தண்டர் மீடியா கண்மணி ரங்கநாதன் மற்றும் LV என்டர்டேன்மெனட் வெங்கல் எம். லிங்கேஸ்வரன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.
இந்தப் படத்தில் குரு சோமசுந்தரம், அனுமோல், அர்ச்சனா குமார்,
விஜய் விஷ்வா, சாய் விக்கி, நயனா சாய் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – சதீஷ் ஜி,
இசை – கே. கிருஷ்ணகுமார்,
படத் தொகுப்பு – வி.ஜே. சபு ஜோசப்,
கலை இயக்கம் – தாமு,
பாடல்கள் – விவேக், யுகி பிரவீன், சராஜ் சீலன்,
நடன அமைப்பு – ஸ்ரீ கிருஷ், பிரசாந்த்,
ஒப்பனை – கார்த்திக் குமார் மற்றும் குழுவினர்,
ஆடை வடிவமைப்பு – கே. பராஹுல்,
தயாரிப்பு வடிவமைப்பு – லட்சுமி, கிருஷ்ணலட்சுமி & சுப்ரியா டெசிரா
ஸ்டில்ஸ் – சிவா,
ஒலி வடிவமைப்பு – ஹரிஹரன்,
ஒலி கலவை – சிவ் டெக் மெடி,
லைன் புரொட்யூசர் – பாலிக் பார்ட்னர்ஸ் ஸ்டுடியோ,
எக்ஸிக்யூட்டிவ் மேனேஜர் – மனோபாலா கண்ணன்,
பத்திரிக்கை தொடர்பு – ரியாஸ் K.அஹ்மத், பாரஸ் ரியாஸ்,
பப்ளிசிட்டி டிசைனர் – வி.எம். சிவக்குமார்
இணை இயக்குநர் – ஸ்வானி ராஜலிங்கம்
இணை இயக்குநர்கள் – என். சபீர், விக்னேஷ் விஜய ராஜ்
எக்ஸிக்யூட்டிவ் புரொட்யூசர் – பி. சூர்யா பிரகாஷ்,
கிரியேட்டிவ் புரொட்யூசர் – எழில் சத்யா,
இணை தயாரிப்பாளர் – வெங்கல் எம். லிங்கேஸ்வரன்.
தயாரிப்பாளர் – கண்மணி ரங்கநாதன்.
இது கௌரவக் கொலைகள் பற்றிய திரைப்படம்தான். ஆனால், கொஞ்சம் வித்தியாசமான திரைக்கதையில் சொல்லியிருக்கிறார்கள்.
குரு சோமசுந்தரம் அரசு மருத்துவராக இருந்து தன் வேலையை ராஜினாமா செய்து விட்டு இப்பொழுது ஒரு மிகப் பெரிய மருத்துவமனையில் கன்சல்டிங் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
இவருடைய மனைவியான அனுமோல், முற்போக்கு சிந்தனை கொண்டவர். அம்பேத்கர், பெரியார் வழியில் நடப்பவர். சமூக சேவகி.
இவர்களது ஒரே மகள் அர்ச்சனா தற்சமயம் அமெரிக்காவில் இருக்கிறார். அவருக்கு அங்கேயே ஒரு காதலனும் இருக்கிறார். அவர் விஜய் விஷ்வா.
ஒரு மெடிக்கல் கான்பரன்ஸூக்காக பாரிஸ் வருகிறார் குரு சோமசுந்தரம். அங்கே இருக்கும் ஒரு கஃபேவிற்கு காபி குடிப்பதற்காக செல்கிறார் குரு. அந்தக் கடையில் நிறைய புகைப்படங்களை சுவரில் மாட்டி இருக்கிறார்கள். அதில் ஒரு புகைப்படத்தை பார்த்தவுடன் திடுக்கிடுகிறார் குரு.
அந்தப் புகைப்படத்தை எடுத்தவரை நேரில் சென்று சந்திக்கிறார். அவர் சொன்ன விஷயத்தை கேட்டு இன்னமும் அதிர்ச்சியாகும் குரு, அந்த அதிர்ச்சியான மனநிலையிலேயே சென்னை திரும்புகிறார்.
சென்னையில் அந்தப் புகைப்படம் பற்றிய நினைப்பிலேயே இருக்கிறார் குரு. அனுமோல் இது பற்றி அவரிடம் கேட்கும்பொழுது அரசு மருத்துவராக இருந்த பொழுது நடந்த உண்மையை மறைக்காமல் சொல்லிவிடுகிறார்.
குரு அரசு மருத்துவராக வேலை பார்த்த பொழுது இளம் காதலர்கள் இருவரை கௌரவக் கொலை செய்துவிட்டார்கள்.
அவர்கள் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்பதை போஸ்ட்மார்ட்டம் மூலம் தெரிந்து கொள்ளும் குரு, போஸ்ட் மார்ட்டின் அறிக்கையிலும் அவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவே எழுதிக் கொடுக்கிறார்.
ஆனால், அவரது உயர் அதிகாரிகளும், போலீஸ் உயரதிகாரிகளும் சேர்ந்து குருவை மிரட்டுகிறார்கள். அவருடைய குடும்பத்தினரை இல்லாமல் செய்து விடுவதாக மிரட்டுகிறார்கள்.
இதனால் பயந்து போன குரு உண்மையை வெளியில் சொல்லாமல் அந்த இருவருமே தற்கொலை செய்து கொண்டதாக மாற்றி எழுதிக் கொடுத்து உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க வைத்துவிட்டார்.
தன்னுடைய குற்ற உணர்ச்சியால் இதை தன் மனைவி அனுமோலிடம் சொல்லிவிடுகிறார் குரு. இதைக் கேட்ட அனுமோல் மிகுந்த கோபம் கொண்டு குருவிடம் இருந்து பிரிந்து தனியே சென்று வாழ்கிறார்.
இதை அறியும் மகள் அர்ச்சனா தன்னுடைய காதலன் விஜய் விஸ்வாவையும் அழைத்துக் கொண்டு சென்னை திரும்புகிறார்.
அம்மாவுக்கும், அப்பாவுக்கும் ஏற்பட்டிருக்கும் பிரிவை நினைத்து வருந்தும் மகள் இவர்கள் இருவரையும் சேர்த்து வைப்பதுதான் தன் முதல் வேலை என்று அதற்கான பணிகளில் இறங்குகிறார்.
அதே நேரம் அனுமோலோ அந்த வழக்கை திரும்ப ரீ ஓப்பன் செய்து கௌரவக் கொலை செய்தவர்களுக்கு தண்டனை வாங்கித் தர வேண்டும் என்று விடாப்பிடியாக இருக்கிறார்.
இதன் பின்பு என்ன நடந்தது? குருவும் அனுமோலும் இணைந்தார்களா? கௌரவக் கொலையைச் செய்தவர்கள் தண்டனை பெற்றார்களா? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
கண்டிப்பான அரசு அலுவலராக இருக்கும் குரு தன் குடும்பத்தின் மீதும் அளவற்ற பாசம் வைத்திருக்கிறார். குடும்பமா? சட்டமா? என்று பார்க்கும் பொழுது குடும்பம்தான் முக்கியம் என்று முடிவெடுக்கும் ஒரு சாதாரண எளிய மனிதனாக தன்னுடைய கேரக்டர் ஸ்கெட்ச்சில் மிக இயல்பாக நடித்திருக்கிறார் குரு.
போஸ்ட்மார்ட்டம் செய்யக் கோரும் இன்ஸ்பெக்டரிடம் கேஸ் டைரியை கேட்டு வாங்கி பார்த்து அவர் காட்டும் கண்டிப்பும், அதிகார தோரணையும் ஓ இவர் போலீசுக்கு பயப்படாதவரோ என்று எண்ணத் தோன்றியது.
ஆனால் சில காட்சிகளுக்கு பின்பு போலீஸ் கமிஷனர் குருவைக் கூப்பிட்டு மிரட்டும் பொழுது அப்படியே அடிபணிந்து வேறு வழியில்லாமல் ரிப்போர்ட்டை மாற்றி எழுதிக் கொடுத்துவிட்டு வெளியேறும்போது குருவின் நடிப்பு வேறு ரகம்.
இந்தக் குருவைப் போன்றவர்கள் இந்தியாவில் மட்டுமல்ல; உலகம் எங்கும் எல்லா இடங்களிலுமே இருக்கிறார்கள். ஒரு சாதாரண பொது ஜனம். அவ்வளவுதான். அந்தக் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பையே காண்பித்து இருக்கிறார் குரு.
பாரிசில் அந்தப் புகைப்படத்தை பார்த்துவிட்டு அதிர்ச்சியோடு இருக்கும் குரு, அதே அதிர்ச்சியோடு விகல்பமே இல்லாமல் தன் மனைவியிடம் நடந்ததை சொல்லும் தன் அப்பாவி குணத்தையும் அழகாகக் காட்டியிருக்கிறார்.
ஆனால் மனைவியின் திடீர் எதிர்ப்பையும், பிரிவையும் சமாளிக்க முடியாமல் தான் சிறைக்கு சென்றாலும் பரவாயில்லை; நான்காண்டு சரி தண்டனை என்றாலும் பரவாயில்லை; குடும்பம் சிதறக் கூடாது. தன் மனைவி தன்னுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அனைத்திற்கும் சரி, சரி என்ற ஒத்துக் கொள்ளும் அந்தக் கணத்தில் குருவை நமக்கு மிகவும் பிடித்துப் போகிறது.
பெரியாரின் பேரிளம் பெண்ணாக நடித்திருக்கும் அனுமோல் ஒரு பக்கம் சமூக சேவை முதலிடம் என்றாலும் இன்னொரு பக்கம் தன் கணவரின் நிலைமையும் யோசிக்காமல் அவர் செய்தது தவறு என்று சொல்லிவிட்டு பிரிந்து செல்வது திரைக்கதையில் பெரும் இடரலாக இருக்கிறது.
ஆனால், தன் நடிப்பில் குறையில்லாமல் செய்திருக்கிறார் அனுமோல்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சார்பாக அனுமோல் பேசுவதிலும், குரல் கொடுப்பதிலும் தன்மையாக அமைதியாக தன்னுடைய நடிப்பை காண்பித்திருக்கிறார் அனுமோல்.
இவருடைய மகளாக நடித்திருக்கும் அர்ச்சனாவும் அர்ச்சனாவின் காதலனாக நடித்திருக்கும் விஜய் விஷ்வாவும் திரைக்கதையை நகர்த்துவதற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள்.
மேலும் இறந்து போன காதல் ஜோடிகளாக நடித்திருக்கும் சாய் விக்கி மற்றும் நயனா சாய் இருவரின் காதல் காட்சிகள் அதிகமாக இல்லை என்றாலும் திருமணம், அதைத் தொடர்ந்து அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள்… இறுதியில் படுகொலைகள் என்று அந்த போர்சனில் தங்களுடைய கடினமான உழைப்பையும், நடிப்பையும் கொடுத்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சதீஷ் அமெரிக்க மற்றும் பாரிஸ் காட்சிகளை புளூமேட் மூலமாக எடுத்திருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.
இந்த 2026-லும் இப்படி படம் எடுத்தால் எப்படிங்க சார்? படம் பார்ப்பவர்கள் சிரிக்க மாட்டார்களா? எவ்வளவோ டெக்னாலஜி வளர்ந்திருக்கிறது?! இன்னமும் கொஞ்சம் நம்பும்படியாக கிராபிக்ஸ் காட்சிகளை அமைத்திருக்கலாம்.
பாடல் காட்சிகளில் மான்டேஜ் ஷாட்ஸ்களை அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
இசையமைப்பாளர் கே-வின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் அதிகம் கூச்சல் இல்லாமல் மென்மையாக கையாண்டு இருக்கிறார்.
நல்லா இருந்த ஒரு குடும்பம் நடுத்தெருவுக்கு வந்த பின்பு ஒரு கொலையை பற்றி விஸ்தாரமாக பேசுகின்ற திரைக்கதையில் கொஞ்சம் முன், பின்னாக இருந்தாலும் குழப்பமே இல்லாமல் கடைசிவரையில் கொண்டு சென்று இருக்கிறார் படத் தொகுப்பாளர் சாபு ஜோசப்.
கௌரவக் கொலைகளை கண்டிக்கின்ற அதே சமயம் ஒரு ஜனநாயக விரோத செயல்கள் நடந்தால்.. ஒரு கெட்டவைகள் நடந்தால்… அதற்கு முதல் எதிரியே அவைகளைப் பார்த்த பின்பும் அமைதியாக இருக்கும் நல்லவர்களின் செயல்கள்தான்!
ஒரு நல்லவனின் மௌனமே கெட்டவர்கள் சுதந்திரமாக திரிவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது.
இதனால்தான் அனுமோல் கணவரைவிட்டு பிரிந்து வந்து அந்தக் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர முயல்கிறார் என்பதாக இயக்குநர் திரைக்கதை எழுதியிருக்கிறார்.
ஆனால் மிக மிக நல்லவரான தன் கணவர் சொல்லுகின்ற அந்தக் கடந்த கால கதையை மனதில் வைத்து ஒரு மனைவி சட்டென்று கணவரை தூக்கிப் போட்டுவிட்டுப் போவதைத்தான் நம்ப முடியவில்லை.
இது இயக்குநர் சார்ஜ் சீலன் எழுதியிருக்கும் திரைக்கதையில் ஒரு சறுக்கல் என்று சொல்லலாம்.
இதற்குப் பதிலாக தன் கணவருடன் இணைந்து இந்த வழக்கை மீண்டும் ரீ ஓபன் செய்து, நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுப்பதாக திரைக்கதை அமைத்திருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும்.
இயக்குநர் தன் விருப்பத்திற்கு ஏற்ப கௌரவக் கொலைகள் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருமே தாங்களே முன்வந்து சாட்சி சொல்ல வருவதுபோல திரைக்கதை அமைத்திருப்பது படத்தின் முடிவை மிக எளிதாகி விட்டது. ஆனால் லாஜிக்கை தொலைதூரத்திற்கு தள்ளிவிட்டது.
இயக்குநரின் எண்ணவோட்டம் சரிதான். ஆனால் எழுதிய திரைக்கதைதான் நம்ப முடியாதது ஆகிவிட்டது.
ஆனாலும் அரசு அதிகாரிகளும், அலுவலர்களும் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை இந்தப் படம் மூலமாக இயக்குநர் முன் வைத்திருக்கிறார்.
அதற்காகவே இந்த இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள்.
RATING – 3 / 5









