full screen background image

உறுப்பினர்களைக் கவர தயாரிப்பாளர் கவுன்சிலின் கவர்ச்சித் திட்டம் அறிவிப்பு..!

உறுப்பினர்களைக் கவர தயாரிப்பாளர் கவுன்சிலின் கவர்ச்சித் திட்டம் அறிவிப்பு..!

தயாரிப்பாளர் கவுன்சில் இன்று ஒரு கவர்ச்சியான திட்டத்தை தனது உறுப்பினர்களுக்காக செயல்படுத்தியிருக்கிறது.

இசை வெளியீட்டு நிகழ்ச்சிகள், பிரஸ் மீட் நிகழ்ச்சிகள், இதர சினிமா நிகழ்வுகள், டிரெயிலர்கள், பாடல் காட்சிகள், நகைச்சுவை காட்சிகள், படத்தின் காட்சிகள் இவைகளை லோக்கல் கேபிள் டிவி சேனல்களுக்கு கொடுப்பதன் மூலம் கிடைக்கும் பணத்தை சரி சமமாக பங்கிட்டு அனைத்துத் தயாரிப்பாளர்களுக்கும் மாதந்தோறும் 10000 ரூபாய் கொடுக்கலாம் என்று திட்டமிட்டு அதனை இன்றைக்கு செயல்படுத்தியிருக்கிறார்களாம்.

இதன்படி இன்று ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்களின் பெயர்களில் வங்கிக் கணக்குத் துவக்கப்பட்டு, காசோலைகள் வழங்கப்பட்டு, அவர்களு்ககான டெபிட் கார்டுகளும் உடனடியாக வழங்கப்பட்டுள்ளன.

முதல் வங்கிக் கணக்குப் புத்தகம் மற்றும் டெபிட் கார்டை தயாரிப்பாளர் கே.ஜெயக்குமாருக்கு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் வழங்கியிருக்கிறார். உடன் தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர்களில் ஒருவரான ஞானவேல்ராஜாவும் உடன் இருக்கிறார்.

இந்தத் திட்டம் முன்பேயே பேசப்பட்டு வந்ததுதான். ஆனால் அப்போதே பெரிய தயாரிப்பாளர்கள் இதனை மிகக் கடுமையாக எதிர்த்தார்கள். ஏனெனில் இப்போது வெளிவந்த சில பெரிய படங்களைத்தான் தயாரிப்பாளர் சங்கம் மூலமாக கேபிள் டிவிகளுக்கு விற்பனை செய்தார்கள்.

இதன் முறையான வருமானம் நேரடியாக அந்தந்த படங்களை தயாரித்த தயாரிப்பாளர்களுக்குத்தான் போய்ச் சேர வேண்டும். ஆனால், அந்தப் படத்துடன் சம்பந்தப்படாத மற்ற தயாரிப்பாளர்களுக்கு எதற்காக பணத்தைப் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று கேட்டு பல தயாரிப்பாளர்களும் போர்க்கொடி தூக்கியிருந்தார்கள்.

இந்தப் பிரச்சினையால்தான் இத்திட்டத்தை அமலாக்குவது இத்தனையாண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்தது. இப்போது அவசியம் கருதி உடனடியாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

என்ன அவசியம் என்கிறீர்களா..?

வரும் மே 11, ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை உயர்நீதிமன்றததின் இடைக்காலத் தீர்ப்பின்படி தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் கவுன்சிலின் பொதுக்குழு நடைபெறவுள்ளது.

அந்தப் பொதுக்குழுவில் தாணு தலைமையிலான குழு, தற்போதைய கேயார் தலைமையிலான நிர்வாகக் குழுவை எதிர்த்து நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வரவுள்ளது. அதன் மீது வாக்கெடுப்பும் நடத்தப்பட உள்ளது.

அந்த வாக்கெடுப்பில் தாங்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கேயார் தரப்பு இப்போது வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் இறங்கியுள்ளது. அதற்கான கேன்வாஸிங்தான் இந்த அதிரடித் திட்டம் என்கிறது எதிரணி..!

எல்லாமே அரசியல் களம் போல மாறிவிட்டது..!

Our Score