இந்தப் படத்தை ஹீரோ சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் சி.மணிகண்டன் தயாரித்து இதில் ஒரு முக்கியக் கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் கருணாகரன், ரமேஷ் திலக், ஸ்ரீநாத், மணிகண்டன், யோகிபாபு, விடிவி கணேஷ், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி, ஜான் விஜய், சரவண சுப்பையா, மாரிமுத்து, சாம்ஸ், மதுசூதனன் ராவ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இயக்கம் – ஸ்ரீநாத், ஒளிப்பதிவு – மாசாணி, இசை – ஜோர்ன் சர்ரோ, கதை, திரைக்கதை, வசனம் – எஸ்.ஏ.பத்மநாபன், படத் தொகுப்பு – எஸ்.இளையராஜா, பத்திரிக்கை தொடர்பு – சதீஷ்.
இந்தப் படம் 5 வருடங்களுக்கு முன்பாக எடுக்கப்பட்டு பலவித பிரச்சினைகளுக்கு பிறகு இப்போதுதான் திரைக்கு வந்திருக்கிறது.
கிளி ஜோசியம் சொல்லும் கருணாகரன், மிமிக்ரி கலைஞரான ரமேஷ் திலக், பேய் விரட்டும் மந்திரவாதியான ஸ்ரீநாத், சவுரி முடி வியாபாரம் செய்யும் மணிகண்டன்… இவர்கள் நால்வருமே ஒருவருக்கு ஒருவர் தொடர்பே இல்லாதவர்கள்.
இந்த நால்வருமே ஒரு நாள் ஒரு புள்ளியில் சந்திக்கிறார்கள். அது ஒரு 2000 ரூபாய் நோட்டு நடுரோட்டில் கிடக்கும் தருணம். அதை இந்த நான்கு பேருமே எடுக்க முயல்கிறார்கள்.
நான்தான் முதலில் பார்த்தேன் என்று இவர்களிடையே சண்டை வருகிறது. அதற்கு பிறகு சமாதானமாகி இந்த 2000 ரூபாயை ஆளுக்கு 500 ரூபாயாக பங்கு போட்டுக் கொள்ளலாம் என்று நினைத்து டாஸ்மாக் கடைக்குச் செல்கிறார்கள்.
அங்கே இவர்களுக்கு ஆரம்பிக்கின்ற பிரச்சனை படம் நெடுகிலும் கடைசியாக வந்து முடியும் அளவுக்கு திரைக்கதையை இழுத்து வைத்திருக்கிறார் இயக்குநர்.
அந்த 2000 ரூபாய் நோட்டும் கள்ள நோட்டாக போய்விட இவர்களை பிடித்து வைக்கும்படி டாஸ்மாக் பாரின் மேனேஜரான யோகிபாபு சொல்ல.. இந்த டாஸ்மாக் பாரின் ஓனரான மொட்டை ராஜேந்திரன் குரூப்பில் இவர்களும் சரண்டராக… மொட்டை ராஜேந்திரனை ஒரு குரூப் கொலை செய்ய வர, கடைசியாக கொலை செய்ய வந்தவர்களும் சேர்ந்து கொலையாக… இந்த மொத்த பழியும் இந்த நான்கு பேர் மீதும் விழுகிறது.
இதிலிருந்து இவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
நண்பர்களாக நடித்திருக்கும் நான்கு பேருக்குமே சம அளவிலான காட்சிகளும், வசனங்களும் கொடுக்கப்பட்டிருப்பதால் அனைவருமே வசனம் பேசி சிரிக்க வைத்திருக்கிறார்கள்.
படம் முழுவதும் வரும் யோகி பாபு தன்னுடைய ஒன் லைன் காமெடிகள் மூலமா அவ்வப்போது சிரிக்க வைக்கிறார். அவருடைய மனைவி சம்பந்தப்பட்ட காமெடி ச்சீ என்றும் சொல்ல வைத்திருக்கிறது.
இவர்கள் மட்டுமில்லாமல், மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, ஜான் விஜய், மாரிமுத்து, மைம் கோபி, சரவண சுப்பையா, மதுசூதனராவ், விடிவி கணேஷ் என்று மிகப் பெரிய நடிகர் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்திருக்கிறது. ஒவ்வொருவரும் ஒரு நாள் கால்ஷீட் மட்டும் கொடுத்திருப்பார்கள் போலிருக்கிறது. அனைவருக்குமே ஒரு கலகலப்பான காட்சி அமைப்பை கொடுத்து லாஜிக் பார்க்காமல் நம்ம சிரிக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.
ஒளிப்பதிவாளர் மாசானியின் ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம். இரண்டு குத்துப் பாடல்களையும் கொஞ்சம் ரசனையாக படமாக்கி வைத்திருக்கிறார்கள். பாடல்களும் பின்னணி செய்யும் ஓகே என்று சொல்லலாம்.
படத்தின் முற்பகுதியில் எப்படி எடிட் செய்வது என்பது தெரியாமல் விட்டுவிட்ட எடிட்டர் இளையராஜா பிற்பகுதியில் கொஞ்சம் கத்திரிக்கோலை கரெக்டாக பிடித்து நறுக்கி படத்தை தொகுத்தளித்திருக்கிறார்.
படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இருக்கும் பத்மநாபன் கொஞ்சம் காமெடி வரும் அளவுக்கு வசனங்களையும், திரைக்கதையையும் அமைத்திருக்கிறார்.
படத்தை இயக்கியதோடு படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காமெடி நடிகர் ஸ்ரீநாத் இதுக்கு முழுக்க முழுக்க காமெடி படம் தான் என்பதை மனதில் வைத்து படத்தை இயக்கியிருக்கிறார்.
இருந்தாலும் இந்த 2025-லிலும் இப்படி ஒரு மொன்னை கதையில் படத்தை எடுத்துக் கொடுக்க வேண்டுமா என்று நாம் யோசிக்க வேண்டி இருக்கிறது.
முதல் பாதியைவிடவும் இரண்டாம் பாதி கொஞ்சம் விறுவிறுப்பாக பயணிப்பதால் இந்தப் படம் தப்பித்தது என்று சொல்லலாம்.
RATING : 2 / 5