“ரஜினியை மட்டும் அமெரிக்காவிற்குள் அனுமதித்தது எப்படி.?” – நடிகை கஸ்தூரியின் சர்ச்சை கேள்வி..!

“ரஜினியை மட்டும் அமெரிக்காவிற்குள் அனுமதித்தது எப்படி.?” – நடிகை கஸ்தூரியின் சர்ச்சை கேள்வி..!

“அமெரிக்கா தங்கள் நாட்டிற்கு இந்திய குடிமக்கள் நேரடியாக வருவதற்குத் தடை விதித்துள்ள நிலையில், ரஜினிகாந்த் மட்டும் அமெரிக்காவுக்குள் எப்படி சென்றார்..? மருத்துவம் சார்ந்த விஷயங்களுக்குக்கூட அமெரிக்க அரசு இந்தியர்களுக்கு விதிவிலக்கு அளிக்கவில்லை என்பதால் எப்படி அமெரிக்காவுக்குள் நுழைந்தார் என்பதை ரஜினி சார் தெளிவுபடுத்த வேண்டும்…” என்று நடிகை கஸ்தூரி ட்வீட் போட்டுள்ளார்.

70 வயதான சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். இதைக் காரணமாகக் காட்டித்தான் அவர் அரசியலில் இறங்காமல் தவிர்த்துவிட்டார்.

ரஜினி அவ்வப்போது அமெரிக்கா சென்று உடல் பரிசோதனை செய்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு ஹைதராபத்தில் அண்ணாத்த’ படப்பிடிப்பில் பங்கேற்றபோது அவருக்கு ரத்த அழுத்த பிரச்சினைகள் ஏற்பட்டது.

இதையடுத்து அங்குள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார் ரஜினி. சமீபத்தில் மீண்டும் ஹைதராபாத் சென்று படப்பிடிப்பில் பங்கேற்றார்.

தான் நடிக்க வேண்டிய காட்சிகள் அனைத்தையும் முடித்து கொடுத்து விட்டு சென்னை திரும்பிய அவர், கடந்த 19-ம் தேதி தனது இரண்டாவது மகளான சவுந்தர்யாவுடன் அமெரிக்காவுக்குப் புறப்பட்டு சென்றார்.

அமெரிக்காவில் மின்னசோட்டா மாகாணத்தில் உள்ள ராச்செஸ்டர் என்னும் நகரில் இருக்கும் மயோ மருத்துவமனையில் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொண்டார். அங்கே அவருக்கு பல்வேறு உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன..

மகள்கள் ஐஸ்வர்யாவும், சவுந்தர்யாவும் ரஜினிகாந்தின் உடன் உள்ளனர். ரஜினி இ்ன்னும் 3 வாரங்கள் அமெரிக்காவில் தங்கி இருப்பார் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றது குறித்து நடிகை கஸ்தூரி சில சந்தேகங்களை எழுப்பி உள்ளார். இது குறித்து தனது டிவீட்டர் பக்கத்தில் சில கேள்விகளை கஸ்தூரி கேட்டுள்ளார்.

அவர் தனது பதிவில், “கடந்த 2021 மே மாதம் முதலே அனைத்து இந்திய குடிமக்களுக்கும் கொரோனா காரணமாக இந்தியாவில் இருந்து நேரடியாக பயணம் செய்ய அனுமதியில்லை என்று அமெரிக்கா தடை செய்துள்ளது. இதில் மருத்துவ விதிவிலக்குகள் எதுவும் வழங்கப்படவில்லை.

இந்த நேரத்தில் ரஜினிகாந்த் மட்டும் எப்படி அமெரிக்காவுக்கு பயணம் செய்தார்..? அவர் திடீரென அரசியலில் இருந்து பின் வாங்கினார். இப்போது இப்படி அமெரிக்காவில் தடையுத்தரவு உள்ள நிலையிலும் சென்றிருக்கிறார். இந்த பயணம் எப்படி ரஜினி ஸாருக்கு மட்டும் சாத்தியமானது. இதில், தெளிவான தகவல்கள் இல்லை. ரஜினி சார், தயவு செய்து இதை தெளிவுபடுத்துங்கள்.

தெளிவுபடுத்த வேண்டும் என்று நான் கூறுவதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. ஏனெனில், அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்கள் அல்லது அமெரிக்காவிலேயே படித்துக் கொண்டிருக்கும் இந்தியர்கள் மட்டும்தான் அமெரிக்காவுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுகிறது. அதுவும் மற்ற நாடுகளின் வழியாகத்தான் இந்தியர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். எனவே, ரஜினியின் அமெரிக்க விஜயம் நிச்சயமாக ஒரு மர்மான விஷயமாகும்.

ரஜினி இந்திய அரசிடம் இருந்து மருத்துவ விலக்கு பெற்றிருக்கலாம் என்று பலர் கூறுகிறார்கள். இது இன்னும் கவலை அளிக்கிறது. இந்தியாவில் இருக்கும் சிறந்த மருத்துவமனைகளால் சிகிச்சையளிக்க முடியாத அளவிற்கு அவரது உடல்நிலையில் அப்படியென்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது..?

ரஜினி சிகிச்சை பெற்று வரும் மயோ கிளினிக் இருதய பராமரிப்புக்குத்தான் பெயர் பெற்றது. நான் அதைப் பற்றி எவ்வளவு அதிகமாக நினைக்கிறேனோ, அவ்வளவு மோசமாக இருக்கிறது.

மேலும் ரசிகர்களே, தயவு செய்து ‘ரஜினிகாந்திற்கு இந்த விதிகள் பொருந்தாது’ போன்ற விஷயங்களைச் சொல்ல வேண்டாம். அது மிகப் பெரிய விஷயம். அப்படி ஏதேனும் இருந்தால், அத்தகைய மிகப் பெரிய ஐகான்கள் சட்டத்தை மதிக்கும் குடிமகனாக வருவதற்கு மிகவும் கவனமாக இருக்க வேண்டும்…” இவ்வாறு நடிகை கஸ்தூரி தனது ட்வீட் பதிவில் கூறியுள்ளார்.

கஸ்தூரியின் இந்த டிவீட்டிற்கு ரஜினி ரசிகர்கள் மிகவும் கடுமையாக கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். கஸ்தூரியும் சளைக்காமல் அவர்களுடன் வாதிட்டு வருகிறார்.

“ரஜினிக்கு மத்திய அரசில் இருக்கும் செல்வாக்கிற்கு இதெல்லாம் ஒரு சின்ன விஷயம்.. உங்களுக்கும், ரஜினிக்கும் தனிப்பட்ட முறையில் என்ன பிரச்சினை அதைச் சொல்லுங்க முதல்ல..?” என்று ரஜினி ரசிகர்கள் கஸ்தூரியை கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். கஸ்தூரியும் இதற்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக தேசிய அரசியலுக்கு வந்து பிரதமர் வேட்பாளராக தேர்தலில் நின்றபோது ரஜினியின் வீட்டிற்கு நேரில் வந்து அவரிடத்தில் ஆதரவு கோரினார். பா.ஜ.க. தலைவர்கள் பலரும் அவரை கடந்த சில ஆண்டுகளாக சந்தித்த வண்ணம்தான் இருந்தார்கள்.

இந்தத் தேர்தலின்போதுகூட ரஜினி கட்சி ஆரம்பித்து பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து தேர்தலில் நிற்பார் என்றெல்லாம்கூட எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் தனது உடல் நிலையைக் காரணம் காட்டி ரஜினி அரசியலுக்குள் வராமல் தப்பித்துக் கொண்டார்.

ஆனாலும், இந்த மருத்துவ சிகிச்சை பயணத்திற்கு மத்திய அரசே முனைந்து அமெரிக்க அரசிடம் பேசி ரஜினிக்கு சிறப்பு அனுமதி பெற்றுக் கொடுத்திருக்கலாம் என்றே கருதப்படுகிறது. ஏனெனில் ரஜினியின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை எங்கே நடைபெற்றதோ, அங்கேதான் அதற்கடுத்த மருத்துவ பரிசோதனைகளையும் செய்தாக வேண்டும் என்பதால் அமெரிக்க அரசும் அதற்கு அனுமதியளித்திருக்கலாம்..

எப்படியிருந்தாலும் ஒரு இந்தியராக, ஒரு தமிழராகக்கூட பார்க்க வேண்டாம். சக நடிகராக.. அதுவும் உச்ச நடிகராக. 70 வயதான மனிதராக.. பார்த்தாவது ரஜினி பற்றிய இந்த சர்ச்சையை கஸ்தூரி எழுப்பியிருக்க வேண்டாம் என்பதே சமூக வலைத்தளவாசிகள் பெரும்பாலோரின் கருத்து..!

Our Score