செவன் ஹில்ஸ் சினி கிரியேஷன் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பு ‘பீட்சா பாய்ஸ்’ திரைப்படம்.
சங்கர் கே.என். மற்றும் சஹானா சங்கர் இருவரும் இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.
இப்படத்தில், சிவம் சங்கர் நடிகராக அறிமுகமாகிறார். சரத் லோகிதாஷ்வா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரபல நடிகர் ஷோப்ராஜ், இன்ஸ்பெக்டர் நாகராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சேகர் கேசவ் சிரின் கதை, இயக்கம் மற்றும் இசை ஆகியவற்றை கவனித்துள்ளார். குருபிரசாத் ஒளிப்பதிவைக் கவனிக்கிறார்.
சொந்த ஊரின் பரிச்சயமான சூழலைவிட்டு வெளியேறி, தங்களுக்கென ஒரு வாழ்க்கையை உருவாக்கும் கனவுகளுடன் புதிய நகரத்திற்குள் அடியெடுத்து வைக்கும் இளைஞர்களின் கதைகள் எப்போதுமே உற்சாகம் தரக் கூடியவை.
வாழ்வாதாரம், நட்பு மற்றும் சிறந்த எதிர்காலத்தைத் தேடி பெங்களூரு செல்லும் தமிழ்நாட்டைச் சேர்ந்த நண்பர்கள் கதைதான் இந்த ‘பீட்சா பாய்ஸ்’ படம்.
பெங்களூரூவின் எனர்ஜி, இளமை, நட்பு, அன்பு மற்றும் எதிர்பாராத சந்திப்புகள் என இவர்கள் வாழ்க்கை மாறும் விதத்தை இந்தப் படம் பேசுகிறது.
அறிமுகமில்லாத நகரத்தில் வாழ்வாதாரத்தைத் தேடி பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் ஐந்து நண்பர்கள்தான் இந்த ‘பீட்சா பாய்ஸ்’ படத்தின் மையம்.
ஆரம்பத்தில் அவர்கள் எதிர்பார்த்ததைவிட முற்றிலும் மாறுபட்ட சூழல்களுக்குள் அவர்களின் பயணம் அழைத்துச் செல்கிறது.
படத்தின் கதைக் களம் குறித்து அதிகம் வெளிப்படுத்தாமல், இளமை துள்ளல், நட்பு, லட்சியம் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் ஆகியவற்றை சமகாலப் பின்னணியில் சுவாரஸ்யமான கதையாக ‘பீட்சா பாய்ஸ்’ படம் இருக்கும்.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக பெங்களூருவில் நடைபெற்றுள்ளது.
காந்தீரவா ஸ்டுடியோஸ் மற்றும் நகரின் முக்கியமான இடங்களில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. மொத்தம் 42 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
வரும் டிசம்பர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தில் இடம்பெற்றுள்ள “என்ன புடுங்க போற…” என்று தொடங்கும் பாடலை, முதல் தனிப்பாடலாக படக்குழு வெளியிட்டுள்ளது.
பாடல் வெளியாகி சில மணி நேரங்களில் வைரலானதோடு, பாடல் வரிகள் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், படக்குழு பத்திரிகையாளர்களை சந்தித்து படம் பற்றிய தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்கள்.
படத்தின் இயக்குநர் சேகர் கேசவ் செரின் படம் குறித்து பேசுகையில், “நான் ஏற்கெனவே ‘சிக்கன் கரி லாவ்’ என்ற இந்திப் படத்தை இயக்கியிருக்கிறேன். இந்த ‘பீட்சா பாய்ஸ்’ என் இரண்டாவது படம்.
இந்த படத்தின் கதைப்படி, பெங்களூரில் வாழும் நான்கு தமிழ் இளைஞர்கள் வாழ்க்கையில் முன்னேற போராடுகிறார்கள். அப்போது அவர்கள் எத்தகைய சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள்? அதில் இருந்து எப்படி மீண்டு வருகிறார்கள்? அவர்களுக்கு கதாநாயகி எப்படி உதவி செய்கிறார்? அவருக்கும் நாயகனுக்குமான காதல் என்னவானது என்பதுதான் இந்தப் படம்.
இதில் ஹீரோ புதுமுகம் என்றாலும், அவரது நண்பர்களாக நடித்திருக்கும் மற்ற இளைஞர்கள் மக்களுக்கு பரிட்சயமானவர்கள்தான். வில்லனாக சரத் லோகித்ஸ்வா நடித்திருக்கிறார்.
நான் தமிழன்தான். ஆனால், புனேவில் பிறந்து வளர்ந்தேன். தமிழ்ப் படம் எடுக்க வேண்டும் என்பது என் ஆசை என்பதால் எடுத்திருக்கிறேன்.
இந்தப் படம் இளைஞர்களுக்கான படமாகவும், குடும்பமாகப் பார்க்கக் கூடிய படமாகவும் இருக்கும்.
முதல் பாதி காமெடியாகவும், கலகலப்பாகவும் பயணிக்கும். இரண்டாம் பாதி, ஆக்ஷன் திரில்லர் பாணியில் பரபரப்பாக பயணிக்கும். மொத்தமாக ஒரு முழுமையான பொழுதுபோக்கு படமாக இருக்கும்.
இந்தப் படத்தை பெங்களூரில் படமாக்க குறிப்பிட்ட காரணம் எதுவும் இல்லை. தமிழ் இளைஞர்கள் பிற மாநிலத்தில் கஷ்ட்டப்படுகிறார்கள். போராடுகிறார்கள். பிரச்சனைகளை எதிர்த்து முன்னேறுகிறார்கள் என்பதுதான் கதை.
அதை வேறு எந்த மாநிலத்திலும் எடுத்திருக்கலாம். நாங்கள் பெங்களூரில் எடுத்திருக்கிறோம்.” என்றார்.

நாயகன் சிவம் சங்கர் படம் மற்றும் நடிப்பு அனுபவம் பற்றி கூறுகையில், “இது என் முதல் படம், நிறைய சவால்கள் இருந்தது. மூன்றுவிதமாக உடல் தோற்றத்தை காட்ட வேண்டி இருந்ததால், எடை குறைப்பு, அதிகரிப்பு போன்ற விசயங்கள் சவாலானதாக இருந்தது.
வாழ்க்கையில் ஒரு சிறிய தொழில் தொடங்கி சாதிக்க முயற்சிக்கும் இளைஞரின் கதை என்பதால் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது.
இந்தப் படத்தில் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது. உடல் எடையை குறைப்பது பிறகு மீண்டும் அதிகரிப்பது போன்ற விசயங்கள் கஷ்ட்டமாக இருந்தாலும், இந்தக் கதாபாத்திரத்திற்காக அதை செய்யும்போது அந்தக் கஷ்டம் பெரிதாகப் பாதிக்கவில்லை.
உடன் நடித்தவர்கள் நண்பர்களாக பழகினார்கள். நாங்கள் ஒரு படத்தில் சக நடிகர்களாக அல்லாமல், படத்தில் இருப்பதுபோல் நண்பர்களாகவே பயணித்தோம். எனக்கு நிறைய உதவி செய்தார்கள், மகிழ்ச்சியாக பணியாற்றினேன்.” என்றார்.
நாயகி அல்பியா பேசுகையில், ”இது எனக்கு இரண்டாவது படம். திரள் என்ற ஒரு படத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தில் எனது கதாபாத்திரம் சிறப்பானதாக இருக்கும்.
வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் நான்கு இளைஞர்களுக்கு உதவி செய்யும் கதாபாத்திரம். பாடல்கள் காட்சிகளும் எனக்கு சிறப்பாக அமைந்திருக்கிறது. படமும் நன்றாக வந்திருக்கிறது. நிச்சயம் அனைவருக்கும் படம் பிடிக்கும், உங்கள் ஒத்துழைப்பு வேண்டும்.” என்றார்.
தயாரிப்பாளர் சங்கர்.கே.என் பேசுகையில், “நான் லாஜிஸ்டிக் தொழிலில் இருக்கிறேன். இயக்குநர் இந்தக் கதையை சொன்னபோது பிடித்துவிட்டது. அவர் ஏற்கனவே ஒரு படம் இயக்கியிருக்கிறார். இது இரண்டாவது படம்,
கதை இளைஞர்களுக்கான படமாகவும், குடும்பங்கள் பார்க்க கூடிய படமாகவும் இருந்ததால் தயாரிக்க முடிவு செய்தேன். அனைவரும் அதிகம் கஷ்ட்டப்பட்டு இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். ஒரு குடும்பமாக பயணித்திருக்கிறோம். படம் நிச்சயம் மக்களுக்குப் பிடிக்கும்” என்றார்.
தற்போது வெளியாகியிருக்கும் “என்ன புடுங்க போற…” பாடலில் இடம் பெற்றுள்ள வார்த்தை சரியானது என்று நினைக்கிறீர்களா?” என்ற கேள்விக்கு பதில் அளித்த இயக்குநர் சேகர் கேசவ் செரின்,
“எந்த ஒரு தவறான நோக்கத்தோடு அந்த வரியை பயன்படுத்தவில்லை. அந்த பாடல் ஆரம்பிப்பதற்கு முன்பு, நாயகனின் நண்பர் காதல் தோல்வியில் இருக்கிறார், அவரிடம் நண்பர்கள் விசாரிக்கும்போது, “காதலிக்கும்போது தன் காதலிக்கு தான் வாங்கிக் கொடுத்த அனைத்தையும் அவரிடம் இருந்து புடுங்க போறேன்” என்று சொல்கிறார். உடனே நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து அவரை “என்ன புடுங்க போற…” என்று கிண்டல் செய்து பாடுகிறார்கள்.
அந்தக் காட்சிக்கு ஏற்ற வார்த்தையாகத்தான் அதை பயன்படுத்தியிருக்கிறோமே தவிர, வேறு எந்த தவறான எண்ணத்தோடும் பயன்படுத்தவில்லை.
ஒரு ஜாலியான பாடலாக அதை நீங்கள் பார்த்தால் ஜாலியாகவே இருக்கும்.
அதே சமயம், இந்தப் பாடல் படத்தில் இதே வார்த்தைகளுடன் இருக்காது. ”என்ன செய்ய போற…” என்ற வார்த்தையுடன்தான் இருக்கும்.
தற்போது வெளியாகியிருக்கும் பாடல் விளம்பர பணிகளுக்காகவும், சமூக வலைத்தளங்களில் மட்டுமே இருக்குமே தவிர படத்தில் இருக்காது.” என்றும் தெரிவித்தார்.