full screen background image

TN 2026 – தங்க நட்சத்திரம் – சினிமா விமர்சனம்

TN 2026 – தங்க நட்சத்திரம் – சினிமா விமர்சனம்

நடிகர்கள்:-​

நட்டி நட்ராஜ், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ஸ்ரீதா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர்.

படக்குழுவினர்:-

தயாரிப்பு பேனர்: கண்ணன் ரவி குரூப்ஸ்
தயாரிப்பாளர்: கண்ணன் ரவி
இணை தயாரிப்பாளர்கள்: தீபக் ரவி
இயக்குநர்: உமாபதி எஸ். ராமையா
இசையமைப்பாளர்: தர்புகா சிவா
ஒளிப்பதிவு இயக்குநர்: பி.ஜி.முத்தையா
எடிட்டர்: ஆரல் ஆர்.தங்கம்
கலை இயக்குநர்: என்.கே. ராகுல்
நடன இயக்குநர்கள்: சாண்டி, பிரவின் ஜி
ஸ்டண்ட் இயக்குநர்: மகேஷ் மேத்யூ
ஆடை வடிவமைப்பாளர்: நவா ராம்போ ராஜ்குமார்
பாடலாசிரியர்கள்: கார்த்திக் நேதா, மோகன் ராஜன், விக்னேஷ் ராமகிருஷ்ணா
பத்திரிக்கை தொடர்பு: சதீஷ் (டீம் எய்ம்)

தமிழகத்தின் சட்டப் பேரவைக்கான தேர்தல் பிரச்சாரம் மும்முரமாக நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அரசியலையும், அரசியல்வாதிகளையும், அரசியல் தொண்டர்களையும் நடிகராக இருந்து உடனே முதலமைச்சராகி விட வேண்டும் என்று துடிக்கும் நடிகர்களையும் கேலியாகவும், கிண்டலாகவும், நையாண்டியாகவும்… அதேபோல் மனதைத் தொடும்விதமாகவும் இப்போதைய தமிழ்நாட்டு அரசியலை முன் வைத்திருக்கிறது இந்தப் படம்.

பிறப்பால் மலையாளியான குல்கந்த் குமார் தமிழ் சினிமாவில் இப்போதுதான் தன்னுடைய திரை வாழ்க்கையை துவக்கியிருக்கிறார். அவருடைய ஒவ்வொரு பட வெளியிட்டின் போதும் புதிய புதிய ரசிகர்கள் அவருக்கு உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள்.

கோவை அருகே ஒரு ஊரில் இருக்கும் தம்பி ராமையா அந்த ஊரின் மிகப் பெரிய ஜமீன்தார். 1000 ஏக்கர் நிலத்திற்கு சொந்தக்காரர்.

பொள்ளாச்சியில் நடக்கும் படப்பிடிப்புக்காக குல்கந்த் குமார் பொள்ளாச்சி வருகிறார். அந்த நேரத்தில் தம்பி ராமையா குல்கந்த் குமாரை சந்திக்க அவரை பார்த்த உடனேயே அடுத்த எம்.ஜி.ஆர். இவராக இருக்கலாம் என்று எண்ணுகிறார். அவருடைய ரசிகர்களும் குமாரை அடுத்த எம்ஜிஆர் என்று அழைக்கிறார்கள்.

எம்ஜிஆரின் தீவிர பற்றாளரான தம்பி ராமையா இந்த தருணத்தில் குமாருடன் ஒட்டிக் கொள்கிறார். குல்கந்த் குமாரை ஹீரோவாக நடிக்க வைத்து சில படங்களையும் தயாரிக்கிறார். ஒவ்வொரு படத்தின் போதும் அவருடைய கிராப் ஏறிக்கொண்டே இருக்கிறது.

இப்பொழுது இந்த காலம் கொஞ்சம் மறைத்து புதிய தலைமுறை தலை எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்த நேரத்தில் அப்போதைய ஆட்சியாளர்களின் ஒரு சில நடவடிக்கைகள் குமாரை கொஞ்சம் கோபத்துக்கு உள்ளாகிறது.

ஆளும் கட்சியின் மீது கோபத்தில் இருக்கும் குமாரிடம் தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு என்ற மூன்று முக்கிய புள்ளிகளும் இணைந்து உசுப்பேற்றிவிடுகிறார்கள். குமார் கட்சியை ஆரம்பிப்பதாக அறிவிக்கிறார். இந்த செய்தி வெளியான உடனேயே முளையிலேயே கிள்ளி எரிந்து விடுவது நல்லது என்ற மனநிலையில் இருக்கும் அரசியல் வியாதிகள் அவருக்கு நிறைய பிரச்சினைகளை கொடுக்கிறார்கள்.

ஆனால் அத்தனையையும் தாங்கிக் கொண்டு அவரை இன்னும் சூடேற்றிவிட்டு முன்னேறிய பாதையில் பின்னால் வரக்கூடாது என்று சொல்லி குமாரை எப்படியும் கோட்டையில் அமர்த்தி விட வேண்டும் என்று துடியாய் துடிக்கிறார்கள் இந்த மூவர் கூட்டணி.

இறுதியில் என்னவானது? குமார் முதலமைச்சரானாரா? மூவர் கூட்டணி மந்திரி ஆனார்களா? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

தமிழ் சினிமாவில் ஒரு அரசியல் சட்டையர் என்று போற்றப்படும் படம் ‘அமைதிப்படை’. இந்தப் படத்திற்குப் பிறகு இவ்வளவு காத்திரமாகவும், காமெடியாகவும் சொல்லும் விதத்தில் வந்திருக்கிறது இந்த ‘டிஎன் 2026’ திரைப்படம்.

அதிலும் ஒரு திருப்பமாக அமைதிப்படை’ திரைப்படம் மீண்டும் இந்த வெள்ளிக்கிழமைதான் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கிறது. அதேநாளில் அதை அடியொற்றி வரும் அளவுக்கு இந்த டிஎன் 2026’ திரைப்படமும் அதே நாளில் வெளியாவது சாலப்பொருத்தம்தான்.

எப்படி இந்தப் படத்தை எலக்சன் அறிவித்த பின்பு கொண்டு வரலாம் என்று நினைத்தார்களோ தெரியவில்லை. அதேசமயம் அமைதிப்படை’யையும் ஒன்றாக கொண்டு வந்து அரசியலை விரும்பும் ரசிகர்கள் பார்த்து மகிழும்படியாக இப்போது தியேட்டர்களில் கல்லா கட்டிக் கொண்டிருக்கிறது இந்த திரைப்படம்.

ஒரு சிலருக்கு இவர்கள் இந்த கேரக்டர்களுக்குத்தான் பொருத்தமாக இருப்பார்கள் என்று ரசிகர்களே சொல்வார்கள். அந்த வகையில் இந்தப் படத்தின் ஹீரோவாக குல்கந்த் குமாராக நடித்திருக்கும் நடிகர் நட்டி நடராஜ், ஒரு சினிமா கதாநாயகன் எப்படி அரசியல்வியாதியாக உருமாறுகிறான் என்பதை இந்தப் படத்தில் தன்னுடைய நடிப்பின் மூலமாக அசர வைத்திருக்கிறார்.

அவருடைய கலரும், இயல்பான முகமும், அவருடைய உடல் மொழியும்… ஒரு நடிகர் எப்படி அரசியல் உலகத்துக்குள் இழுக்கப்படுகிறான்? எதைக் காட்டி அவனை இழுத்து வருகிறார்கள்? அவன் தலையெடுத்த பின்பு அவனை சுற்றி இருப்பவர்கள் எல்லாம் எப்படி வாழ்வார்கள்? என்பதை எல்லாம் இந்தப் படத்தில் காட்டி இருக்கிறார் நட்டி நடராஜ். அழகான நடிப்பு ஒரு சில இடங்களில் ரொம்பவும் ஓவரான நடிப்பை காட்டாமல் தன்னால் என்ன முடியுமோ அதை மட்டுமே செய்து இருக்கிறார்.

தம்பி ராமையாவை முதன்முதலாக “போடா” என்று கோபத்தில் சொல்கின்ற அந்தக் காட்சியும் அதற்கு பின்பு தம்பி ராமையாவை அவர் சமாதானப்படுத்துகின்ற அந்த காட்சிகளும் மீண்டும் ஒரு அம்மாவாசை’ பிறந்துவிட்டான் என்பதை நமக்கு காட்டி இருக்கிறார்.

ஒரு காட்சியில் ரஜினிகாந்த், இன்னொரு கட்சியில் கமலஹாசன், அதற்கு அடுத்த காட்சியில் விஜய்… இப்படியாக ஒரு படத்துக்குள்ளையே மூன்று நடிகர்களை இமிட்டேட் செய்து அதை நாம் சிரிப்பதுபோல, ரசிப்பதுபோல தன்னுடைய நடிப்பால் செய்திருக்கிறார் நட்டி நடராஜ். அவருக்கு இதுபோன்ற கதாபாத்திரங்கள்தான் மிக சரியாக பொருந்துகிறது என்பதை இந்தப் படத்தின் வெற்றியே சொல்லும்.

நட்டிக்கு அடுத்து படத்தில் மிகப் பெரிய பாஸ் மார்க் வாங்கியவர் தம்பி ராமையாதான். சாதாரணமாகவே எண்ணெயில் போட்ட கடுகாக துடித்துக் கொண்டிருப்பவர் இந்தப் படத்தில் தன்னுடைய மொத்த வித்தையையும் இறக்கியது போல நடித்திருக்கிறார்.

அப்பாவித்தனமாக எம்ஜிஆரின் ரசிகராக இருந்து இன்னொரு எம்ஜிஆரை உருவாக்குகிறேன் என்ற பெயரில் அவர் செய்கின்ற திருட்டும், தன் குடும்பத்தைக்கூட எதிர்த்து விட்டு குமாரை அவர் வளர்க்கும்விதமும், அதில் அவர் செய்யும் அரசியல் அனைத்துமே நாம் நேரிலும், நிஜத்திலும் பார்த்ததுதான் என்பதால் கை தட்டவும் வைத்திருக்கிறார் தம்பி ராமையா.

இதற்கு அடுத்து பெயர் பெறுபவர் எம்.எஸ்.பாஸ்கர். தன்னுடைய டைமிங்சென்ஸ் வசனங்கள் மூலமாகவும் காமெடியான வசனங்கள் மூலமாகவும் அவருக்கே உரித்தான ஸ்டைலில் அவர் பேசுகின்ற அந்த மாடுலேஷன் நமக்கு சிரிப்பை வரவழைக்கிறது.

சிறந்த குணசித்திர நடிகரான இளவரசு இந்தப் படத்திலும் கொஞ்சம் இறங்கி விளையாடியிருக்கிறார். திட்டமிட்டு அரசியலை வைத்து பிழைப்பு நடத்தும் ஒரு கதாபாத்திரத்தில் இப்போதைய அரசியல் கட்சிகளில் யார் சேர்த்தாலும் பரவாயில்லை.. தன் வீட்டில் அடுப்பு எறிய வேண்டும் என்று நினைக்கும் ஒரு போலி அரசியல்வாதியை தன்னுடைய நடிப்பில் காட்டியிருக்கிறார்.

நட்டியின் மனைவியாக நடித்தவர்.. நடிகர்களின் மனைவிகள் எப்படி சந்தேகப்படுவார்கள்? எப்படி மன உளைச்சலுக்கு ஆளாவர்கள்? கணவரின் கள்ளத் தொடர்பினால் எவ்வளவு சிக்கல்களை சந்திக்கிறார்கள் என்பதை, தன்னுடைய மனைவி கதாபாத்திரம் மூலமாக காட்டியிருக்கிறார்.

நடிகையின் காதலியாக இப்போதுவரையிலும் திருமணம் செய்து கொள்ளாமல் தட்டிக்காக காத்திருக்கும் ஒரு கதாபாத்திரத்தில் சாந்தினி தமிழரசன் ஜெயலலிதாவையும், திரிஷாவையும் சுட்டிக் காட்டுவதுபோல நடித்திருக்கிறார். மேலும் ரெடின் கிங்ஸ்லியின் கேரக்டரும், நடிப்பும் ஓகேதான். இதில் யாஷிகா ஆனந்தம் ஒரு கேரக்டரில் நடித்துவிட்டு போயிருக்கிறார்.

படத்தின் தூக்கத்தில் இருந்து இறுதிவரையிலும் ஒரே மாதிரியான ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா.

படத்தின் துவக்கத்தில் 25 வருடங்களுக்கு முந்தைய காலகட்டம் என்று ரசிகர்களுக்கு சொல்வதுபோல கேமராவில் வண்ணங்களை குழைத்து வைத்து ரசிக்க வைத்திருக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக இப்போதைய காலகட்டத்திற்கு காட்சிகள் மாறும் பொழுது படத்தின் அழகும் மாறிக் கொண்டே வருகிறது. அவ்வளவு அழகாக மக்கள் கூட்டத்தையும் சேர்த்து மிக சிறப்பாக தன்னுடைய பங்கை செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

இசையமைப்பாளர் தர்புகா சிவா பாடல்களை சிறப்பாக இசையமைத்திருக்கிறார். பாடல்கள் அனைத்துமே கேட்கும் ரகம்தான். மறுபடியும் கேட்டால் நிச்சயமாக ஒரு நாள் மனதில் நிரந்தரமாக அமைதி கொள்ளும். பின்னணி இசை இத்திரைப்படம் கொஞ்சம் காமெடி கலந்த திரைப்படம் என்பதை சொல்லாமல் சொல்லி சிரிப்பதற்கு தூண்டுதலாகவும் அமைந்திருக்கிறது.

கடந்த காலம், நிகழ் காலம்.. என்ற இரண்டு பாயிண்ட் ஆப் வியூவில் இந்தப் படம் நகர்வதோடு சிறிசில காட்சிகளில் அடையாளங்கள் இப்போதைய தமிழ் சினிமாவையும் குறித்துக் காட்டுவதால் எதையும் மிஸ் பண்ணி விடாமல் படத்தை அழகாக படத் தொகுப்பு செய்து கொடுத்திருக்கிறார் படத் தொகுப்பாளர் அருள் ஆர்.தங்கம்.

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களின் சினிமா வாழ்க்கையும் அவர்கள் அரசியலுக்கு வருவதாக சொல்லிவிட்டு என்னென்ன செய்தார்களோ.. என்ன செய்து கொண்டிருக்கிறார்களோ… அதை எல்லாம் ஹீரோவுக்கு கொடுத்து யாரையும் குற்றம் சொல்ல முடியாத அளவுக்கு ஒரு திரை கதையை அழகாக வடிவம் வைத்து நம்மை ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் உமாபதி. அவருக்கு இது முதல் படம் என்பதே தெரியாத அளவுக்கு அவருடைய இயக்கம் மிகச் சிறப்பாகவே இருக்கிறது.

தம்பி ராமையாவின் கேரக்டர் இப்போது த.வெ.கா.வில் நடிகர் விஜய்க்கு வலது கரமாக இருக்கும் புஸ்ஸி ஆனந்தை அடையாளம் காட்டுவதுபோல இருப்பதால் கொஞ்சம் சிரிப்போடு அவரது கதாபாத்திரத்தை நம்மால் ரசிக்க முடிந்திருக்கிறது.

போயஸ் கார்டனில் ஒரு முறை ரஜினியின் காரை நிறுத்தி நடந்து போக வைத்த போலீஸ்காரர்களின் செயலினால் ரஜினி ஜெயல்லிதாவுக்கு எதிராகப் பொங்கியதில் துவங்கி, கட்சி ஆரம்பிக்க வேண்டிய சூழல் இருக்கிறது என்று தினந்தோறும் சொல்லிக் கொடுத்து கடைசியில் “இப்போது எனக்கு உடம்பு சரியில்லை. அதனால் கட்சி ஆரம்பிக்கும் முடிவை கைவிட்டுவிட்டேன்” என்று அடுத்த நாள் காலையில சொல்லுகின்ற வரையிலும் ரஜினியை அடையாளப்படுத்துகிறார் நாயகன் நட்டி.

அதேபோல் இப்போது தமிழகத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்துவரும் நடிகர் விஜய்யையும் அவருடைய தோற்றம் மற்றும் அவருடைய ஸ்டைல் லுக், மேக்கப்.. அவர் தனது ரசிகர்களிடம் எப்படி பேசுவாரோ அதேபோல பேசவும் வைத்து இவரை அநியாயத்துக்கு விஜய்யின் க்ளோனிங்காக மாற்றி இருக்கிறார் கதாசிரியர் தம்பி ராமையா.

இந்தப் படத்தின் பல வசனங்கள் இப்போதைய அரசியலை வெளிச்சம் போட்டு காட்டுவது போல இருந்தாலும்.. பல இடங்களில் குபீர் சிரிப்பை வரவழைத்து இருக்கிறது காமெடியான வசனங்களும், காமெடியான திரைக்கதையும்தான். இடைவேளைக்கு பின்பு அப்படியொரு சிரிப்பில் தியேட்டரே குலுங்குகிறது என்றால் அது மிகையில்லை.

இந்தப் படக் குழு நாங்கள் யாரையும் அடையாளப்படுத்தவில்லை என்று சூடத்தின் மீது சத்தியம் செய்யாத குறையாக சொன்னாலும், இந்தப் படம் இப்போதைய நிலையில் கோடம்பாக்கத்தையும், தமிழக அரசியலையுமே சுட்டிக் காட்டுகிறது.

அரசியலுக்கு வருபவர்கள் எல்லாம் எந்தக் கட்சியாக இருந்தாலும் நிச்சயமாக காசு, பணம் இவற்றை அங்கீகாரத்தோடு திருடும் வேலையைத்தான் செய்கிறார்கள். அதைத்தான் இந்தப் படத்தின் கதாசிரியர் தம்பி ராமையாவும், இயக்குநர் உமாபதி ராமையாவும் கச்சிதமாக திரைக்கதை அமைத்து சொல்லியிருக்கிறார்கள்.

அமைதிப்படை’ போல இல்லை என்றாலும் அது என்ன கருத்தை சொல்ல வந்ததோ, அதே கருத்தைதான் இந்தப் படத்தின் இயக்குநரும் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார்.

இந்த தேர்தல் நேரத்தில் இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு அரசியல் கட்சிகளுக்கு நேரம் இல்லை என்பதால் தம்பி ராமையாவும் அவரது மகனான இயக்குநர் உமாபதியும்  தப்பித்து விட்டார்கள் என்று சொல்லலாம்.

ஆனாலும் வாக்குப் பதிவு முடித்த பின்பு இருக்குடி உங்களுக்கு ஆப்பு என்று சொல்லும் அளவுக்கு அரசியல்வாதிகள் இந்தப் படம் பற்றி கேள்விப்பட்டதிலிருந்து விளக்கெண்ணை குடித்ததுபோல இருப்பதாக செய்தி வந்திருக்கிறது.

எப்படி இருந்தாலும் ஏப்ரல் 23 தேதிக்கு பின்பு இந்தப் படத்திற்கு என்ன பட்டம் சூட்டுகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

அமைதிப்படை’ போலவே இந்தப் படத்தையும் நிச்சயமாக அத்தனை வாக்காளர் பெருங்குடி மக்களும் தியேட்டருக்கு குடும்பத்தினருடன் வந்து படத்தைப் பார்த்து ரசித்து இதில் சொல்லியிருக்கும் நீதியை புரிந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

RATING : 4 / 5

Our Score