full screen background image

‘வாலு’ படத்தின் வாலுத்தனம் கோர்ட் படியேறியுள்ளது

‘வாலு’ படத்தின் வாலுத்தனம் கோர்ட் படியேறியுள்ளது

இப்போதெல்லாம் கோர்ட் படியேறி தப்பித்து தியேட்டருக்கு வந்தால்தான் அது சினிமா என்று நினைக்கிறார்கள் பொதுமக்கள். ‘வாலு’ படமும் அதற்கு விதிவிலக்கல்ல..

இரண்டு வருடங்களாக படம் ரிலீஸாகாமல் இருக்கும் நிலையில் ‘வாலு’வை இந்த மாதம் கண்டிப்பாக கொண்டு வருவேன் என்று உறுதியாகச் சொன்ன நடிகர் சிம்புவுக்கு புதிய பிரச்சனை கிளம்பியுள்ளது.

மேஜிக் ரேஸ் என்ற நிறுவனம்தான் இந்தப் படத்திற்கெதிராக கோர்ட் படியேறியுள்ளது.

‘வாலு’ படத்தினை தயாரித்துள்ள தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி இந்தப் படத்தின் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் படத்தினை வெளியிடும் உரிமையை வழங்குவதாகக் கூறி தங்களிடம் 10 கோடியை கடனாகப் பெற்றிருப்பதாகவும், கடன் வாங்கும்போது கூறிய உறுதிமொழியை மீறி இப்போது வேறு ஒருவர்(டி.ராஜேந்தர்) மூலமாக படத்தினை வெளியிட முயல்வதாகவும்.. எங்களுக்கு கடனை செட்டில் செய்யாமல் படத்தினை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்று சொல்லியும் அந்த நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

இந்த வழக்கினை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி தயாரிப்பாளர் தரப்புக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

எக்கச்சக்க கடன் பிரச்சினையினால் படத்தை தான் ரிலீஸ் செய்தால் முந்தைய படங்களுக்குரிய பாக்கியை விநியோகஸ்தர்களும், தியேட்டர்கார்ர்களும் கேட்பார்களே என்றெண்ணிதான் படத்தை மொத்தமாக டி.ராஜேந்தரின் கையில் ஒப்படைத்து நீங்களே ரிலீஸ் செஞ்சுக்குங்க என்று சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொண்டார் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி.  வாங்கிய கடன் தொகையை மட்டும் கட்ட மறந்துவிட்டார் போலும்.

அதோடு வரும் ஜூலை 17-ம் தேதி தனுஷின் ‘மாரி’ படத்துடன் போட்டியிட்டு ரிலீஸ் செய்யப் போவதாகவும் அறிவித்திருந்தார்கள். இப்போது நடப்பதையெல்லாம் பார்த்தால் ‘மாரி’ மட்டும் தனித்து வந்து வெற்றி வாகை சூடப் போகிறது போல தெரிகிறது..

“என் பையனுக்கு நல்ல நேரம் ஸ்டார்ட் ஆயிருச்சு. குரு பெயர்ச்சியால் அவன் மேல குரு பார்வை பட்டிருச்சு.. அவன் போகப் போறான் டாப்புக்கு..” என்று டி.ராஜேந்தர் பேட்டியளித்து ஒரு வாரம்கூட ஆகவில்லை. அதுக்குள்ள இந்த நிலைமை..?

நெசமாவே குருவின் பார்வை சிம்பு மேல பட்டிருச்சு போலிருக்கு..!

Our Score