“எங்க படக் குழுவிலேயே மிகப் பெரிய ‘இடியட்’ எங்க இயக்குநர்தான்” என்று ‘இடியட்’ படத்தின் இயக்குநரான ராம்பாலாவை பொது மேடையிலேயே கலாய்த்தார் நடிகர் மிர்ச்சி சிவா.
மிர்ச்சி சிவா, நிக்கி கல்ரானி, மயில்சாமி, ஆனந்த்ராஜ், ரவி மரியா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘இடியட்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்றைக்கு நடந்தது. இந்த நிகழ்ச்சியில்தான் நடிகர் மிர்ச்சி சிவா இப்படி பேசினார்.
நடிகர் மிர்ச்சி சிவா பேசும்போது, “இரண்டு வருடங்கள் கடந்து எல்லோரையும் பார்ப்பதில் மகிழ்ச்சி. இந்தக் கொரோனா மக்களுக்கு நிறைய கற்றுக் கொடுத்துவிட்டது. கொரோனா உச்சக்கட்டத்தில் இருந்த நேரத்தில் ராம்பாலா சார் இந்தப் படத்தைப் பற்றி சொன்னார். ஆனால், அப்படிப்பட்ட நேரத்திலும் அனைவரையும் ஒன்று சேர்த்து படத்தை துவக்கிவிட்டார் தயாரிப்பாளர் சுந்தர். அவரது வாழ்க்கைக் கதையைக் கேட்டால் பிரமிப்பாக இருக்கும். ஒளிப்பதிவாளர் ராஜா எப்போதுமே சிரித்த முகமாக இருப்பார்.
நிக்கி கல்ராணி போல அர்ப்பணிப்பு கொண்ட நடிகையை, பார்க்க முடியாது. ஒரு காட்சியில் அவர் டெட் பாடியாக நடிக்க வேண்டும். ஆனால், அதற்கே நிறைய டவுட் கேட்டார். அந்தளவு சீரியஸான நடிகை அவர்.
நடிகர் ஆனந்த்ராஜ் உலகத்தில் எதை பற்றி வேண்டுமானாலும் அவரிடம் பேசலாம் ஆனால் நடிப்பில் அசத்திவிடுவார். மயில்சாமி பிரமிப்பு தரும் மனிதர். தமிழ்நாட்டில் உள்ள சிவ ஆலயங்களுக்கு, அவர் செய்யும் கொடைகள் பெரிது. அவரிடம் எனக்கு பெரிய மரியாதை உள்ளது.
டீம் கேப்டன் நன்றாக இருந்தால்தான் எல்லோரும் நன்றாக இருக்க முடியும் எங்கள் டீமிலேயே பெரிய ‘இடியட்’ ராம்பாலா சார்தான். உண்மையிலேயே அவரின் உழைப்பு அவர் அமைக்கும் காட்சிகள் எல்லாமே அட்டகாசமாக இருக்கும். இன்னும் நிறைய படங்கள் அவர் செய்ய வேண்டும்.
“தியேட்டரில்தான் இந்தப் படத்தை வெளியிட வேண்டும்” என்றார் தயாரிப்பாளர். அவரின் நம்பிக்கைக்கு நன்றி.
எல்லா பேய் படங்களிலும் ஒரு பேய் எப்போதும் இருட்டில், மியூசிக்கில் நம்மை பயமுறுத்தும். ஆனால் அது இந்தப் படத்தில் இருக்காது. அதனால்தான் இந்தப் படத்தை ஒப்புக் கொண்டேன். படத்தின் ரகசியத்தை சொல்லிவிட்டேன். ஆனாலும், இந்தப் படம் உங்கள் அனைவரையும் சந்தோஷப்படுத்தும்…” என்றார்.