படத்தின் கதை ராஜாக்கள் காலத்தில் நடக்கிறது.. வேதாளக் கோட்டை என்னும் ராஜ்யத்தை ஆண்டு வருகிறார் அரசி ஸ்ரீதேவி. பெயரளவிற்கு அவரது ஆட்சி என்றாலும் நிஜத்தில் ஆள்வது அவரது தளபதியான சுதீப்.
இந்த ராஜ்யத்திற்கு உட்பட்ட கிராமங்களில் வரி வசூல் செய்கிறேன் என்று சொல்லி மக்களை கொடுமைப்படுத்துகிறார் சுதீப். இதனை ராணியிடம் சொல்லப் போன கிராமத்து பெரியவரான பிரபுவின் கையை வெட்டியும், உடன் சென்றவர்களை கொலை செய்தும் அக்கிரம்ம் செய்கிறார் சுதீப்.
இது நடந்து பல ஆண்டுகளான நிலையில் பிரபுவிடம் வளர்த்து வரும் அவரது வளர்ப்பு மகனான புலியான விஜய் தலையெடுக்கிறார். வரி வசூல் செய்ய வரும் தளபதியின் ஆட்களிடம் சண்டையிட்டாலும் கொஞ்சம், கொஞ்சம் வரியை கொடுத்து அனுப்பி வைக்கிறார் விஜய். புலி பதுங்குவதற்கு பாய்வதற்காகவே என்கிறார் பிரபு.
புலிப் பாய்ச்சல் காட்ட தகுந்த நேரம் காத்திருக்கும் விஜய்க்கு சின்ன வயதிலேயே அந்த ஊர்த் தலைவரான நரேனின் மகள் ஸ்ருதிஹாசன் பழக்கம். படிப்பதற்காக பக்கத்து ஊருக்குச் சென்றுவிட்டு பதின்ம வயதில் ஊர் திரும்பும் ஸ்ருதியுடன், விஜய்க்கு காதல். டூயட்டும் பாடுகிறார்.
இந்த நேரத்தில் தளபதி சுதீப்பின் ஆட்களை விஜய் எதேச்சையாக தாக்கிவிட அவர்கள் கோபமடைந்து ஊருக்குள் வந்து அதகளம் செய்துவிட்டு வளர்ப்பு தந்தையான பிரபுவை கொலை செய்துவிட்டு, ஸ்ருதிஹாசனை தூக்கிச் செல்கிறார்கள்.
இப்போது வேதாளக் கோட்டைக்கு பயணிக்க ஆயத்தமாகிறார் விஜய். தனது காதலியை மீட்க வேண்டும். தனது அப்பாவின் மரணத்துக்குப் பழி வாங்க வேண்டும் என்கிற வெறியுடன் தனது நண்பர்கள் சத்யன், தம்பி ராமையாவுடன் கிளம்புகிறார். போன காரியம் முடிகிறதா என்பதுதான் இந்த ‘அம்புலிமாமா’ டைப் கதையின் மீதம்.
விஜய் இரு கெட்டப்புகளில் நடித்திருக்கிறார். அப்பா விஜய்யாக வரும் தோற்றத்தில் இன்னும் மாற்றம் செய்திருந்தால் நன்றாகவே இருந்திருக்கும். விஷமருந்தும் தருணமும், அவருடைய வாழ்க்கைக் கதையும் சோகத்தைக் கொடுத்தாலும் ரசிகர்களிடத்தில் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை.
ஆனால் இளைய விஜய் வழக்கம்போல.. இதுவரையில் ஏற்றிராத ராஜா காலத்து கதை என்பதால் அதற்கேற்ற உடையணிந்து அந்த புது கெட்டப் பொருத்தமாகத்தான் இருக்கிறது.. சண்டை காட்சிகள், நடனக் காட்சிகளில் விஜய்யின் ஸ்டைல் அப்படியே இதிலும் தொடர்ந்திருக்கிறது. சில, பல காட்சிகளில் அவரது டைட் குளோஸப் ஷாட்டுகள் ரசிகர்களை உற்சாகப்படுத்தி கூச்சலிட வைத்திருக்கின்றன.
ஸ்ரீதேவிக்கும், அவருக்குமான போரில் அது ஆளுமையான போராக இருக்கும் என்று நினைத்தால் கடைசியில் அது சென்டிமெண்ட்டாக முடிந்து போனதில் சப்பென்று ஆனது என்பது உண்மை. இதுதான் படத்திலேயே ஜீரணிக்க முடியாத ஒரு விஷயம். ஆனால் அந்த சண்டை காட்சி தீப்பொறிதான்.
ஸ்ருதிஹாசனுக்கு அவரது குரலே மிகப் பெரிய இடைஞ்சல். ஆனால் இதில் அவர் காட்டியிருக்கும் கவர்ச்சி அளவில்லாதது. வெறுமனே கவர்ச்சிக்கு மட்டுமே அவரை பலியாக்கியிருக்கிறார்கள். அதேபோல் ஹன்ஸிகாவும். இளவரசி கேரக்டருக்கு ‘நச்’ என்ற பொருத்தமாக இருக்கிறார். இளசுகளின் கண்களுக்கு விருந்தாகியிருக்கிறார் பாடல் காட்சிகளில்..!
உண்மையாக படத்திற்கு ‘பெண் புலி’ என்றுகூட பெயர் வைத்திருக்கலாம். ஸ்ரீதேவி அந்த கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்துகிறார். அவருடைய உடை, நடை, பாவனை அனைத்துமே அவரையொரு பேரரசியாகவே காட்டுகிறது. அதிகப்படியான மேக்கப் கொஞ்சம் நம்மை பயமுறுத்தினாலும் மேக்கப் இல்லாமல் ஒரு காட்சியில் தலையை விரித்துப் போட்டபடி அவர் பேசும் வசனமும், நடிப்பும் ஏ ஒன். மேடத்திற்கு இன்னமும் வெள்ளித்திரையில் நிறைய கேரக்டர்கள் தரப்பட வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறது..!
பிரபு, நரேன், தம்பி ராமையா, குள்ளர்கள் ராஜ்யம், சத்யன் என்று பலதரப்பினரும் அவரவர் கேரக்டர்களை தப்பில்லமல் செய்திருக்கிறார்கள். தம்பி ராமையாவின் முன் கதை காமெடி, கதையுடன் ஒட்டாமலேயே செல்வதால் ரசிக்க முடியாமல் போய்விட்டது. ஆனாலும் மனிதரின் டைமிங் சென்ஸ்தான் படத்தின் பிற்பாதியில் பல இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறது.
தளபதியாக வந்திருக்கும் சுதீப்பின் வில்லன் வேடம் ஹீரோவுக்கு இணையானது. விஜய்யை முதன்முதலில் சந்திக்குமிடத்தில் இருந்து கடைசியில் சண்டையிடும் காட்சிவரையிலும் இறுக்கமான முகத்தோடு மிரட்டியிருக்கிறார் தளபதி சுதீப்.
சிறுவர் காமிக்ஸ் புத்தகங்களில் வாசித்திருக்கும் கதைகளில் ஒன்றை எடுத்து அதை குழந்தைகளும் பார்த்து ரசிக்க வேண்டுமாய் உருவாக்க நினைத்திருக்கிறார் சிம்புதேவன். ஆனால் அது விஜய் மாதிரியான பெரிய ஸ்டார் கேஸ்ட் ஆர்ட்டிஸ்டிடம் போய்ச் சிக்கிவிட்டதால் யாருடைய படமாக இதை உருவாக்குவது என்கிற குழப்பத்தில் கொஞ்சம் தடுமாறிவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.
ஆனால் அதற்காக படம் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியதில்லை. வேதாளம் என்கிற பெயருடைய இனம், அவர்களுக்கான கேரக்டர் ஸ்கெட்ச்.. மூலிகை மருந்தின் மகத்துவம், குள்ளர்களின் ராஜ்ஜியம்.. ஆமை வடிவ மனிதர்.. வேதாளக் கோட்டையின் வடிவம்.. கலை இயக்கம்.. ஹன்க் போன்ற அந்த பெரிய ஒற்றைக் கண் உருவம், வேதாள மனிதர்களுக்கே உரித்தான பறந்து செல்லும் திறன்.. வேதாள இனமா என்பதையறிய சுதீப் வைக்கும் சோதனை முயற்சிகள்.. அந்த இடத்தில் நடக்கும் வாள் சண்டை காட்சி.. சூரன் என்ற பெயரில் விஜய்யின் கூடவே வளர்ந்திருக்கும் கிளி.. இறுதியான கிளைமாக்ஸ் சண்டை காட்சி.. என்று பலவையும் குழந்தைகளும் பார்க்க முடிகின்ற காட்சிகள்தான். ரசிப்பான காட்சிகள்தான்..! சந்தேகமேயில்லை.
தேவிஸ்ரீபிரசாத்தின் இசையில் ‘புலி புலி’, மற்றும் ‘ஜிங்கிலியா ஜிங்கிலியா’ ஆகிய பாடல்கள் ரசிகர்களை ஆட்டம் போட வைத்திருக்கின்றன. அழகான மெலடி பாடலான ‘ஏண்டி ஏண்டி’யை காட்சிப்படுத்தியிருக்கும்விதமும் அருமை.
படத்திற்கு மிகப் பெரிய பலமே நட்டி நடராஜின் ஒளிப்பதிவுதான். காடு, குடியிருப்பு, பாடல் காட்சிகள், சண்டை காட்சிகள், வேதாளக் கோட்டை காட்சிகள் என்று அனைத்தையும் அழகைக் கொட்டி எடுத்திருக்கிறார் நட்டி நட்ராஜ். ஸ்ருதிஹாசன், ஹன்ஸிகாவை இதைவிடவும் இதுவரையிலும் யாரும் அழகாகக் காட்டியதில்லை என்றே சொல்லலாம். கூடவே விஜய்யையும்தான்..!
இது போன்ற மந்திர, தந்திரக் கதைகளில் அடுத்து என்ன என்கிற ஆர்வத்தை பார்வையாளனுக்குள் அதிகப்படுத்திக் கொண்டே போக வேண்டும். இது மிக அவசியமானது. இதுதான் இயக்குநர் சிம்புதேவனுக்கு இதுதான் மிகப் பெரிய பிரச்சினையைக் கொடுத்திருக்கிறது.
விஜய் போன்ற பெரிய நடிகர்களை பின்னுக்குத் தள்ளி கதையை முன்னிலைக்குக் கொண்டு வந்தால் படம் என்னாகும் என்பதை முந்தைய வரலாறுகள் எடுத்துச் சொல்லும். அந்தக் குழப்பத்தில் சிம்புதேவன் திரைக்கதையில் சில சமரசங்கள் செய்ய முற்பட்டிருக்கிறார் என்பது தெரிகிறது..!
இருந்தாலும் படத்தின் முற்பாதியைவிடவும் பிற்பாதியில் இருக்கும் சுவாரஸ்யங்களும், எதிர்பார்ப்புகளும் அதிகம்தான். அதனை கடைசிவரையிலும் கொண்டு சென்று படத்திற்கு ‘ஹிப்’ கொடுத்திருக்கிறது இயக்குநரின் திரைக்கதை.
படத்திற்கு படம் எதிர்பார்ப்பை கூட்டிக் கொண்டே போகும் இளைய தளபதி விஜய்யின் இந்த ‘புலி’ படம் அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பை திருப்திபடுத்தவில்லை என்றெல்லாம் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்க.. முதல் இரண்டு நாள் வசூல் விஜய்யின் திரையுலக வரலாற்றில் புதிய சாதனை என்றே சொல்கிறார்கள். இது போதாதா..?
படம் நிச்சயம் மோசமில்லை. ஒரு முறை பார்க்கலாம்தான். ஸ்ருதிஹாசன், ஹன்ஸிகாவின் காஸ்ட்யூம்ஸை இன்னும் கொஞ்சம் அதிகரித்திருந்தால் படம் குழந்தைகளுக்கானது என்றும் அடித்துச் சொல்லியிருக்கலாம்..! அவ்வளவுதான்..!