தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் விதித்திருந்த புதிய படங்கள் திரையிடப்படாது என்கிற வேலை நிறுத்தம் கைவிடப்பட்டதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான விஷால் தெரிவித்துள்ளார்.
இன்று மதியம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் தமிழ்த் திரையுலக பிரமுகர்கள் நடத்திய பேச்சு வார்த்தைக்குப் பின்பு 2 சதவிகித கேளிக்கை வரியை குறைத்துக் கொள்ள அரசு சம்மதம் தெரிவித்தது. இதன்படி தமிழக அரசு விதித்த 10 சதவிகித கேளிக்கை வரி 8 சதவிகிதமாக குறைத்துவிட்டது. இதனால் தயாரிப்பாளர் சங்கத் தலைவரான விஷால் இந்த ஸ்டிரைக் அறிவிப்பை வாபஸ் பெற்றார்.
இதேபோல் திரையரங்குகளின் நுழைவுக் கட்டணமும் உறுதி செய்யப்பட்டுவிட்டது.
இதன்படி மல்ட்டிபிளக்ஸ் தியேட்டர்களில் குறைந்தபட்ச கட்டணமாக 50 ரூபாயும், அதிகப்பட்சமாக 150 ரூபாயும் இருக்கும்.
மல்ட்டிபிளக்ஸ் தியேட்டர்களில் 18 சதவிகித வரியான 42 ரூபாய், 8 சதவிகிதமான உள்ளூர் கேளிக்கை வரியான 12 ரூபாயையும் சேர்த்தால் மொத்தமாக 204 ரூபாய் கட்டணமாகிறது. இணையத்தளத்தில் புக் செய்தால் அதற்குத் தனிக் கட்டணமாகும்.
குறைந்தபட்ச கட்டணமாக 50 ரூபாயுடன், 18 சதவிகித வரியான 9 ரூபாயும், 8 சதவிகிதமான உள்ளூர் வரியாக 4 ரூபாயைும் சேர்த்து 63 ரூபாய் கட்டணமாகும்.
ஏசி வசதியுள்ள தியேட்டர்களில் குறைந்தபட்ச கட்டணமாக 40 ரூபாயும், அதிகப்பட்சமாக 100 ரூபாயும் இருக்கும்.
இதன்படி பார்த்தால் 18 சதவிகித வரியான 18 ரூபாயும், 8 சதவிகிதம் உள்ளூர் கேளி்க்கை வரியான 8 ரூபாயையும் சேர்த்தால் 126 ரூபாய் வரும்.
குறைந்தப்பட்ச கட்டணமான 40 ரூபாயுடன் 18 சதவிகித ஜி.எஸ்.டி. வரியான 7.20 காசுகளும், 8 சதவிகித உள்ளூர் வரியாக 3.20 காசுகளையும் சேர்த்து 50 ரூபாய் 40 காசுகள் வரும்.
ஏசி வசதி இல்லாத தியேட்டர்களில் குறைந்தப்பட்ச கட்டணமாக 30 ரூபாயும், அதிகப்பட்சமாக 80 ரூபாயும் இருக்கும்.
இதன்படி பார்த்தால் 18 சதவிகித வரியான 14.40 காசுகளும், 8 சதவிகிதம் உள்ளூர் கேளிக்கை வரியான 6.40 காசுகளை சேர்த்தால் 100 ரூபாய் 80 காசுகள் வரும்.
குறைந்தப்பட்ச கட்டணமாக 30 ரூபாயுடன் 18 சதவிகிதம் வரியான 5.40 காசுகளும், 8 சதவிகித உள்ளூர் கேளிக்கை வரியான 2.4 காசுகளையும் சேர்த்தால் 37.80 காசுகள் வரும்.









