“நான் பேயாக நடித்தாலே அந்தப் படம் நன்றாக ஓடுகிறது” என்று நடிகை நிக்கி கல்ரானி சொல்கிறார்.
இயக்குநர் ராம்பாலாவின் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, நிக்கி கல்ரானி, மயில்சாமி, ரவி மரியா, ஆனந்த்ராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் இடியட். இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில்தான் நடிகை நிக்கி கல்ரானி இவ்வாறு பேசினார்.
நிக்கி கல்ராணி பேசும்போது, “இத்தனை மாதம் கடந்து அனைவரையும் சந்தித்ததில் சந்தோஷம். கொரோனா காலத்தில் ராம்பாலா சார் அழைத்து இந்த வாய்ப்பை பற்றி சொன்னார். இந்தப் படத்தின் அனுபவமே சிறப்பாக இருந்தது.
போன வருடம் கொரோனா காலத்தில் உலகமே மன அழுத்தத்தில் இருந்தபோது நான் இந்த படக் குழுவினருடன் மகிழ்ச்சியாக இருந்தேன். மயில்சாமி, ஆனந்த்ராஜ், மனோகர், மிர்ச்சி சிவா அனைவருடனும் நடித்தது சந்தோஷம். இப்படத்திற்கு ராஜா அட்டகாசமாக ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஓடிடியில் மிக எளிமையாக விற்றுவிடும் வாய்ப்பு இருந்தும், தியேட்டரில் ரசிகர்கள் ரசிக்க வேண்டுமென, இப்போது தியேட்டரில் வெளியிடும் தயாரிப்பாளருக்கு நன்றி. ஏற்கனவே ‘டார்லிங்’, ‘மரகத நாணயம்’ படங்களில் பேய் கேரக்டர் செய்துள்ளேன். அந்தப் படங்கள் மிகப் பெரிய வெற்றி பெற்றது. அதே போல் ‘இடியட்’ படமும் மிகப் பெரிய வெற்றியைப் பெறும். இந்தப் படம் உங்கள் அனைவரையும் சந்தோஷப்படுத்தும்…” என்றார்.