2013-ம் ஆண்டு ‘விடியும் முன்’ என்ற படத்தை பார்த்தபோது ஏற்பட்ட அதே பரபரப்பு உணர்வுதான் இந்தப் படத்தைப் பார்க்கும்போதும் தோன்றியது.
புதிய இயக்குநர், சிறிய நடிகர்கள் என்று சாதாரணமாக போய் அமர்ந்தால் நமது ரசிப்புத் திறனுக்கு பெரும் தீனியைப் போட்டிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஏ.ஜி.அமித்.
திருட்டு, கொள்ளை பற்றிய கதைதான். ஆனால் இதை நியாயப்படுத்தும்விதமாக சிறப்பான இயக்கமும், கதையை மறக்கடித்த நடிப்பும், விறுவிறுப்பான திரைக்கதையும் அமைந்திருக்கிறது.
ஹீரோவான வீரா தனது நண்பர்கள் அஜய் மற்றும் சிவாவுடன் இணைந்து சின்னச் சின்ன திருட்டுக்களைச் செய்து ஒரே அறையில் தங்கியிருந்து பொழப்பை ஓட்டி வருகிறார்.
ஒரு டூவீலரை விற்பனைக்குத் தயார் என்று சொல்லி விளம்பரம் கொடுப்பது. வருபவரிடம் தன்னுடைய ஆட்களையே போட்டியாளராகப் பயன்படுத்தி ரேட்டை அதிகப்படுத்துவது.. பின்பு உடனடியாக பணம் வேண்டும் என்று நிர்ப்பந்தித்து பணத்தை வாங்கிக் கொண்டு வண்டியை கொடுப்பது. தொடர்ந்து பின்னாடியே சென்று அந்த வண்டியை களவாடிக் கொண்டு செல்வது.. இது போன்ற சின்னச் சின்னத் திருட்டுக்களையே செய்து வருகிறார்கள் இந்த மூன்று நண்பர்களும்… பெரிய அளவுக்கு திருட்டுத்தனம் செய்து மாட்டிக் கொள்ளாதபடிக்கு இப்போதைக்கு இந்தத் தொழிலில் சிறு தொழிலதிபர்களாகவே இருக்கிறார்கள்.
ஒரு நாள் ஷேர் ஆட்டோவில் பயணிக்கும்போது சக பயணியாக ஹீரோயின் ரெஜினாவை சந்திக்கிறாகள் மூவரும். ரெஜினா இவர்களின் ‘ஜொள்’ளுதலை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு தன்னுடைய ‘எல்.எம்.எம்.’ திட்டத்தில் சேர இவர்களை அழைக்கிறார். மூவருமே நேரில் சென்று மாட்டிக் கொள்கிறார்கள். ஆனால் வீரா மட்டுமே திட்டத்தில் சேர்கிறான்.
இதே நேரம் ‘ஆடுகளம்’ நேரன் பைனான்ஸ் கம்பெனி மோசடி வழக்கில் சிறையில் தண்டனையை அனுபவித்துவிட்டு வெளியில் வருகிறார். வந்தவர் ஊரிலேயே போலி பத்திரம் தயாரிப்பதில் வல்லவரான மாதவ ஐயருடன் இருக்கிறார். இந்த மாதவ ஐயருக்கும் வீரா அண்ட் கோ-விற்கும் நெருங்கிய நட்பு உண்டு.
நரேனின் தூண்டுதலின்பேரில் ஒரு பெரிய திருட்டு வேலை இருப்பதாகச் சொல்லி இவர்களை அழைக்கிறார் ஐயர். ‘ஊரில் மிகப் பெரிய ஜூவல்லரியான சக்தி ஜூவல்லரியை கொள்ளையடிக்க வேண்டும்’ என்கிறார் ஐயர். ‘அது ரொம்பப் பெரிய மேட்டர். அதெல்லாம் எங்களுக்கு ஒத்து வராது..’ என்று சொல்லி அப்போதைக்கு தப்பிக்கிறான் வீரா.
இப்போதைக்கு சோத்துக்கு வழி வேண்டுமே என்று அடுத்து யாரிடம் ஆட்டைய போடலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது அஜய் ஒரு விஷயத்தைச் சொல்கிறான். பெங்களூரில் இருந்து கருப்புப் பணமாக 10 லட்சம் ரூபாய் வருகிறது என்றும் அதனை கொள்ளையடிக்கலாம் என்றும் சொல்கிறான்.
இந்த பிளானை மூவரும் சேர்ந்து செய்தாலும் கடைசியில் சொதப்பலாகி வீரா தப்பி வந்ததே பெரிய விஷயமாக இருக்கிறது. இதில் தோற்றதற்கு காரணம் யாரோ விஷயத்தை லீக் செய்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்ட வீரா அஜய்யின் மூலமாக இதனைச் செய்யச் சொன்னது மாதவ ஐயர்தான் என்று தெரிந்து அவரிடம் சென்று சண்டையிடுகிறான்.
மாதவ ஐயருடன் ஏற்பட்ட சண்டையினால் கடும் விரக்தியடையும் வீரா, சக்தி ஜூவல்லரியின் ஓனரான பட்டியல் சேகரிடம் போய் அவரது கடையை யாரோ ஒரு சிலர் கொள்ளையடிக்க திட்டமிடுகிறார்கள் என்று போட்டுக் கொடுக்கிறான். இதனால் கோபமடையும் பட்டியல் சேகர், நரேனை விபத்துக்குள்ளாக்கி மருத்துவமனையில் படுக்க வைக்கிறார்.
இப்போது கோபப்பட்டு வீராவைத் தேடி வரும் மாதவ ஐயர், பட்டியல் சேகர் எவ்வளவு பெரிய பிராடு என்பதையும், செய்யாத குற்றத்திற்காக நரேன் ஜெயில் தண்டனை அனுபவித்து வந்திருப்பதையும் எடுத்துச் சொல்ல வீரா மனம் மாறுகிறான். அதே நேரத்தில் இவர்கள் திருடர்கள் என்பதையறிந்து சண்டையிட வந்த காதலி ரெஜினாவும் கண் கலங்குகிறாள்.
உண்மையில் அவளது தந்தையும் இதே பைனான்ஸ் கம்பெனியில் பலரிடமும் கடன் வாங்கி டெபாஸிட் செய்துவிட்டு பணம் கிடைக்காமல் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டவர். அந்தக் கடனுக்காகத்தான் ரெஜினா இப்போதும் கடுமையாக உழைத்து வருகிறாள். உண்மையறிந்து கோபப்படும் வீரா அந்தக் கொள்ளையடிப்புத் திட்டத்தை தான் செய்து முடிப்பதாக ஐயரிடம் கூறுகிறான். அது அவனால் முடிந்ததா இல்லையா என்பதுதான் மிச்சம் மீதி படம்..!
முதல் சில காட்சிகளைப் பார்த்தவுடனேயே படம் வித்தியாசமானது என்பது புரிந்துவிட்டது. அத்தனை சுத்தமான கதை. சுவையான வசனங்கள்.. குறைவில்லாத இயக்கம்.. ஒரு திரில்லர் படத்திற்கே உரித்தான பின்னணி இசை.. அடுத்த்து என்ன என்று எதிர்பார்க்க வைக்கும் திரைக்கதை.. வேறென்ன வேண்டும் ஒரு நல்ல திரைப்படத்திற்கு..!?
படத்தின் ஹீரோவான வீரா ஏற்கெனவே ‘நடுநசி நாய்கள்’ படத்தில் நடித்திருந்தார். கொஞ்சம் இடைவெளிக்கு பின்பு இப்போது இந்தப் படத்தில்தான் ஹீரோவாகியிருக்கிறார். அவரது முகத்திற்கேற்ற கேரக்டர். ரெஜினாவை அவசரத்திலும், கோபத்திலும் ஒரு வார்த்தை தவறாகச் சொல்லிவிட்டு வாபஸ் வாங்க முடியாமல் அறை வாங்கிக் கொண்டு தவிக்கின்ற காதல் உணர்வை முழுமையாகக் காட்டியிருக்கிறார்.
திட்டம் போடும் காட்சிகளிலெல்லாம் இவர் உண்மையாகவே நல்லதுதான் செய்கிறாரா..? அல்லது நண்பர்களையெல்லாம் மாட்டிவிடும் வேலையைத்தான் செய்கிறாரா என்றுகூட புரிந்து கொள்ள முடியவில்லை. அந்த அளவுக்கு யதார்த்தமான நடிப்பைக் காண்பித்திருக்கிறார். இயக்குநருக்கு மிகப் பெரிய பலம் இவரது நடிப்பே..
இவரது நண்பர்களான அஜய் மற்றும் சிவா இருவரில் சிவாவின் சில, பல கமெண்ட்டுகள் படத்தின் பல இடங்களிலும் சிரிப்பை வரவழைத்திருக்கிறது. ரெஜினாவுக்கு இந்தப் படத்தில்தான் அதிகப்படியான நடிப்புக்கேற்ற காட்சிகள்.. கச்சிதமாக நடித்திருக்கிறார். தன்னுடைய குடும்பச் சூழலால் தான் இப்படி மார்க்கெட்டிங் வேலையைச் செய்வதாக அவர் சொல்லுமிடத்தில் அவர் மீதான ஒரு பரிதாப உணர்வை வரவழைத்திருக்கிறார். இதுவே படத்திற்கு இவரால் கிடைத்த ஒரு பெரிய உதவி.
‘ஆடுகளம்’ நரேன் சில காட்சிகளே வந்தாலும் அழுத்தமாக தனது கேரக்டருக்கு வெயிட் கொடுத்திருக்கிறார். மாதவ ஐயராக வரும் இளவரசுவும் அப்படியே.. ‘பட்டியல்’ சேகர் வில்லனாக.. நரேனை ஏமாற்றும் நண்பனாக நடித்திருக்கிறார். ஜூவல்லரி நகைகள் திருடு போனால் அதனை எப்படி ரிக்கவர் செய்வது..? எப்படி இன்ஸூரன்ஸ் கிளெய்ம் செய்வது..? எப்படி பிளாக் மணியை வொயிட்டாக்குவது..? என்றெல்லாம் சூப்பராக பிளான் போடுகிறார். கடைசியில் தனது திட்டம் தன் கண் முன்னாலேயே பணால் ஆனதைப் பார்த்து ஏமாறுவதும் ரசனையான காட்சிகள்..!
கிளைமாக்ஸில் டிவிஸ்ட்டுகள் தொடர்ந்து வந்து கொண்டேயிருப்பதால் படத்தின் விறுவிறுப்பு கூடி சீட்டின் நுனிக்கே தள்ளிக்கொண்டு வந்துவிட்டார்கள். இடையில் போலீஸ் ஒரு பக்கம்.. ஹோட்டலில் கருப்புப் பணமான 10 லட்சம் உள்ள பேக்கைத் திருட்டு கொடுத்தவர்கள் இன்னொரு பக்கம்.. இவர்களையும தந்திரமாக ஸ்பாட்டுக்கு வரவழைத்திருக்கும் திரைக்கதைக்குத்தான் ‘ராஜதந்திரம்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள் போலிருக்கிறது. பொருத்தமான பெயர்.
ஜி.வி.பிரகாஷின் இசையில் ஒரேயொரு பாடல்தான் இருக்கிறது. அதையும் ஜி.வி.பிரகாஷே பாடியிருந்தாலும் ரெஜினாவுக்காக அந்தப் பாடல் காட்சியைப் பார்க்கலாம்… திருட்டு காட்சிகளில் பின்னணியில் ஒலிக்கும் இசை அந்த சிச்சுவேஷனை கூடுதலாக ரசிக்க வைத்திருக்கிறது. பாராட்டுக்கள் பிரகாஷ் ஸார்..
முதல்பட இயக்குநர் என்பதால் படம் எப்படியோ என்கிற எண்ணத்தையெல்லாம் இனிமேல் மூட்டை கட்டி வைத்துவிட்டு கவலைப்படாமல் புதிய படங்களை பார்க்கலாம் என்கிற ஒரு நம்பிக்கையை இந்த இயக்குநர் இந்தப் படத்தின் மூலமாக புகுத்தியிருக்கிறார். தெளிவான திரைக்கதை.. சிறப்பான இயக்கம்.. இது இரண்டும் இருந்தாலே கெட்ட கதையை வைத்துக்கூட ஹிட்டடித்துவிடலாம். இதற்கு இந்தப் படமும் ஒரு உதாரணம்தான்..!
அறிமுக இயக்குநர் ஏ.ஜி.அமித்திற்கு நமது பாராட்டுக்களும், வாழ்த்துகளும் உரித்தாகட்டும்..!
‘ராஜதந்திரம்’ – சினிமா ரசிகர்கள் அனைவரும் அவசியம் பார்த்தே ஆக வேண்டிய படம்..!