நந்தினி நாயர். வயது 26. திருமணமானவர். மலையாள மனோரமா டிவி சேனலில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். தொலைக்காட்சி துறையில் பல வருட அனுபவம் உள்ளவர்.
சென்ற ஜூன் மாதம் ஒரு நாள் அவரை பேஸ்புக் சாட்டிங் மூலம் தொடர்பு கொண்டார் சீதாலன் என்ற சினிமா தயாரிப்பாளர்.
தான் ஒரு படத்தைத் தயாரிக்கப் போவதாகவும், இதனை பிரபல மலையாள இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரூஸின் உதவியாளர் ஒருவர் இயக்கப் போவதாகவும் கூறியிருக்கிறார்.
படத்தில் மொத்தம் 5 கதாநாயகிகள் எ்ன்றும் அதில் ஒருவராக நந்தினியை நடிக்க வைக்க தான் விரும்புவதாகவும் கூறியிருக்கிறார். முதலில் மகிழ்ச்சியடைந்த நந்தினி படத்தில் உடன் யார், யார் நடிக்கிறார்கள்..? யார் இயக்குநர் போன்ற தகவல்களையெல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கிறார்.
படத்தில் சீனிவாசன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாகவும், கூடவே Vinay Fort, Sreenath Bhasi போன்றவர்களும் நடிக்கவிருப்பதைச் சொல்லியிருக்கிறார் சீதாலன்.
கடைசியாக தயாரிப்பாளர் சீதாலன், நந்தினியின் வயது, அவருக்குத் திருமணமாகிவிட்டதா என்பதையெல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்ட பின்பு, தன்னுடன் அட்ஜஸ்மெண்ட்டுக்கு வர வேண்டும் என்று சாட்டிங்கிலேயே கேட்டிருக்கிறார். மேலும் படத்தில் நடிக்க நந்தினிக்கு 5 லட்சம் ரூபாய் சம்பளமாக தருவதாகவும் கூறியிருக்கிறார்.
உடனேயே அதே சாட்டிங்கிலேயே தனக்கு அந்தப் படத்தில் நடிக்க விருப்பமில்லை என்று சொல்லி அவரை பிளாக் செய்தும்விட்டார் நந்தினி நாயர்.
இதோடு விடவில்லை நந்தினி. மறுநாளே இந்தச் செய்தியை தனது பேஸ்புக் தளத்தில் சாட்டிங் ஆதாரத்தோடு வெளியிட்டு மலையாள சினிமாவுலகம் இது போன்ற தவறுகளை தட்டிக் கேட்க வேண்டுமென்றும், இவர் போன்ற தயாரிப்பாளர்களை துரத்தியடிக்க வேண்டும் என்றும் தைரியமாக போஸ்ட் செய்திருக்கிறார்.
மேலும் இது போன்ற அழைப்பு அவருக்கு இது இரண்டாவது முறையாம்.. கடந்த மார்ச் மாதம் பெண்ணுரிமை தினமான 8-ம் தேதியன்று யாரோ ஒரு புதிய இயக்குநர் ஒருவர் நடிகர் பாலாவின் புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்க இவரை அழைத்திருக்கிறார். அப்போதும் அந்த இயக்குநர் இதே போன்ற அட்ஜெஸ்ட்மெண்ட் கோரிக்கையை வைத்தாராம். நந்தினி முடியாது என்று மறுத்துவிட்டாராம்..
“அப்போது முதல் முறை என்பதால் விட்டுவிட்டேன். ஆனால் இந்த முறை இதை அப்படியேவிட எனக்கு மனசில்லை. இதைப் பார்த்தாவது நான்கு பேர் தைரியம் வந்து இது போன்ற ஆள்களை வெளிப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தில்தான் இதனை வெளிப்படுத்தினேன்…” என்கிறார் நந்தினி நாயர்.
மலையாளத் தயாரிப்பாளர் சங்கம் சம்பந்தப்பட்டவரை தடை செய்திருப்பதோடு அவர் படமெடுக்காமல் பார்த்துக் கொள்வதாகவும் கூறியிருக்கிறதாம்..!
இது போன்ற நான்கு பேர் வெளிப்படையாக பேச ஆரம்பித்தாலே அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்காகவே படமெடுக்க வரும் கிரிமினல்கள் குறைவார்கள்..!