“இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்” – தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மிரட்டல்..!

“இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்” – தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மிரட்டல்..!

‘சர்கார்’ படத்தில் அரசு திட்டங்களை விமர்சித்த இயக்குநர் முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நடிகர் விஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகி ஓடி கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் தமிழக அரசியலை விமர்சனம் செய்யும் வகையில் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. தமிழக அரசின் இலவச மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறிகளை தூக்கி எறிவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

sarkaar-movie-poster-2 

இது அ.தி.மு.க.வினரை கோபம் அடைய செய்தது. இதனை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ‘சர்கார்’ திரைப்படத்தின் பேனர்களையும், கட் அவுட்டுகளையும் சேதப்படுத்தி அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ‘சர்கார்’ படத்தின் இயக்குநரான ஏ.ஆர்.முருகதாஸ் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

இதனால் தனக்கு முன் ஜாமீன் கேட்டு நவம்பர் 9-ம் தேதி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். இதனால் இயக்குநர் முருகதாசை வரும் 27-ம்தேதி வரை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் அரசு தரப்பு பதில் மனுவை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த வழக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், “சர்கார்’ படத்தில் அரசின் நலத்திட்டங்களை விமர்சித்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதே அரசின் விருப்பம்” என்றார். அதோடு. “இனிமேல்  அரசையோ அரசின் நலத்திட்டங்களையோ விமர்சிக்க மாட்டேன்…” என உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்யவும் வலியுறுத்தினார்.

அரசின் இந்தக் கோரிக்கை பற்றி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் நீதிபதி கேட்டபோது, “இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?” என்றவர், தனது கட்சிக்காரரான இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் விளக்கம் கேட்டு பதில் மனுவை தாக்கல் செய்வதாகச் சொன்னார். இதனால் அவரது முன் ஜாமீன் வழக்கு இன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இயக்குநர் முருகதாஸ் தமிழக அரசின் இந்த மிரட்டலுக்கு அடி பணிவாரா.. மாட்டாரா.. என்பது இன்று தெரிய வரும்..!

Our Score