full screen background image

“கொம்பன் படம் வெளியானால் சாதிக் கலவரம் ஏற்படும்..” – டாக்டர் கிருஷ்ணசாமி எச்சரிக்கை..!

“கொம்பன் படம் வெளியானால் சாதிக் கலவரம் ஏற்படும்..” – டாக்டர் கிருஷ்ணசாமி எச்சரிக்கை..!

ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் கார்த்தி, லட்சுமி மேனன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கொம்பன்’. மேலும் இப்படத்தில் ராஜ்கிரண், கோவை சரளா, கருணாஸ், தம்பி ராமையா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய.. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ‘குட்டிப்புலி’ படத்தை இயக்கிய முத்தையாதான் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார்.

சமீபத்தில் ‘கொம்பன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதன் ட்ரெய்லருக்கு இணையத்தில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. வரும் மார்ச் 27-ம் தேதி ‘கொம்பன்’ திரைப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எதிர்பார்த்ததுபோலவே படத்திற்கு எதிர்ப்புகள் வர ஆரம்பித்துவிட்டன.  இந்தப் படம் முழுக்க முழுக்க இராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி அருகேயிருக்கும் ஆப்பநாடு என்கிற சிறிய ஊரிலும், அதைச் சுற்றியிருக்கும் ஊர்களிலும் படமாக்கப்பட்டிருக்கிறது.

இந்தப் படத்தின் டிரெயிலர் மட்டுமே இதுவரையில் ரிலீஸாகியிருக்கும் நிலையில், ‘இது இராமநாதபுரம் பகுதியில் வசிக்கும் இரண்டு சாதிகளுக்கிடையே பிளவை ஏற்படுத்தும். எனவே படத்தில் சாதி ரீதியிலான அடையாளங்கள் இருந்தாலும், சாதி மோதல் தொடர்பான காட்சிகள் மற்றும் சாதிய அடையாள சின்னங்கள் இருந்தால் அவற்றை நீக்க வேண்டும். நீக்காமல் படத்தை வெளியிட்டால் தென் மாவட்டங்களில் பெரும் கலவரமே ஏற்படும்’ என்று சென்சார் போர்டிடம் கடிதம் கொடுத்திருக்கிறார் ‘புதிய தமிழகம்’ கட்சியின் தலைவரான டாக்டர் கிருஷ்ணசாமி.

இது தொடர்பாக டாக்டர் கிருஷ்ணசாமி சென்சார் போர்டுக்கு எழுதியிருக்கும் கடிதம் இதுதான்  :

“திரைப்படங்கள் வெறும் பொழுபோக்கு என்ற நிலையைத் தாண்டி மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் வாழ்வைப் பாதிக்கும் மிகப் பெரும் நிறுவனங்களாக மாறிவிட்டன.

அதுவும் குறிப்பாக தமிழ்த் திரைப்படங்கள் தமிழருடைய கலாச்சார வாழ்வு, பண்பாடுகள், அரசியல் நிலைப்பாட்டையே மாற்றி அமைக்கும் அளவுக்கு உருவெடுத்துவிட்டன. பலருடைய அரசியல் வாழ்க்கைக்கும் சமூக அறிமுகத்துக்கும் திரைப்படங்களையே மிகப் பெரிய கருவிகளாக பயன்படுத்தி வருகிறதை தாங்கள் அறிவீர்கள்.

சமூக அந்தஸ்து, பண்பாடுகள், அரசியல் வளர்ச்சி ஆகியவற்றைத் தூக்கி நிறுத்திக் கொள்ள திரைப்படங்களே பெரிதும் பயன்படுவதால் அதனால் ஏற்படும் சமூக தாக்கங்கள், இரு வேறு குழுக்களிடையே ஏற்படும் மோதலுக்கான வாய்ப்புகள் ஆகியவற்றைத் தடுப்பது குறித்து சமூக அக்கறையோடு விரைவில் வெளிவர உள்ள ‘கொம்பன்’ திரைப்படம் குறித்து தங்களுடைய கவனத்திற்கு கொண்டு வந்து தீர்வு காண விரும்புகிறேன்.

ஞானவேல்ராஜா என்பவரது தயாரிப்பில் முத்தையா என்பவரால் இயக்கப்பட்டு நடிகர் கார்த்தி மற்றும் லட்சுமிமேனன் நடித்து வெளிவர உள்ள ‘கொம்பன்’ திரைப்படம் இன்று உள்ள நிலையிலேயே வெளிவருமாயின் தென்தமிழகத்தில் மிகப் பெரிய சாதி மோதலுக்கு வித்திடும்.

‘கொம்பன்’ என்ற பெயரே வன்முறையாளனை போற்றிப் புகழும் ஒரு சொற்றொடர். அது நல்ல பண்பட்ட மனிதர்களைக் குறிக்கும் சொல் அல்ல.

இத்திரைப்படத்தில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள ஆப்பநாட்டு கிராமத்தை மையமாக வைத்தே முக்கிய கதாபாத்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆப்பநாடு மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் முக்குலத்தோரில் ஒரு பிரிவினரான மறவர்கள், தங்களை ‘ஆப்ப நாட்டு மறவர்கள்’ என்று அடையாளப்படுத்திக் கொள்வதுண்டு.

1918-ல் இருந்தே அப்பகுதி மறவர்கள் பிற தமிழ் சாதி மக்களான தேவேந்திரகுல வேளாளர்கள், ஆதி திராவிடர்கள் (பறையர்கள்) மற்றும் நாடார்கள் மீது கடும் கட்டுப்பாடுகளையும், ஒடுக்கு முறைகளையும் ஏவிவிட்டவர்கள் என்பதற்கான ஆதாரங்கள் பல உண்டு. இதற்கு ‘எட்டுக் கட்டளை’ என்றும் ‘பதினொறு கட்டளை’ என்றும் பெயருண்டு.

இந்தக் கட்டுப்பாடுகளை எதிர்த்துப் போராடி எண்ணற்ற தேவேந்திரகுல வேளாளர்கள் உயிர்த் தியாகம் செய்திருக்கிறார்கள்; எண்ணிலடங்கா உடைமைகளை இழந்திருக்கிறார்கள்.

அதன் தொடர்ச்சியாக 1957 செப்டம்பர் 11 அன்று தியாகி இம்மானுவேல் சேகரன் படுகொலை செய்யப்பட்டார். அதன் பின்னணியிலேயே பெரிய அளவில் முதுகுளத்தூர் கலவரம் வெடித்தது. 1978 முதல் 1980 வரையிலும் தொடர்ச்சியாக ஆப்பநாடு மறவர்களுக்கும், தேவேந்திரகுல வேளாளர்களுக்கும் தொடர் மோதல்கள் ஏற்பட்டன.

1982, 1989, 1993, 1995, 1997, 2001 ஆகிய ஆண்டுகளில் மீண்டும் தொடர் கலவரங்கள் நடந்தன. 2011-ல் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 தேவேந்திரகுல வேளாளர்கள் மரணமெய்தினார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 11-ஆம் நாள் தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினம், அக்டோபர் 30-ஆம் நாள் இன்னொரு தலைவரின் நினைவு தினம் ஆகிய நாட்களில் மேற்குறிப்பிட்ட இரு பிரிவினருக்கிடையே மோதல்கள் நிலவி வருவதை நாடே அறியும். அப்பகுதியில் சிறு சாதிப்பொறி எழுந்தால்கூட பெருங்காட்டுத் தீயாக மாறும் என்பது கடந்த கால வரலாறு.

‘கொம்பன்’ திரைப்படம் முழுக்க முழுக்க இராமநாதபுரம் மற்றும் ஆப்பநாடு மறவர்களை தூக்கிப் பிடிக்கக் கூடிய வகையில் அமைந்துள்ளதாக தெரிகிறது. கதாநாயகன் மேற்குறிப்பிட்ட சமுதாயத்தை பிரதிபலிப்பவராகவும், அவரின் எதிரிகளாக சித்தரிக்கப்படக் கூடியவர்கள் தேவேந்திரகுல சமூகத்தைச் சார்ந்தவர்கள் என அடையாளப்படுத்தும்விதமாக வில்லனுடைய கை மணிக்கட்டில் சிவப்பு பச்சை கயிறு கட்டப்பட்டிருக்கிறது.

மேலும், ‘இராமநாதபுரம் மாவட்டத்தில் எங்களை எதிர்க்க எவன்டா இருக்கான்?’ என்பது போன்ற வசனங்களும் இடம் பெற்றிருப்பது அப்பட்டமான சாதிய தூக்கல் ஆகும். சிவப்பு பச்சை வண்ணம் தென் தமிழகத்தில் திரளாக வாழக் கூடிய தேவேந்திரகுல வேளாளர்களை அடையாளப்படுத்தும் வண்ணம் ஆகும். மேலும் ‘புதிய தமிழகம்’ கட்சிக் கொடி மேலே சிவப்பும் கீழே பச்சையும் கொண்டதாகும்.

மேலும், கதாநாயகனின் உறவுகளைக் காண்பிக்கின்றபோது கர்ண கொடூரமான உருவங்களை உருவகப்படுத்தி இருக்கிறார்கள்.

சுருக்கத்தில் இத்திரைப்படம் எந்தவிதமான கலைநயத்தோடும் பொழுது போக்கு அம்சங்களோடும் தயாரிக்கப்படவில்லை. மாறாக வன்முறையின் மூலமாக ஒரு சமுதாயத்திற்கு மேலாண்மைக் கொடுத்து, சாதி ரீதியாக ஒரு குறிப்பிட்ட பிரிவினரை தூக்கியும், பிற பிரிவினரை தாழ்த்தும்விதமாகவும், இந்திய அரசியல் சாசன விதிமுறைகளுக்கு மாறாகவும், திரைப்படங்கள் போன்ற வலிமை வாய்ந்த கலாச்சார நிறுவனங்களின் நோக்கத்திற்கு எதிராகவும் இப்படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

இத்திரைப்படத்தின் பெயரும் அதில் அடங்கியுள்ள வசனங்களும், காட்சிகளும் ஏற்கெனவே எதிரும் புதிருமாக உள்ள இரு சமுதாய மக்களிடையே இராமநாதபுரம் மற்றும் தமிழ்நாடெங்கும் மோதல்களைத் தோற்றுவிக்கும்.

எனவே மொத்தத்தில் ‘கொம்பன்’ என்ற திரைப்பட பெயரே வீண் வம்பை விலைக்கு வாங்கும். ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தின் ஒற்றுமையையும் சீர்குலைக்கும். எனவே ஆட்சேபகரமான ‘கொம்பன்’ என்ற திரைப்படத்தின் பெயருக்கும், ஒரு குறிப்பிட்ட சாதி தூக்கலுக்கான வசனங்களுக்கும், மிதமிஞ்சிய வன்முறைக் காட்சிகளுக்கும், சாதி ரீதியான அடையாளங்களுக்கும் தணிக்கைக் குழு அனுமதி அளிக்கக் கூடாது என வலியுறுத்துகிறேன்.

ஒருவேளை தணிக்கைக் குழுவின் பார்வையிலிருந்து தப்பியிருப்பின் மறு தணிக்கை செய்யப்படவேண்டும். அதுவரை இப்படத்தை திரையிடக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறேன்..”

இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி சென்சார் போர்டுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இந்தப் படத்தின் கதை கட்டுப்பெட்டியான ஒரு மாமனாருக்கும், ஜாலியான ஒரு மாப்பிள்ளைக்குமான மோதலும், அதனால் ஏற்படும் விளைவுகளும்தான் என்கிறார் இயக்குநர். இயக்குநரும் இதே பகுதியைச் சேர்ந்தவர்தானாம். தான் சின்ன வயதில் நேரில் பார்த்த ஒரு சம்பவத்தை வைத்துதான் இப்படத்தை உருவாக்கியிருப்பதாக சமீபத்தில் நடந்த பிரஸ்மீட்டில் கூறினார்.

டாக்டர் கிருஷ்ணசாமி சொல்வதே வேறுவிதமாக இருக்கிறது. ‘குட்டிப்புலி’ படமே சாதிய அடையாளங்களுடன் இருந்ததுதான். படம் கொஞ்சம் சுமாராகவே சென்றதால்தான் அதிகம் சலசலப்பு எழவில்லை. ஆனால் இந்த முறை அப்படியிருக்காது போலிருக்கு..!

இதில் இன்னொரு விஷயமும் நடந்திருக்கிறது.

மதுரை மாவட்ட தேவந்திர குல உறவின் முறை சங்கத்தின்  தலைவரான செல்வகுமார் இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில், “எங்கள் சங்கம் 2010-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. மதுரை, ராமநாதபுரம், நெல்லை மாவட்டங்களில் எங்கள் சங்க உறுப்பினர்கள் உள்ளனர். குறிப்பிட்ட சமுகத்தை உயர்வாக சித்தரித்து மற்ற சமுகத்தை இழிவுபடுத்தும் வகையில் ‘கொம்பன்’ படம்  தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் கார்த்தி நடித்துள்ளார்.

இது பற்றி பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த படம் வெளியே வந்தால் ராமநாதபுரம், முதுகுளத்துர் பகுதிகளில் பதற்றம் ஏற்படும். இரு சமுகத்தினர் மத்தியில் கொந்தளிப்பு ஏற்படும். பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும். எனவே இந்த படத்தை பார்த்து தணிக்கை சான்றிதழ் வழங்க கூடாது என்று கோரி மத்திய தணிக்கை குழுவுக்கு மனு கொடுத்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் தணிக்கை குழு எடுக்கவில்லை. எனவே இந்த ‘கொம்பன்’ படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கொடுக்க தடை விதிக்க வேண்டும்..” என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி வைத்தியநாதன் விசாரித்து, “தணிக்கை குழுவுக்கு படம் வந்த பிறகு அதை பார்த்து, மனுதாரரின் கோரிக்கையை மத்திய தணிக்கை துறை பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்..” என்று உத்தரவிட்டிருக்கிறார்.

“ஒரு திரைப்படத்திற்கு சென்சார் போர்டு அனுமதி கொடுத்த பின்பு அரசுகள்கூட அதனைத் தடை செய்யக் கூடாது..” என்று நீதிமன்றங்கள் உத்தரவு இட்டிருக்கும் நிலையில் எல்லாருக்கும் முந்திக் கொண்டு இவர்கள் இப்படி கிளம்பியிருக்கிறார்கள்.

ஏற்கெனவே கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘விருமாண்டி’ படம் துவக்கத்தில் ‘சண்டியர்’ என்கிற தலைப்பில் ஆரம்பித்தபோது உத்தமபாளையத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கே சென்று ரகளையில் ஈடுபட்டனர் இவரது கட்சித் தொண்டர்கள்.

இதற்காக ஷூட்டிங்கை கேன்ஸல் செய்துவிட்டு சென்னை வந்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை கோட்டையில் சென்று சந்தித்து தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டார் கமல்ஹாசன். ஆனால் ஜெயல்லிதாவோ மிக சிம்பிளாக ‘தலைப்பை மாற்றிவிடுங்கள்’ என்று சொல்லிவிட.. வேறு வழியில்லாமல்தான் ‘விருமாண்டி’ என்று மாற்றினார்.

இப்போது தலைப்புக்கும் பிரச்சினை..! கதைக்கும் பிரச்சினை..! வசனத்திற்கும் பிரச்சினை..! இப்படி ஆள் மாற்றி ஆள் எங்களுக்குப் பிடிக்காத விஷயத்தை எடுக்கவே கூடாது என்று மிரட்ட ஆரம்பித்தால் கடைசியில் இந்த நாட்டில் படைப்புக்கும், படைப்பாளிகளுக்கும் என்னதான் மரியாதை..? தீர்வு..?

எதுவாக இருந்தாலும் படம் வெளியான பின்பு, படத்தைப் பார்த்துவிட்டு பேசுங்களேன்.. தவறாகச் சொல்லப்பட்டிருந்தால் அப்போது தடை கேளுங்கள்.. விவாதியுங்கள். யார் வேண்டாம் என்பது..? படம் வெளிவரும் முன்பேயே எங்களுக்குக் காட்டிவிட்டுத்தான் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்பது அராஜகமில்லையா..?

திரையுலகில் கலாச்சாரக் காவலர்களைவிடவும் சாதிய காப்பாளர்களிடத்தில்தான் படைப்பாக்கமும், படைப்பாளிகளும் மாட்டிக் கொண்டு முழிக்கிறார்கள்..! ஐயோ பாவம்..!!!

இதற்கு என்னதான் தீர்வு..?

Our Score