full screen background image

“இப்போது ஓவர் பில்டப்பில்தான் படங்களை எடுக்கிறார்கள்” – இயக்குநர் R.V.உதயகுமார் பேச்சு

“இப்போது ஓவர் பில்டப்பில்தான் படங்களை எடுக்கிறார்கள்” – இயக்குநர் R.V.உதயகுமார் பேச்சு

ஸ்ரீதில்லை ஈசன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராமு முத்துசெல்வன் தயாரித்து, நடித்துள்ள படம் ‘முன்னா.’ இப்படத்தை சங்கை குமரேசன் இயக்கி இருக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவில் பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

நடிகர் விக்னேஷ் பேசும்போது, “வி.சேகர் சாரின் படம் ரஜினி சார் படத்திற்கு சமமாக ஓடும். நான் ஆர்.வி.உதயகுமார் சாரின் பெரிய ரசிகன் நான். இவர்கள் எல்லாம் இந்தப் படத்தைப் பாராட்ட வந்திருப்பதைப் பார்க்கும்போது சந்தோசமாக இருக்கிறது. இந்த விழாவிற்கு என்னை தம்பி புவன் அழைக்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப்படத்தின் தயாரிப்பாளர் உள்ளிட்ட அனைத்து கலைஞர்களுக்கும் எனது அன்பான வாழ்த்துகள். அவமானங்கள் இல்லாமல் வெற்றியில்லை. இனி நல்ல நல்ல படங்கள் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது…” என்றார்.

தயாரிப்பாளர் பெப்சி சிவா பேசும்போது.. “இந்த நிகழ்ச்சி உண்மையிலே சந்தோசமாக இருக்கிறது. திருப்பியும் சினிமா புத்துணர்ச்சியோடு நடை போடத் துவங்கி இருக்கிறது. அதற்கு ‘மாஸ்டர்’ படம்தான் பெருங்காரணம். தியேட்டரில் சினிமா பார்ப்பதுதான் ரசிகர்களுக்கு கிடைக்கும் பெரிய சந்தோசம். அதை ‘மாஸ்டர்’ படம் உறுதி செய்துள்ளது. அதுபோல இந்த ‘முன்னா’ படமும் வெற்றியடைய வாழ்த்துகள்..” என்றார்.

இயக்குநர் வி.சேகர் பேசும்போது, “இந்த ‘முன்னா’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். கொரோனாவிற்கு பின் நான் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி இதுதான்.

ஒரு வெற்றிப் படத்திற்கு நல்ல  கதையும், இயக்குநரும்தான் தேவை என்பது மறுக்க முடியாத உண்மை. ஒரு படம் எடுக்கும்போதே பல பேருக்கு வேலை கிடைத்து விடுகிறது. அந்த வகையில் ஒரு தயாரிப்பாளர் படம் வெளியாகும் முன்பே பலரை வாழ வைக்கிறார். இப்போதைக்கு சின்னப் படங்கள்தான் நிறைய பேர்களை வாழ வைக்கிறது.

பெரிய படங்கள் ஆலமரம் என்றால்ஸ சிறிய படங்கள்தான் நெல் போன்றவை. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தயாரிப்பாளர்களையெல்லாம் ‘முதலாளி’ என்றுதான் எப்போதும் அழைப்பார். அதுதானே உண்மை. ஒரு முதலாளியை மதிக்கிற துறைதான் மிக, மிக முக்கியம். பெரிய படம் அளவிற்கு நமது சின்னப் படங்களும் ஓட வேண்டும் என்றால் நாம் பெரிய படங்களைவிட அதிகமாக உழைக்க வேண்டும். அந்த வகையில் இந்தப் படம் நன்றாக வந்திருக்கும் என்று நம்புகிறேன்.. படக் குழுவினரை வாழ்த்துகிறேன்..” என்றார்.

இயக்குநர் ஆர்.வி உதயகுமார் பேசும்போது, “இந்த ‘முன்னா’ படத்தின் இயக்குநர், நடிகர், நடிகையர், தயாரிப்பாளர் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள். இந்தக் கொரோனா கால கட்டத்தில்  150  நாட்களுக்கு மேல் சாப்பாடு இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த உதவி இயக்குநர்களுக்கு சாப்பாடு போடுவதற்கு இயக்குநர்கள் சங்கத்தில் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தோம். அப்போது நடிகர் விக்னேஷ் எங்களுக்கு பெரிய உதவிகளைச் செய்தார்.

நாம் ஒற்றுமையாக இருந்தால் எதையும் சாதிக்கலாம். ரஷ்யாவின் புரட்சிக்குக்கூட சினிமா ஒரு உதவியாக இருந்தது. நாம் இனி அறிவுப்பூர்வமான சிந்தனைகளை சினிமாவில் கொண்டு வரணும். இப்போதெல்லாம் ஓவர் பில்டப்பில்தான் படங்களை எடுக்குறார்கள்.

நேர்மையாக படம் எடுக்க வேண்டும். நேர்த்தியாக படம் எடுத்தால் எப்படி ஓடாமல் போகும்..? நம் ரசிகர்கள் சரியான படங்களை நிச்சயமாக ஓட வைப்பார்கள். உழைப்புக்கு முன்னுரிமை கொடுங்கள். இந்தப் படத்தை எதையும் எதிர்பார்க்காமல் எடுத்திருக்கிறார்கள். இப்படியான தைரியம்தான் நிறைய பேர்களை உருவாக்கி இருக்கிறது. அதுபோல் இந்த இயக்குநரையும் பெரிதாக உருவாக்கும்” என்றார்.

படத்தின் இயக்குநரும், நடிகருமான சங்கை குமரேசன் பேசும்போது, “இருக்குறதை வைத்து எடுத்த படம்தான் இது. தயாரிக்கும்போது எங்களுக்கும் மற்றவர்களைப் போல நிறைய ஏமாற்றங்கள் கிடைத்தன. ஆனாலும், சொன்னது போல படத்தைத் துவங்கினோம்.

காரைக்குடி அருகே சுற்றி, சுற்றி 34 நாட்களில் படத்தை எடுத்து முடித்தோம். இந்தக் கதையில் நிறைய விசயங்கள் பேசப்பட்டிருக்கு. அதனால் கதை நாயகனாக என்னையே நடிக்கும்படி சொன்னார்கள்.

இந்தப் படத்தின் கதை ‘இருக்குறதை வைத்து நிம்மதியாக வாழ வேண்டும்’ என்ற ஒரு வரிதான். மனதுக்கு நிம்மதியான வாழ்க்கைதான் நல்ல வாழ்க்கை. அதேபோல், ‘எதற்காகவும் கலங்கத் தேவையில்லை’ என்ற கருத்தையும் படத்தில் சொல்லியிருக்கிறோம்…” என்றார்.

இறுதியில் சிறப்பு விருந்தினர்கள் இசை தட்டை வெளியிட படக் குழுவினர் பெற்றுக் கொண்டனர்கள்.

Our Score