full screen background image

“பாட்ஷாவை மிஞ்ச எந்தப் படமும் இல்லை..!” – சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெருமிதம்..!

“பாட்ஷாவை மிஞ்ச எந்தப் படமும் இல்லை..!” – சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெருமிதம்..!

“திரையுலகில்  ஒரு பாட்ஷாதான். அதை மிஞ்ச எந்தப் படமும் இல்லை..” என்று பெருமிதமாகக் கூறியிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

தயாரிப்பாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பனின் 90-வது பிறந்த நாள் விழா இன்று சென்னை ராணி சீதை அரங்கில் நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “என்னுடைய சின்ன வயதில் நான் பெங்களூரில் இருந்தபோது, என்னோட நண்பர் ஒருத்தர் எம்.ஜி.ஆரோட தீவிர ரசிகரா இருந்தார். அவர், ஒரு நாள் என்கிட்டே ஒரு போட்டி வைத்தார்.

சத்யா மூவீஸோட ‘நான் ஆணையிட்டால்’ படம் ரிலீஸாகப் போகுது. உன்னால் முடிந்தால் முதல் நாள், முதல் ஷோவுக்கு டிக்கெட் எடுத்துக்காட்டுனு சவால் விட்டார்.

நான் 65 ரூபாயை வெச்சுக்கிட்டு அதிகாலை நாலு மணிக்கே தியேட்டருக்குப் போனேன். அப்பவே நிறைய கூட்டம் முண்டியடிச்சுக்கிட்டு நின்னுச்சு. அந்தக் கூட்டத்துலேயும் டிக்கெட் எடுத்து சவாலில் ஜெயிச்சேன்.

சத்யா மூவிஸ் தயாரிக்கும் படத்தில் நானும் ஹீரோவாக நடிப்பேன் என்று நான் அப்போது கனவிலும் எதிர்பார்க்கவில்லை. 

சத்யா மூவீஸ் தயாரித்த ‘ராணுவ வீரன்’ படத்துக்கு என்னை நடிக்க அழைச்சப்போ சந்தோஷமா இருந்துச்சு.

அவர் தயாரித்த ‘பாட்ஷா’ படத்தில் நடித்தது எனக்கு மறக்க முடியாத அனுபவம். அந்தப் படத்தின் 125-வது நாள் விழாவில் நான் கலந்துகிட்டேன். அப்போ ஆர்.எம்.வீ. அமைச்சராக இருந்தார். அந்த மேடையில் தமிழகத்தின் வெடிகுண்டு கலாச்சாரம் பற்றிப் பேசினேன். அன்று இரவே ஆர்.எம்.வீ. ஸாருக்கு பதவி போய்விட்டது.

அடுத்த நாள் விஷயம் தெரிஞ்சு, கொஞ்சம் பயத்தோடதான் அவருக்குப் போன் பண்ணேன். என் வருத்தத்தைத் தெரிவிச்சப்ப, அவர் சிரிச்சிக்கிட்டே,  ‘நீங்க வருத்தப்படாதீங்க.. இது காலத்தின் கட்டாயம்’னு சொன்னார்.

எனக்கு தெரிந்து தமிழ்த் திரையுலகில் நேர்மையான, உண்மையான மனிதர்களில் ஆர்.எம்.வீரப்பனும் ஒருவர். அவர் இங்கே பேசும்போது, ‘நான் இதுவரைக்கும் என் வாழ்க்கையில ஒரே ஒரு தடவைதான் டாக்டர்கிட்ட போயிருக்கேன்’னு சொன்னார். அவர் இன்னும் ஆரோக்கியமா நீண்டநாள் வாழணும்.

50 வயசுக்கு மேல இருக்குறவங்க எல்லாரும் தினசரி எக்சர்சைஸ் செய்து டாக்டரிடம் போகாம உடம்ப காப்பாத்திக்குங்க. நான் ஆஸ்பத்திரியில பட்டபாடு எனக்குத்தான் தெரியும்.

ஆர்.எம்.வீ. சார் என்கிட்டே அடிக்கடி போன்ல பேசுவார். காமராஜர், எம்.ஜி.ஆர்-கிட்டே எல்லாம் பேசினவர் என்கிட்டே பேசுறாரேனு சந்தோஷமா இருக்கும்.

எல்லாரும் ஏன் நாங்க கூப்பிடுற நிகழ்ச்சிக்கு வரமாட்டேன்னு சொல்றீங்கனு கேட்குறாங்க. எனக்கு வரணும்னு மனசுக்குள்ளே தோணணும். அப்பத்தான் வருவேன். இதோ இந்த நிகழ்ச்சிக்கு என்னை யாருமே கூப்பிடலை. நானாகத்தான் வந்தேன்..

என்கிட்ட இப்போ பலரும், ‘நான் இப்போ நடிக்கிற ‘கபாலி’, -‘பாட்ஷா’வை மிஞ்சுமா?’ன்னு கேட்கிறாங்க. ‘’பாட்ஷா’’வை மிஞ்சும் அளவுக்கு இன்னொரு படம் வருமான்னு தெரியல. ஒரு ‘பாட்ஷா’தான்.. அது மாதிரி படத்துல ஒரு தடவைதான் நடிக்க முடியும். அடிக்கடி முடியாது.” என்றார்.

 உண்மைதானே..?!

Our Score