ஜே ஸ்டுடியோஸ் இன்டர்நேஷனல் பேனரில் இசையமைப்பாளர் ஜான் பீட்டர் தயாரிக்கும் ‘படவா’ திரைப்படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர்கள் விமல் மற்றும் சூரி இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.
ஸ்ரீதா கதாயாகியாகவும், ‘கே.ஜி.எஃப்.’ புகழ் ராம் வில்லனாகவும், தேவதர்ஷினி, நமோ நாராயணன், வினோதினி, சரவண சக்தி மற்றும் சாம் ஆகியோரும் இதில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் 40-க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.
இயக்குநர் கே.வி.நந்தா இப்படத்தை இயக்கியுள்ளார். கலை இயக்குநராக சரவண அபிராமன், படத் தொகுப்பாளராக வினோத் கண்ணா பொறுப்பேற்றுள்ளனர். சண்டைக் காட்சிகளை சிறுத்தை கணேஷ், நடனத்தை தினேஷ், ஸ்ரீதர் மற்றும் தினா ஆகியோரும் வடிவமைத்துள்ளனர். பாடல்களை ஜான் பீட்டர், விவேகா, கபிலன் வைரமுத்து, இளையகம்பன், ஸ்வர்ணலதா ஆகியோர் எழுதியுள்ளனர். பத்திரிக்கை தொடர்பு பணிகளை நிகில் முருகன் கவனித்து வருகிறார்.
இந்தப் படத்தின் கதைக் களம் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் ஒரு குக்கிராமம். இந்தக் கிராமத்தில் விவசாயம் பொய்த்துப் போகிறது. அந்த ஊரில் செங்கல் சூளை மட்டுமே மிகப் பெரிய தொழிலாக இருந்து வருகிறது.
இதே ஊரில் இருக்கும் நாயகன் விமலும், அவருடைய நண்பரான சூரியும் வேலை, வெட்டிக்கு செல்லாதவர்கள். எங்கேயாவது பணம் கிடைத்தால் அதை வாங்கி குடித்துவிட்டு கும்மாளம் போடுபவர்கள். அந்த கிராமத்து மக்களுக்கு பல தொல்லைகளை கொடுத்து வருகிறார்கள்.
இவருடைய சொந்த அக்கா தேவதர்ஷினியும், மாமா நமோ நாராயணனும் உள்ளூரிலேயே இருந்தாலும் அவர்கள் வீட்டுக்கும் நிறைய உண்டக வேலைகளை செய்து வருகிறார் விமல்.
இவர்களுடைய அட்டூழியம் தாங்க முடியாமல் ஊர் மக்கள் ஒரு கட்டத்தில் கொதித்துப் போய் விமலை நாடு கடத்த திட்டமிடுகிறார்கள். தங்களுடைய கைக்காசை போட்டு மலேசியாவில் ஒரு வேலை வாங்கித் தந்து விமலை மலேசியாவுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
மலேசியா வந்த விமல் அங்கேயே சில வருடங்களாக வேலை பார்த்து கொண்டிருக்கிறார். அங்கேயும் பணத்தை சேமித்து வைக்காமல் உள்ளூரில் லாட்டரி சீட்டை வாங்கி அதிலேயே தன்னுடைய சம்பளத்தை தொலைத்து வருகிறார்.
ஒரு கட்டத்தில் மலேசியாவிலும் விமலுக்கு வேலை இல்லாமல் போக மறுபடியும் ஊருக்கே வர வேண்டிய கட்டாயம். ஆனால், ஊருக்கு போனால் மறுபடியும் அந்த ஊர் மக்கள் என்ன சொல்வார்களோ.. செய்வார்களோ.. என்று பயப்படுகிறார் விமல்.
ஆனால் விமல் ஊருக்கு வரும்பொழுது அவருக்கு மிகப் பெரிய வரவேற்பை கொடுக்கிறார்கள் ஊர் மக்கள். அதற்கான காரணம் என்ன என்பது கொஞ்சம் சஸ்பென்ஸ்.
அதற்கு பிறகு அந்த காரணத்தை வைத்து விமல் பஞ்சாயத்து தலைவராக்குகிறார்கள். அதற்கு பிறகு விமல் கிராமத்தில் மிகப் பெரிய ஆளாக மாற, அவருக்கும் செங்கல் சூளை நடத்தும் வில்லன் ராம் கோஷ்டிக்கும் இடையில் மோதல் ஏற்படுகிறது.
இந்த மோதலுக்கான காரணம் என்ன.. கடைசியில் அந்த ஊர் அமைதி அடைந்ததா… ஊர் மக்கள் விமலை கொண்டாடுவதற்கு என்ன காரணம்.. இதற்கெல்லாம் விடைதான் இந்தப் படவா திரைப்படம்.
விமல் எப்போதும் போலவே தன்னுடைய அப்பாவித்தனம், வெகுளித்தனம் இரண்டையும் ஒன்றாக கலந்த நடிப்பையை காண்பித்திருக்கிறார். படத்தின் முதல் பாதியில் இவரும், சூரியும் சேர்ந்து செய்யும் அளப்பறைகள் கொஞ்சம் பார்க்க முடிந்தவை. அதிகமாக பார்க்க முடியாதவை. ஆனாலும் சூரியின் சிற்சில கமெண்ட்டுகளினாலும், நடிப்பினாலும் நாம் கொஞ்சம் சிரிக்க முடிகிறது.
ஆறு வருடங்களுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட படம் இப்போதுதான் திரைக்கு வந்திருக்கிறது. சூரி ஹீரோவுக்கு நண்பனாக நடித்த கடைசி திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறோம்.
படத்தில் நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீதா வெட்னரி டாக்டராக நடித்திருக்கிறார். அவரும் தன்னால் முடிந்த அளவுக்கு ஹீரோயின் வேலையை மட்டும் செய்து இருக்கிறார்.
தேவதர்ஷினி தன்னுடைய வீணாப்போன தம்பியை நினைத்து புலம்பும் காட்சிகளில் அக்மார்க் அக்காவாகவே தென்படுகிறார். அதேபோல் படம் முழுவதும் கிராம மக்களாக நடித்த அத்தனை பேருமே சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். ‘கருடா’ ராம் தன்னுடைய வில்லத்தனத்தை அவ்வப்போது காட்டி தானும் ஒரு வில்லன் என்பதை இங்கே அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.
இரண்டே காட்சிகள் என்றாலும் மாவட்ட ஆட்சியராக நடித்திருக்கும் வினோதினி தன்னுடைய இருப்பை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். அதிலும் முதல்முறையாக குறை தீர்ப்பு முகாமிற்கு அவர் வரும்பொழுது விமலும், சூரியும் கலாட்டா செய்து தங்கள் ஊருக்கு டாஸ்மாக் கடை வேண்டும் என்று சொல்லும்போது அவர் பேசுகின்ற பேச்சு… நிஜமாக இந்த ஒட்டு மொத்த சமூகத்தின் கருத்தாகவே வினோதினி அதை சொல்லி இருக்கிறார். பாராட்டுக்கள்..!
தொழில் நுட்பத்தில் ஒளிப்பதிவாளர் ராமலிங்கத்தின் ஒளிப்பதிவு தரமானதுதான். மீடியம் பட்ஜெட் படம் என்றாலும் தரத்தில் கொஞ்சமும் குறையாமல் செய்திருக்கிறார்.
படத்தின் ஒரு பிளஸ் பாயிண்ட் பாடல்கள்தான். அத்தனையும் மிக, மிக அழகான பாடல்கள். மீண்டும், மீண்டும் கேட்கக் கூடிய பாடல்கள். பின்னணி இசையையும் கொஞ்சம் குறைவாகவே வைத்து அதையும் ரசிக்க வைத்திருக்கிறார்கள்.
படத்தை எழுதி இயக்கி இருக்கும் இயக்குநர் கே.பி.நந்தா, இத்திரைப்படம் நிறைய படங்களை பார்த்த கதைகளாக இருந்தாலும் திரைக்கதையை மட்டும் புதிதாக வடிவமைத்து கொஞ்சம் நகைச்சுவையாகவும், கொஞ்சம் நாம் நம்புகின்ற வகையிலும் மாற்றி அமைத்து கொடுத்திருக்கிறார். படத்தின் முற்பதியில் பல காட்சிகளை கொஞ்சம் குறைத்து அமைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
கருவேல மரம் ஒழிப்பு என்பது 15 வருடங்களுக்கு முன்பாகவே தமிழ்நாட்டில் ஆரம்பிக்கப்பட்டது. கருவேல மரம் ஒழிப்பு இயக்கம் என்ற பலரும் மாநிலம் முழுவதும் ஆரம்பித்து நிறைய கருவேல மரங்களை அழித்தார்கள். கருவேல மரத்தினால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. மண் வளம் பாதிக்கப்படுகிறது.. என்பதை அழுத்தமாக இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.
இந்த நல்ல விஷயத்தை அழுத்தம் திருத்தமாக சொல்லி இருக்கும் இந்த ஒரு காரணத்துக்காக இந்தப் படத்தை நாம் வெகுவாக பாராட்ட வேண்டும்.
RATING : 3 / 5