full screen background image

பன்னிக்குட்டி – சினிமா விமர்சனம்

பன்னிக்குட்டி – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை Lyca Productions நிறுவனமும், சமீர் டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பில் பரத் ராமும் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தில் நாயகனாக யோகிபாபு நடித்துள்ளார். மேலும், கருணாகரன், திண்டுக்கல் லியோனி, சிங்கம் புலி, விஜய் டிவி புகழ் ராமர், தங்கதுரை போன்ற முன்னணி நகைச்சுவை நடிகர்கள் மற்றும் இன்னும் பல முன்னணி பிரபலங்கள்  இணைந்து நடித்துள்ளனர்.

கே இசையமைத்துள்ளார். சதீஷ் முருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரவி முருகையா கதை எழுதியுள்ளார். மேலும் இயக்குநர் அனுசரனுடன் இணைந்து திரைக்கதையும் எழுதியுள்ளார். சண்டை இயக்கத்தை ஃபயர் கார்த்திக் செய்ய, M.R.ராஜகிருஷ்ணன் (ஆடியோகிராஃபி), முருகன் (ஸ்டில்ஸ்), எம்.சிவகுமார் (தயாரிப்பு மேலாளர்), சமீர் பரத் ராம் (நிர்வாகத் தயாரிப்பாளர்) ஆகியோர் தொழில் நுட்பக் குழுவில் பணியாற்றியுள்ளனர். இந்தப் பன்னிக் குட்டி’ படத்தை  அனு சரண் இயக்கியுள்ளார்.

பன்னி மீது நம் வண்டியை ஏற்றினால் அது கெட்ட சகுனம் என்பது கிராமங்களில் இப்போதும் உள்ள நம்பிக்கை. அந்த நம்பிக்கை மூட நம்பிக்கையா.. இல்லையா.. என்பது இப்போதும் உண்மை தெரியாத கேள்விதான். அந்த நம்பிக்கையை வைத்துதான் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் அனு சரண்.

ஒரு கிராமத்தில் நாயகன் கருணாகரன் தூக்கு மாட்டி சாவப் போகும் நிலையில்தான் படம் துவங்குகிறது. அவரை ஃபாரின் ரிட்டனான விஜய் டிவி ராமர் மற்றும், தங்கதுரை இருவரும் காப்பாற்றுகிறார்கள்.

கருணாகரன் தான் ஏன் சாகத் துணிந்தேன் என்ற காரணத்தைச் சொல்கிறார். காரணம் இதுதான். கணவனோடு சண்டை போட்டுவிட்டு வீட்டிற்கு வாழாவெட்டியாக வந்திருக்கும் தங்கை, தன்னை திரும்பி கூட பார்க்காத ஆசைப்பட்ட பெண், எதற்கும் உதவாத தந்தை.. இவர்களால் தன் வாழ்வில் நிம்மதியில்லை என்பதால்தான் தான்  சாக விரும்புவதாகச் சொல்கிறார் கருணாகரன்.

“இதற்கெல்லாம் ஒரு கோடாங்கியிடம் தீர்வு இருக்கிறது” என்று சொல்லி அவரை ஒரு கோடாங்கியிடம் அழைத்துச் செல்கிறார் ராமர். அந்தக் கோடாங்கியான திண்டுக்கல் ஐ.லியோனி கருணாகரனிடம்,  “நீ ஒரு பைக்கைத் திருடினால் எல்லா சரியாகும்” என்று வினோதமாகப் பரிகாரம் சொல்ல, கருணாகரனும் அதைச் செய்கிறார்.

லியோனி சொன்னதுபோல இதன் பிறகு எல்லாமே கருணாகரனுக்கு கை கூடுகிறது. இந்த நிலையில் ஒரு பன்னி மீது பைக்கை விட்டு ஏற்றி விடுகிறார் கருணாகரன். அதற்கடுத்து எல்லாமே தப்பு தப்பாக அவர் வாழ்வில் நடக்கிறது.

இதற்கும் லியோனி ஒரு பரிகாரம் சொல்கிறார். “எந்தப் பன்னி மீது பைக்கை ஏற்றினியோ, அதே பன்னி மீது மீண்டும் பைக்கை ஏற்று” என்கிறார். கருணாகரன் அதைச் செயலாற்ற முனைகிறார்.

அங்குதான் படத்தின் நாயகனான யோகிபாபு மூலமாக ஒரு ட்விஸ்ட். அது என்ன ட்விஸ்ட்? கருணாகரன் பன்னி மீது மீண்டும் வண்டியை ஏற்றினாரா இல்லையா? என்பதுதான் இந்தப் ‘பன்னிக்குட்டி’ படத்தின் கதை.

நாயகனாக கருணாகரன் தன் பரிதாப ரியாக்‌ஷன்களால் படத்தைத் தாங்கிப் பிடிக்கிறார். ‘உப்பு கருவாடு’ படத்தில் ஹீரோவாக தன்னை நிலைநிறுத்திய கருணாகரன் இந்தப் படத்திலும் தன்னை கதையின் நாயகனாக  நிறுத்தி மிளிர்கிறார்.

யோகிபாபுவிற்கும், கருணாகரனுக்கு இணையான வேடம். நன்றாகவே நடித்துள்ளார். ஒரு சில காமெடி காட்சிகளில்  வாய்விட்டு சிரிக்க வைக்கிறார் யோகிபாபு. பழைய ஜோக் தங்கதுரை, ராமர் இருவரின் கூட்டணி கொடுத்த வேலையைச் செய்துள்ளது.

இரு நாயகிகளும் ஓரளவு ஓ.கே ரகம். லியோனியின் கேரக்டர் பெரிதாக எடுபடவில்லை. சிங்கம்புலி காமெடி டோன் வழக்கமான டோனிலே இருப்பதால் ஒரு சில இடங்களில் நமக்குத் தூக்கம் வருகிறது.

படத்தில் ஒளிப்பதிவு ஒரு கிராமத்தை துல்லியமாக காட்டி பாஸ்மார்க் வாங்குகிறது. கே-யின் இசையில் ஒரு பாட்டு மட்டும் நன்றாக இருக்கிறது. பின்னணி இசை இன்னும்கூட உயிரோட்டமாக இருந்திருக்கலாம்.

படத்தின் முன் பாதியில் இருந்த செறிவு பின் பாதியில் இல்லை. கதையோடும், கதை மாந்தர்களோடும் நாம் நெருங்க முடியாமல் போனதே படத்தோடு நாம் ஒன்ற முடியாமல் போவதற்கும் காரணமாகிவிட்டது.

திரைக்கதையில் பட்டைத் தீட்ட வாய்ப்பு இருந்தும் இயக்குநர் கோட்டை விட்டுள்ளார்.  மேலும் சில தேவையில்லாத நம்பிக்கைகளை க்ளைமாக்ஸில் உறுதிப்படுத்துகிறார் இயக்குநர்.

கதை, திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் இந்தப் ‘பன்னிக்குட்டி’ இன்னும் நம்மை ஈர்த்திருக்கும்..!

RATING : 3 / 5

Our Score