டன்  உள்ள சரக்கை வெளிநாட்டுக்கு வேண்டுமென்றே தப்ப வைக்கிறார்கள் ஆந்திர போலீஸ்.

இரண்டாவதாக மீதி இருக்கும் 700 டன் சரக்கையும் அனுப்பி வைக்க முயலும்பொழுது ஆந்திர போலீசுக்கும் கார்த்திகேயன் ஆட்களுக்கும் இடையில் துப்பாக்கி சூடெல்லாம் நடந்து செம்மரக் கட்டைகளும் அடியாட்களும் பிடிபடுகின்றனர்.

ஆனால் கார்த்திகேயன் தப்பி விடுகிறார். இந்த இடைவேளையில் தற்செயலாக லாரியை ஒட்டி வந்த தனுஷின் அப்பா இந்திரனும் கொல்லப்படுகிறார். இது தனுஷூக்கு கோபத்தையும் வெறியையும் உண்டாக்குகிறது.

போலீசின் திட்டமிட்ட இந்தக் கொலை கடத்தல் கும்பலை உயிரோடு பிடிக்கும் ஆப்ரேஷனுக்கு நேர் எதிராக இருக்கிறது என்பதை உணரும் தனுஷ் தடம் மாறுகிறார். இடம் மாறுகிறார்.

இதற்கு மேல் என்ன நடந்தது? கார்த்திகேயனை உயிரோடு பிடித்தார்களா? இல்லையா? கார்த்திகேயனுக்கும்  மேல் இருக்கும் உலகளாவிய தலைவனான அப்துல் ஹமீதை கைது செய்தார்களா? இல்லையா? என்பதுதான் இந்தப் படத்தின் மீதமான திரைக்கதை.

“மாப்பிள்ளை அவர்தான். ஆனால் சட்டை என்னது” என்று சொல்வார்களே அதுபோல, இந்தப் படத்தின் ஹீரோ தனுஷ்தான் என்றாலும் இன்னொரு ஹீரோவாக நடித்திருக்கிறார் சாய் பல்லவி. படத்தின் துவக்கமும் அவரே! முடிவும் அவரே!

அப்பாவையும் இழந்து காதல் கணவரையும் திருமணம் ஆன ஐந்தே நாட்களில் இழந்த துர்பாக்கியத்தில் இருக்கும் ஐபிஎஸ் நித்யா ரெட்டியாக தன்னுடைய ஒட்டு மொத்த நடிப்பையும் மிக சிறப்பான வகையில் கொடுத்திருக்கிறார் சாய்பல்லவி.

ஐபிஎஸ்-இன் அந்த மிடுக்கான தோற்றமும், தலைமுடியை வெட்டி பாப் செய்த அந்த ஸ்டைலும் அவருக்கு ஒரு கூடுதல் அழகைக் கொடுத்திருக்கிறது.

உயர் அதிகாரிகளுடன் மரியாதையான பேச்சு, தனுஷ் உடன் ஒரு சினேகமான பேச்சு, கீழ் அதிகாரிகள் உடன் கண்டிப்பான பேச்சு என்று ஒரு காவல் அதிகாரிக்கான அனைத்து விஷயங்களுடன் தன்னுடைய கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கேற்ற நடிப்பையே கொடுத்திருக்கிறார்.

இடையிடையே கார்த்திகேயனிடம் தான் ஒரு பெண்ணை காதலிப்பதாக சொல்லி தனுஷ் பேசும்பொழுது அதைக் கேட்கும்போது சாய் பல்லவி காட்டுகின்ற அந்த சின்ன ரியாக்ஷன்ஸ் மட்டுமே இவர்தான் ஹீரோயின் என்று நமக்கு நியாபகப்படுத்துகிறது.

புகைப்பட கலைஞராக அறிமுகம் ஆகி போலீஸ் உளவாளியாக நடித்து கார்த்திகேயனின் அன்புக்கும், பாசத்திற்கும் உட்பட்டு இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவிக்கும் ஒரு சாதாரணமான பழனிக்குமார் என்கின்ற கேரக்டரை நன்கு உள்வாங்கி தன்னால் முடிந்த அளவுக்கான ஒரு நடிப்பை கொடுத்திருக்கிறார் தனுஷ்.

என்ன வேலை பார்க்கிறோம் என்பதை தனது குடும்பத்தாரிடம் சொல்லாமல் சிரித்து பேசியே சமாளிக்கும் தனுஷ் வழக்கறிஞரிடமும் அதே பாணியில் பேசுகின்ற பொழுது கொஞ்சம் ரசிக்க முடிந்தது.

தன்னுடைய அப்பாவை இழந்த தருணத்தில் அவருடைய சோகமும், கதறலும் நமக்கும் அந்தச் சோகத்தைக் கடத்தி இருக்கிறது.

மம்முட்டிக்காக சாய்பல்லவியிடம் பரிந்து பேசி கோபப்படுகின்ற தருணத்திலும் வீடு தேடி வந்து சமாதானம் பேசும் சாய் பல்லவி இடம் தன் நிலைமை எடுத்துச் சொல்லும் இந்த அடக்கமான தகப்பன் கதாபாத்திரத்தை அழகாக செய்திருக்கிறார் தனுஷ்.

இதுவரையிலும் மற்ற திரைப்படங்களில் நடிக்காத ஒரு அமைதியான, அழகான, அடக்கமான மனைவி என்ற கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார் ஸ்ரீலீலா.

அதுவும் வழக்கறிஞர் முன்னிலையில் அவர் பேசுகின்ற அந்த கோபமான பேச்சு ரசிக்கக் கூடியது.

ஒரு இயல்பான அப்பாவாக இந்திரன் சில காட்சிகளே என்றாலும் நம் மனதில் நிற்கிறார்.

மம்மூட்டி தமிழில் இதுவரை இப்படி ஒரு கேரக்டரில் நடித்ததில்லை. இதுதான் முதல் முறை. அவருடைய வயதுக்கேற்ற கேரக்டர்தான். பெரிய மனிதர். நல்ல மனிதர். தெரிந்து தவறு செய்யும் ஒரு குணம். அதிலிருந்து தப்பிக்க நினைக்கும் மனம். குழந்தை இல்லையே என்ற ஏக்கத்தில் இருக்கும் ஒரு தவிப்பு. மனைவியின் மீது இணை பிரியாத பாசம்… எல்லாம் கலந்த ஒரு நல்ல மனிதர். ஒரு சூழலில் இந்தத் தொழிலில் சிக்கித் தவிக்கின்ற ‘கார்த்திகேயன்’ என்ற அந்தக் கதாபாத்திரத்தின் மனப்பான்மையை மம்முட்டி பல இடங்களில் அழகாக பதிவு செய்திருக்கிறார்.

தனுஷைப் பற்றிப் பலரும் குறை சொல்லும் போதெல்லாம் அதை நம்பாமல் தனுஷை காப்பாற்றும் மம்முட்டி இறுதியாக நீதிமன்றத்தில் தனுஷைப் பார்த்தவுடன் காட்டுகின்ற அடப்பாவி என்கின்ற அந்த முகபாவனை தோற்றம் கை தட்ட வைத்துவிட்டது.

ஆனாலும் மம்மூட்டி தனது இத்தனை ஆண்டு கால நடிப்பில் இந்தப் படத்தில் காட்டிய நடிப்பு நிச்சயமாக குறைவுதான். அதற்கான ஸ்கோப் இந்த படத்தில் இல்லை என்பதுதான் உண்மை.

பவன் கல்யாணின் இரண்டாவது மனைவியான ரேணு தேசாய் முதல்முறையாக தமிழில் நடித்திருக்கிறார். மம்முட்டிக்கு மனைவியாக! பல காட்சிகளிலும் ஒரு அழகான அன்பான மனைவியாகவும் அனைவருக்கும் பிடித்தமான ஒரு பெண்ணாகவும் தோன்றியிருக்கிறார்.

ஜவ்வாது மலை கிராம மக்களாக நடித்த ஆண்கள் பெண்கள் அத்தனை பேருமே மிகச் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

அதே போல் உலகளாவிய கடத்தல் மன்னனான அப்துல் ஹமீது என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நஸ்ரூதின்ஷா கவனம் இருக்கும் அளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார்.

எழிலரசுவின் ஒளிப்பதிவில் திருவண்ணாமலையை அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். கோவில் திருவிழா காட்சிகளிலும், போலீசை அடித்து விரட்டுகின்ற படத்தின் துவக்க காட்சிகளிலும் பரபர என்று திரைக்கதையை நகர்த்த கேமரா உதவி இருக்கிறது.

காடுகளுக்குள் நடக்கும் செம்மர கடத்தல் வேட்டை போலீஸ் தாக்குதல், சண்டை காட்சிகள் என்று அத்தனையிலும் ஒளிப்பதிவாளரின் பணி பாராட்டுக்குரியது.

அதேபோல் சண்டை பயிற்சியாளர்கள் இருவருமே மிகச் சிறப்பாக தங்களுடைய பணியை செய்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் சாய் அபயங்காரின் இசையில் இரண்டு பாடல்கள் ஒலித்தன. சோகத்தை கூட்டின. பின்னணி இசை இடைவேளைக்கு பின்பு காட்சிகளை நகர்த்துவதற்கு பெரிதும் உதவி செய்திருக்கிறது.

படத்தின் தொகுப்பாளர் எப்படி சில காட்சிகளை டச் செய்தார் என்று தெரியவில்லை.

படத்தின் துவக்கத்தில் தனுஷ் அறிமுகமாகும் அந்தக் காட்சியில் அவர் யாரை பார்த்து கத்துகிறார்? யாரிடம் பேசுகிறார்? என்ன சொல்கிறார்? என்பதே புரியாத வகையில் வேகவேகமாக காட்சிகளை அடுத்தடுத்து தொகுத்து இருக்கிறார். அது என்ன என்பதே நமக்குப் புரியவில்லை என்பது இந்தப் படத்தில் நமக்குக் கிடைத்த மிகப் பெரிய ஏமாற்றம்

அதோடு இது ராஜ்குமார் பெரியசாமியின் படமா என்று ஒரு சின்ன சந்தேகத்தையும் அந்த சில காட்சிகள் நமக்குள் எழுப்பிவிட்டன.

செம்மரக் கடத்தல் தொழில் என்பது மிக நீண்ட வருடங்களாக ஆதிராவிலும் தமிழகத்திலும் நடந்துதான் வருகிறது.

செம்மரத்திற்கு சீனாவில் இருக்கும் மிகப் பெரிய மார்க்கெட்டுதான் இங்கே ஆந்திராவிலும் தமிழகத்திலும் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பழி வாங்கியிருக்கிறது. எத்தனையோ அப்பாவிகள் இறந்திருக்கிறார்கள்.

செம்மரக் கடத்தில் பின்னணியில் இருக்கும் மிகப் பெரிய தலைவர்கள் யாரும் இதுவரையிலும் பிடிபட்டதில்லை. பிடிபட்டு செத்தவர்கள் அனைவருமே சாதாரண கூலித் தொழிலாளர்கள்தான்.

அதுதான் இந்த செம்மர கடத்தலின் பின்னணியில் இப்போது வரையிலும் பிடிபடாமல் இருக்கும் மர்மம்.

இந்தப் படத்தில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி செம்மர கடத்தல் எப்படி எல்லாம் செய்யப்படுகிறது? எங்கெல்லாம் செம்மரங்களை கடத்தி வைத்திருக்கிறார்கள்? எப்படி துறைமுகங்கள் மூலமாக அது வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது? கஸ்டம்ஸ் போலீஸ் கண்களில் படாமல் எப்படி அது கடத்தப்படுகிறது என்பதை எல்லாம் விலாவாரியாக எடுத்து வைத்து விட்டார். இனி அடுத்தடுத்து இந்த தொழில் நடக்குமா என்பது கொஞ்சம் சந்தேகம்தான்.

ஆனால் ஒரு திரைப்படமாக பார்க்கப் போனால்….

செம்மர கடத்தலின் பின்னணியில் வந்திருக்கும் பல திரைப்படங்களை நாம் முன்பேயே பார்த்திருப்பதால் நமக்கு இந்தப் படம் பெரிய ஏமாற்றத்தைதான் தந்திருக்கிறது. புதிய திரைக்கதை இல்லை என்பதுதான் இந்தப் படத்தில் இருக்கும் மிகப் பெரிய குறை

2015-ம் ஆண்டு சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டுவதற்காக வந்த கூலித்தொழிலாளர்களான 20 தமிழர்களை ஆந்திர பிரதேச போலீசார் நடுக்காட்டில் வைத்து பிடித்து சித்திரவதை செய்து சுட்டு கொலை செய்தார்கள்.

இந்தச் சம்பவம் அப்போது ஆந்திரா தமிழ்நாடு இரண்டு மாநிலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதை மையமாக வைத்துதான் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர்.

ஆனால் இதில் இருக்கும் உண்மையைச் சொல்லாமல் கடத்தியவர்களின் வாழ்க்கை.. அவர்கள் கதி என்ன ஆனது என்பதாக இந்தப் படத்தின் முக்கால்வாசி திரைக்கதை கார்த்திகேயன் மற்றும் அப்துல் ஹமீது பக்கம் போய்விட நமக்குப் படம் போரடித்து விட்டது.

ஏற்கனவே புஷ்பா ஒன்று புஷ்பா இரண்டு ஆகிய திரைப்படங்களில் செம்மர கடத்தலின் ஆதி முதல் அந்தம் முறையில் காண்பித்து இருந்தார் இயக்குநர் சுகுமார்.

இதேபோல் 2023-ம் ஆண்டு தமிழிலேயே ‘ரெட் சாண்டல்வுட்’ என்ற ஒரு அருமையான தமிழ் திரைப்படம் வெளியாகி 2015-ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக கூலித் தொழிலாளர்களின் வாழ்க்கை கதையை அப்படியே உருக்கமாக சொல்லியிருந்தது.

இந்த இரண்டு படங்களும் கொடுத்த தாக்கத்தின் ஒரு சிறிய அளவினைகூட இந்தப் படம் நமக்குக் கொடுக்கவில்லை என்பது நூற்றுக்கு நூறு உண்மை.

அந்த வகையில் இந்தப் படம் இயக்குநருக்கும் பெருமை அளிக்கவில்லை. ஹீரோவுக்கும் பெருமை அளிக்கவில்லை என்பதுதான் உண்மை..!

RATING : 3.5/5

Our Score