பிரசாத் லேப் தியேட்டரில் இதுவரையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இது போன்று மின்னல் வேகத்தில், மிகக் குறுகிய நேரத்தில் நடந்து முடிந்த நிகழ்வு வேறு எதுவுமில்லை.
‘தலைமுறைகள்’ திரைப்படம் சிறந்த சமூக ஒருமைப்பாட்டுக்கான தேசிய விருதைப் பெற்றதையடுத்து அந்தப் படக் குழுவினர் இன்று மாலை 4 மணியளவில் பிரசாத் லேப்பில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
இதற்கு முன்னதாக இன்று காலை சசிகுமார் தான் வாங்கிய தேசிய விருதினை இசைஞானி இளையராஜாவிடம் காட்டி ஆசி வாங்கியிருந்தார்.
முதலில் ‘தலைமுறைகள்’ படம் பற்றிய 1 நிமிட கிளிப்பிங்ஸ் காட்டப்பட்டது. பாலுமகேந்திரா என்றாலே நினைவுக்கு வரும் அவரது தொப்பியுடன் இருக்கும் போஸ்டர் அங்கே வைக்கப்பட்டிருந்தது.
இதே ‘தலைமுறைகள்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது பாலுமகேந்திராவிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது “உங்களுடைய தனித்த அடையாளமே உங்களுடைய தொப்பிதானே..?” என்று கேட்டார் ஒரு பத்திரிகையாளர். சட்டென உணர்ச்சிவசப்பட்ட பாலுமகேந்திரா, “இல்லை.. என்னுடைய அடையாளம் என்னுடைய படங்கள்தான்..” என்றார். ஆனால் இன்றைக்கு தொப்பி அணிந்த பாலுமகேந்திராதான் அங்கே காட்சி தந்தார்.. என்ன பொருத்தம் பாருங்கள்..!?
‘தலைமுறைகள்’ படக் குழுவினருடன் பாலுமகேந்திராவின் பேரன் ஷ்ரயானும் மேடையேறி மெழுகுவர்த்தி ஏற்றினார்கள். தொடர்ந்து அனைவருமே சில வினாடிகள் மட்டுமே பேசினார்கள்.
முதலில் தலைமுறைகள் படத்தின் சசியின் நண்பராக நடித்த ரயில் ரவி பேசினார். பாலுமகேந்திரா தனக்கு மிக நெருங்கிய நண்பராக இருந்தாலும் படத்தின் ஷூட்டிங்கின்போது கண்டிப்பு மிகுந்த இயக்குநராகப் பணியாற்றியதை நினைவு கூர்ந்தார்.
காரில் செல்கையில் பேசுவது போன்ற காட்சி எடுக்கும்போது முன் சீட்டில் ஒடுங்கிய நிலையில் அமர்ந்து கொண்டு அந்தக் காட்சியை படமாக்கிய பாலுமகேந்திராவின் அக்கறையை, அர்ப்பணிப்பு பற்றிச் சொன்னபோது மனம் நெகிழத்தான் செய்தது. அந்த மனுஷனுக்கு சினிமா மீது எத்தனை ஆர்வம்..?
அடுத்து வந்தவர்களெல்லாம் ஏதோ பேச முடியாமல் பேசுபவர்களை போல பேசிவிட்டுப் போக கடைசியாக மைக்கை பிடித்தார் இயக்குநர், தயாரிப்பாளர் சசிகுமார்.
இந்தப் படத்தை நான் தயாரிச்சேன்றதுல ரொம்ப ரொம்பப் பெருமைப்படுறேன். இந்தப் படத்துக்கு நிச்சயமாக விருது கிடைக்கும்னு பாலுமகேந்திரா ஸார் சொன்னார். அவர் வாக்கு பலிச்சிருச்சு. ஆனா அவர்தான் இல்லை.
பாலுமகேந்திரா மாதிரியான நல்ல கிரியேட்டர்களை வயசானவங்கன்னு நினைச்சு நாமதான் ஒதுக்கி வெச்சிடுறோம். ஆனா கிரியேட்டருக்கு எப்போதுமே வயசு ஒரு விஷயமே இல்லை.. அவங்க எப்போ வேணாலும், எந்த வயசுல வேண்டுமானாலும் படம் எடுக்கலாம். அப்படி அதை இப்போ நிரூபிச்சிட்டுப் போயிருக்கார் பாலுமகேந்திரா சார்.
இந்தப் படத்துல அவர் வைத்த ஒரு காட்சியின் பொருத்தம் அப்படியே நிஜத்திலும் நடந்துவிட்டது. படத்தின் இறுதியில் அவரால் வளர்க்கப்பட்ட பேரனா நான் விருது வாங்குவேன். அந்தக் காட்சியில் நான் நடித்தேன். இ்பபோது நிஜமாகவே இத்திரைப்படத்திற்கான தேசிய விருதினை பாலுமகேந்திராவின் நிஜ பேரன் ஷ்ரேயான்தான் ஜனாதிபதியிடமிருந்து பெற்றான். இது அவரே எதிர்பார்க்காத ஒரு பொருத்தமான நிகழ்வு. என்றென்றும் இத்திரைப்படத்தின் தயாரிப்பு பற்றிய செய்திகளும், விஷயங்களும் என் நினைவில் இருக்கும். இதுவே எனக்கு போதும்..” என்றார்.
பாலுமகேந்திராவின் பேரன் ஷ்ரேயான் மேடைக்கு வந்து சில வார்த்தைகள் பேசினார். தமிழில் அல்ல ஆங்கிலத்தில்..! இதுதான் வருத்தமே..! இதே படத்தில்தான் பேரனுக்கு தமிழ் சொல்லிக் கொடுத்து அவனை வளர்த்தெடுக்கும் பாலுமகேந்திரா ஒரு காட்சியில், “இந்தத் தாத்தாவையும் மறந்திராத.. தமிழையும் மறந்திராதப்பா..” என்று பேரனிடம் சொல்வது போன்ற காட்சி வரும்..!
இதனை அவருடைய நிஜ பேரனிடத்தில் சொல்லி, அவனிடத்தில் தமிழை வளர்த்தால் பாலுமகேந்திராவின் ஆன்மா நிச்சயம் சாந்தியாகும்..!