full screen background image

கிங்ஸ்டன் – சினிமா விமர்சனம்

கிங்ஸ்டன் – சினிமா விமர்சனம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் தூவத்தூர் மீனவர்கள் அதிகம் வசிக்கும் கிராமம். கடல் ஓரத்தில் அமைந்துள்ள மொத்த ஊருக்கும் வாழ்வாதாரமே மீன் பிடிப்புதான்.

ஆனால் இப்பொழுது யாரும் அந்தக் கிராமத்தில் இருந்து மீன் பிடிக்க கடலுக்குள் செல்வதில்லை. காரணம் போன தலைமுறையில் கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் பலரும் இறந்து போய் கடலில் சடலமாக மீட்கப்பட்டார்கள். இதைத் தொடர்ந்து அந்த ஊரில் இருந்த சில இளம் பெண்களும் மர்மமான முறையில் இறந்து போனார்கள்.

இதற்கெல்லாம் காரணம் ‘போஸ்’ என்ற ஒரு மீனவர் அந்த கடலில் பரிதாபமாக உயிரிழந்து அவருடைய ஆன்மா இன்னமும் அந்தக் கடலிலேயே இருந்து யார் கடலுக்குள் மீன் பிடிக்க வந்தாலும் அவர்களைப் பழி வாங்குவதாக அந்தப் பகுதி மக்கள் நம்புவதுதான்.

இதனால் இப்போதைய தலைமுறை இளைஞர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கப் போவதை தவிர்த்துவிட்டு வேறு, வேறு வேலைகளில் இருக்கிறார்கள். சிலர் நல்ல வேலையில் இருந்தாலும் பலரும் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தாமஸ் என்கின்ற ஒரு மிகப் பெரிய பணக்கார ரவுடி அந்தப் பகுதி மக்களை மூளை சலவை செய்து தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் வைத்திருக்கிறான்.

ஊருக்குள் எது நல்லது, கெட்டது நடந்தாலும் தாமஸின் பங்களிப்பு நிச்சயமாக இருக்கும். அந்த தாமஸிடம் அடியாளாக இருப்பவர்தான் கிங் என்ற ஜி.வி.பிரகாஷ். இவருக்கும் ஒரு மிகப் பெரிய லட்சியம் உண்டு. சொந்தமாக போட் ஒன்றை வாங்கி கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டும் என்பதுதான் அந்த லட்சியம்.

அதற்காக தாமஸ் கிராமத்து மக்களுக்காக குடுக்கின்ற பணத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சம் சுருட்டி தன்னுடைய சொந்த செலவுக்காக வைத்துக் கொள்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

அடிக்கடி தாமஸுக்காக நடுக்கடலுக்கு சென்று கடல் அட்டைகளை வேறு மாநில மீனவர்களிடம் கைமாற்றி கொடுத்துவிட்டு பணத்தை பெற்று வருவது ஜி.வி.பிரகாஷின் வழக்கம். அப்படி ஒருமுறை செல்லும்பொழுது கை மாற்றி விடும் டல் அட்டைக்குள் போதை மருந்தும் இருப்பதை ஜி.வி.பிரகாஷ் தெரிந்து கொள்கிறார்.

உடனே கரைக்குத் திரும்பி தாமஸிடம் சண்டைபோட்டு இனி நான் அங்கு வேலைக்கு வரப்போவதில்லை என்று சொல்லி விலகிக் கொள்கிறார்.

இப்போது கடலுக்குள் யாருமே மீன் பிடிக்கச் செல்வதில்லை என்பதால் சொந்தமாக போட் வாங்கினாலும் தன்னுடன் யாரும் கடலுக்குள் வரப் போவதில்லை என்பது பிரகாஷூக்குத் தெரிகிறது.

கடலுக்குள் ஏதோ ஒரு மர்மத்தை வைத்துக் கொண்டு யாரையும் மீன் பிடிக்க செல்லாமல் தாமஸ்தான் தடுப்பதாக ஜி.வி.பிரகாஷ் உணர்ந்து ஒரு திடீர் முடிவு எடுக்கிறார்.

கடலுக்குள் மீன் பிடிக்க செல்லலாம் என்று முடிவெடுத்து அவருடைய தந்தையின் போட்டை மறு சீரமைப்பு செய்து அந்த போட்டுக்குள் தாமஸையும், அவருடைய கூட்டாளிகளையும் கையை, காலைக் கட்டி உள்ளே வைத்துக் கொண்டு கடலுக்குள் மீன் பிடிக்க செல்கிறார்.

அப்படிச் சென்ற ஜி.வி.பிரகாஷ் மீன் பிடித்து மீண்டும் திரும்பி வந்தாரா..? இல்லையா..? கடலுக்குள் இருந்த ஆவி அவரை என்ன செய்தது..? அந்த ஆவி இருப்பது உண்மையா..? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

படம் முழுவதையும் தன்னுடைய கேரக்டரால் சுமந்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். அவர் ஒருவருக்காகவே இந்த கதை வடிவமைக்கப்பட்டது போலவே தெரிகிறது.

மற்ற படங்களில் எல்லாம் எப்படி நடித்தாரோ அதுபோலவேதான் இந்த படத்திலும் நடித்திருக்கிறார். எதுவும் புதிதில்லை ஜீ.வி.பிரகாஷின் தோற்றத்திற்கும் அவருடைய உடல் வாழ்வுக்கும் ஏற்ற கேரக்டர் என்றாலும் அவரிடமிருந்து நடிப்பும் அவ்வளவுதான் என்று சொல்லுகின்ற அளவுக்குத்தான் ஒரு நடிப்பை இந்தப் படத்தில் காண்பித்து இருக்கிறார்.

நாயகியான திவ்யபாரதிக்கும் மிக அதிகமான காட்சிகள் இல்லை என்றாலும் இடைவேளைக்கு பின்பான காட்சிகளில் கடைசிவரையிலும் திவ்ய பாரதியும் உடனிருந்து கதையை நகர்த்தி இருக்கிறார்.

பாடல் காட்சிகளில் கொஞ்சமேனும் காதல் உணர்வுகளை மட்டுமே காட்டிவிட்டு இறுதியில் அனைவருடன் சேர்ந்து பயம் கொள்ளும் நடிப்பையும் கொஞ்சம் காட்டியிருக்கிறார் திவ்யா.

பேச்சுலர் என்ற படத்தில் இதே திவ்யபாரதி காட்டியிருந்த அட்டகாசமான நடிப்பு இந்தப் படத்தில் வெளிக்கொணரப்படவில்லை என்பது வருத்தமான விஷயம்.

மேலும் படத்தில் நடித்திருந்த அழகம் பெரும்பாலும் சேத்தனும் மிகச் சிறந்த குணச்சித்திர கதாபாத்திரத்தை ஏற்று தங்களுடைய சிறப்பான நடிப்பை இதில் காண்பித்து இருக்கிறார்கள். தாமஸாக நடித்திருக்கும் தாமஸும் தன்னுடைய வில்லத்தனத்தை சிறிதளவு காட்டியிருக்கிறார்.

குமரவேல், ஆண்டனி, ராஜேஷ் பாலச்சந்திரன், பிரவீன் கார்த்திக் என்று மற்றைய நடிகர்களும் தங்களுடைய இருப்பை மட்டுமே காண்பித்து இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் கோவில் பெனாயின் உழைப்பு படத்தின் பிற்பகுதியில் நன்கு தெரிகிறது. கடின உழைப்பை கொடுத்திருக்கிறார். பேய்களின் அட்டூழியத்தையும், ஆவேசத்தையும், அழிச்சாட்டியத்தையும் காட்டுவதை கேமராவிலும் பின் பணியிலும் வி.எப்.எக்ஸ். காட்சிகளிலும் அழுத்தமாக கொடுத்து இருக்கிறார். ஆனால் அது  பிரஸ்தடிக் மேக்கப் மற்றும் கிராபிக்ஸ் மூலம் அந்த பேய்களின் உருவங்கள் வடிவமைக்கப்பட்டு இருப்பது தெளிவாக தெரிகிறது. பல காட்சிகள் கிரீன் மேட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றன என்பதும் தெரிகிறது.

ஒலிப்பதிவும் சூப்பர். அதுவும் கடலுக்குள் நடக்கின்ற அலைகள், பேரிரைச்சலை அப்படியே பதிவாகி இருக்கிறார்.

படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ் அமைத்திருக்கிறார் பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை .பின்னணி இசையை காட்டுக் கத்தலாகப் போட்டு காதை கிழித்து எடுத்திருக்கிறார். இவ்வளவு சவுண்டு இதுவரையில் எந்த படத்தில் நாங்கள் கேட்டதில்லை. அந்த அளவுக்கு உச்சபட்ச சவுண்டை வைத்து நம் காதில் பஞ்சர் ஆகிவிட்டார் ஜி.வி.பிரகாஷ்.

இத்திரைப்படம் முழுக்க, முழுக்க கிராபிக்ஸை மட்டுமே மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கிறது அதனால் அந்த பேய்களின் அட்டகாசம், அட்டூழியத்தை பார்த்து மக்கள் ஓடி வருவார்கள் என்று நினைத்துவிட்டார்கள்.

ஆனால் அதையும் தாண்டி அதில் அகப்பட்டு சிக்கி தவிக்கும் மனிதர்களின் உணர்வுகளை அழகாக பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் அதில்தான் இயக்குர் கோட்டை விட்டுவிட்டார். அதோடு அந்தக் கதைக்கான திரைக்கதையும் வெறுமனே சப்பையாக இருப்பதால் நம்மால் அதிகம் ரசிக்க முடியவில்லை.

பேய்களால் நமக்கு எந்தவிதமான பயமும் வரவில்லை. மிரட்டலான ஒரு உணர்வைகூட இந்த பேய்கள் நமக்கு கொடுக்கவில்லை என்பது வருத்தமான ஒரு விஷயம். அழுத்தம் இல்லாத திரைக்கதையாக அமைத்திருப்பதால் இந்தப் படம் எந்த விதத்திலும் நம்மை பாதிக்கவில்லை என்பது வருத்தமான ஒரு விஷயம்தான்.

மொத்தத்தில் இந்த கிங்ஸ்ன்’ ‘கிங்காக இல்லை என்பது உண்மை.

RATING : 3 / 5

Our Score