தமிழ்த் திரையுலகில் எல்லாரும் திருட்டு டிவிடியை பத்தியே காது கிழியற அளவுக்கு பேசுறாங்களே ஒழிய.. அதே திருட்டு டிவிடியில் ஆங்கில மற்றும் வேறு வெளிநாட்டு படங்களை பார்த்து காப்பியடித்து தாங்களே சொந்தமாக சிந்தித்து எழுதியது போல ஏமாற்றி திரைக்குக் கொண்டு வந்து காண்பிக்கும் தமிழ்த் திரை இயக்குநர்களை பற்றி எதுவுமே சொல்வதில்லை.
ஹாலிவுட் மற்றும் வெளிநாட்டு படங்களிலிருந்து காப்பி என்பது தமிழ்த் திரையுலகில் ரொம்ப காலமாக நடந்து வருவதுதான்.. ஆனால் இப்போது அது அதிகமாகியிருக்கிறது.. இணையம் மூலமாக உலகமே இணைந்துள்ளதால் இப்போதைய சினிமா ரசிகர்களால் உடனுக்குடன் இது பற்றி அறிந்து கொள்ள முடிகிறது.
‘Across The Hall’ என்ற திரைப்படம் ஹாலிவுட்டில் 2009-ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தை அப்படியே காப்பி செய்து 2013-ம் ஆண்டு ‘உன்னோடு ஒரு நாள்’ என்ற தமிழ்ப் படம் வெளியானது. அப்போதே இது பற்றி மீடியாக்கள் எழுதிவிட்டன.
இதன் பின்பு இந்தாண்டு ஜனவரி மாதம் ‘நேர் எதிர்’ என்ற திரைப்படமும் இதே ஆங்கில படத்தைக் காப்பியடித்து வெளிவந்தது.. இந்தப் படம் ‘உன்னோடு ஒரு நாள்’ ரிலீஸாகும்போது தயாரிப்பில் இருந்ததால் தவிர்க்க முடியவில்லையாம்..
சரி.. இதோடு நிறுத்தியிருக்கலாம். இப்போது இன்றைக்கு வெளியாகியிருக்கும் ‘கபடம்’ படமும் இதே ஆங்கில படத்தின் அப்பட்டான காப்பிதான்..
ஏற்கெனவே 2 திரைப்படங்கள் இதே கதையில் வெளியாகிவிட்டாலும், ‘தயாரித்தாகிவிட்டது.. திரையிட்டே ஆக வேண்டும்’ என்பதால் வேறு வழியில்லாமல் டைட்டிலில், ‘Across The Hall’ படத்தின் பெயரைக் குறிப்பிட்டு ‘இதன் இன்ஸ்பிரஷன்தான் இந்த கபடம் திரைப்படம்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இந்த ஹாலிவுட் படத்தின் தயாரிப்பாளருக்கோ, கதாசிரியருக்கோ இப்படி 3 தமிழ்ப் படங்கள் தங்களது படத்தை காப்பி செய்து வெளியாகியிருப்பது இப்போதுவரையில் தெரியாது என்று நினைக்கிறோம்..!
கூடிய விரைவில் வெளிநாட்டு இயக்குநர்களும் தங்களது படத்தை திருட்டு டிவிடியில் பார்த்து காப்பியடிக்கும் தமிழ் இயக்குநர்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம்..!