full screen background image

விஷாலின் ‘பாயும் புலி’ படத்திற்கு மறைமுகத் தடை – தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் முடிவு..!

விஷாலின் ‘பாயும் புலி’ படத்திற்கு மறைமுகத் தடை – தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் முடிவு..!

‘புலி’யாக இருந்தாலென்ன.. ‘பாயும் புலி’யாக இருந்தாலென்ன..? விநியோகஸ்தர்களையும், தியேட்டர் உரிமையாளர்களையும் பகைத்துக் கொண்டால் படம் தியேட்டருக்கு வராது என்பது யதார்த்தமான உண்மை.

‘லிங்கா’ பட விஷயத்தில் விநியோகஸ்தர்கள் காட்டிய தீவிர போராட்ட முனைப்பில் அவ்வளவாக ஆர்வம் காட்டாமல் இருந்தார்கள் தியேட்டர்காரர்கள். எம்.ஜி. அடிப்படையில் படத்தை வாங்கி வெளியிட்ட இவர்கள் தங்களுக்குத் தர வேண்டிய 3.5 கோடியை எடுத்து வைத்தால்தான் ரஜினியின் அடுத்த படம் ரிலீஸாகும் என்பதையே கடைசி கட்ட போராட்டத்தின்போதுதான் வெளியில் சொன்னார்கள்.

அதற்கு முன்னதாகவே பணத்தை எப்படியும் வசூலித்துவிடலாம் என்று தெம்பாக இருந்ததுதான் அவர்களுடைய லேட்டான போராட்டத்திற்குக் காரணம். அது இந்த ‘லிங்கா’ விநியோக உரிமையில் சம்பந்தப்பட்ட வேந்தர் மூவிஸின் அடுத்த படத்தையும் தடை செய்துவிடலாம் என்கிற நம்பிக்கையில் இருந்தார்கள்.

இந்த நம்பிக்கைக்கு உரம் போட்டதுபோல வேந்தர் மூவிஸ் தயாரிப்பில் நடிகர் விஷால் நடித்திருக்கும் ‘பாயும் புலி’ படம் சிக்கியிருக்கிறது.

இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருக்கிறார். இசை – இமான். ஒளிப்பதிவு – வேல்ராஜ், எடிட்டிங் – ஆண்டனி, இயக்கம் – சுசீந்திரன். இந்தப் படம் வரும் செப்டம்பர் 17-ம் தேதி ரிலீஸாகும் என்று படத்தின் பூஜையன்றே அறிவித்தார் நடிகர் விஷால். 

இன்று காலை சென்னையில் கூடிய தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் கூட்டத்தில் ‘லிங்கா’ படத்தினால் பாதிக்கப்பட்ட திரையரங்குகளின் உரிமையாளர்கள் போர்க்குரல் எழுப்பியிருக்கிறார்கள். சங்கம் இவர்களுக்குக் கை கொடுக்கும்விதமாக வேந்தர் மூவிஸ் ‘லிங்கா’ பட விநியோகத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை சம்பந்தப்பட்ட தியேட்டர்காரர்களுக்கு சரிகட்டவில்லையெனில் ‘பாயும் புலி’ படத்திற்கு எவ்வித ஒத்துழைப்பும் வழங்கக் கூடாது என்று முடிவெடுத்திருக்கிறார்களாம்.

செப்டம்பர் மாதம்தான் ‘பாயும் புலி’ ரிலீஸாகும் என்பதால் இடைப்பட்ட காலத்தில்  பல்வேறு ஏ.சி. மரத்தடி ஹால்களுக்குள் இந்தப் பஞ்சாயத்து நடந்து பிரச்சினை தீர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Our Score