full screen background image

“ஜெயலலிதாவின் துன்பத்திற்கு நானும் காரணமா இருந்தி்ட்டேன்..” – ரஜினியின் வருத்தம்..!

“ஜெயலலிதாவின் துன்பத்திற்கு நானும் காரணமா இருந்தி்ட்டேன்..” – ரஜினியின் வருத்தம்..!

மறைந்த முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதாவின் மறைவையொட்டி அவருக்கு நினைவஞ்சலி கூட்டத்தை தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் இன்று மாலை கோடம்பாக்கம் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்தக் கூட்டத்தில் ரஜினி, கே.எஸ்.ரவிக்குமார், நாசர், விஷால், கார்த்தி, சிவகார்த்திகேயன், சிவக்குமார், விவேக், வடிவேலு, ஜீவா, உதயா, நந்தா, மனோபாலா, டி.பி.கஜேந்திரன், பசுபதி, பொன்வண்ணன், ஆர்.வி.உதயகுமார், சரவணன், ராஜேஷ், மன்சூரலிகான், கார்த்திக், எஸ்.வி.சேகர், ஐசரி கே.கணேஷ், நடிகைகள் ரோகிணி, ஷீலா, வாணிஸ்ரீ, ரேகா, கோவை சரளா, லலிதகுமாரி, சோனியா, குட்டி பத்மினி, சங்கீதா, லதா, ஜெயமாலினி, ஆர்த்தி, சித்ரா, அம்பிகா, ராதா, சச்சு, ஸ்ரீபிரியா, பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

img_2018

நிகழ்ச்சியின் துவக்கத்தில் ஜெயலலிதாவின் மரணத்தையொட்டி அவருக்காக ஒரு நிமிட நேரம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. 

இந்த நிகழ்வில் நடிகர் ரஜினி பேசும்போது, “1996 தேர்தலில் ஜெயலலிதா தோல்வியடைய நானும் ஒரு காரணமா இருந்துட்டேன். அந்தத் தேர்தலின்போது நான் பேசிய பேச்சால் அவர் மனம் துன்பப்பட்டிருக்கும். அதுக்கும் நானே காரணமா இருந்திட்டேன்..

இந்த நேரத்துல என்னுடைய மகள் ஐஸ்வர்யாவின் திருமணத்தை போயஸ் கார்டன் வீட்டிலேயே நடத்தினேன். அப்போ அவங்களும் பக்கத்துலதான் இருக்காங்க. கூப்பிடாமல் செய்தால் நல்லாயிருக்குமா என்று யோசித்தேன்.  தர்மசங்கடமா இருந்துச்சு.. சரி.. ஒரு மரியாதைக்கு அவரையும் அழைப்பதுதான் சரியா இருக்கும்னு நினைத்து அவரை சந்திக்க நேரம் கேட்டேன். மறுநாளே அவரைச் சந்தித்து ஐஸ்வர்யா திருமண அழைப்பிதழை கொடுத்தேன். வாங்கிப் பார்த்தார். பின்பு, அதே நாளில் என் கட்சித் தொண்டரின் திருமணமும் இருக்கு. பரவாயில்லை. நான் கண்டிப்பா இந்தக் கல்யாணத்துக்கு வருவேன் என்று சொன்னார். அதேபோல் கல்யாணத்துக்கு வந்து அவரை முன்னிலை வகித்து அந்தக் கல்யாணத்தை நல்லபடியாக நடத்தியும் கொடுத்தார்.

ஜெயலலிதா ஒரு வீரப் பெண்மணி. வைரம் போன்றவர். இந்த ஆணாதிக்க சமூகத்தில் அழுந்தப்பட்டு வைரமாக மின்னியுள்ளார். அவர் போன பிறகு கோடானுகோடி மக்களின் கண்ணீரால் கோஹினூர் வைரமாக புரட்சித் தலைவரின் சமாதி அருகிலேயே அவரும் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அவரைப் போன்று ஒரு போராட்ட குணமுள்ளவரை நான் பார்த்ததேயில்லை. அவரைப் போல சோதனைகளையெல்லாம் சாதனைகளாக மாற்றியவர் வேறு யாரும் கிடையாது. அடுக்கடுக்காக வந்த விமர்சனங்களையும் மீறி வெற்றிகளைக் குவித்தவர் அவர். அவரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கு. 2 வயதில் அப்பாவை இழந்து.. சென்னைக்கு வந்து படிக்கத் துவங்கி.. படிப்பையும் பாதியில் நிறுத்தி சினிமாவில் நடிக்கத் துவங்கி.. 22 வயதில் அம்மாவையும் இழந்து.. எத்தனையோ கஷ்டங்களுக்கிடையில்தான் வளர்ந்தார்.

புரட்சித் தலைவர் விட்டுச் சென்ற கட்சியையும் இத்தனையாண்டுகளாக கட்டிக் காப்பாற்றினார். தன்னுடைய உடல்நிலை கஷ்டமான நிலைமையிலேயும் தேர்தல் பிரச்சாரம் செய்து அதிமுகவை அரியணையில் ஏற்றியவர். அந்த பெரியாத்மா இன்றைக்கு மகாத்மா ஆகிவிட்டது. அவருடைய ஆத்மா சாந்தியாக வேண்டுகிறேன்..!” என்றார் வருத்தத்துடன்..!

Our Score